சிறுகதை: 3 “சிந்தனை கொலை!”

How To Break Cell Phone Addiction - Safeguarde

அனல் நிறைந்து பரவிக் கொண்டிருக்கும் பின் காலை பொழுதிலே, ஏதோ காற்றின் கருணை தழுவுதலால் சற்று உயிர் வாழ்ந்து கொண்டு, சாளரம் ஓர இருக்கையில் சிறிது சோர்வாகவே அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தேன், சென்னை மாநகராட்சி அரசு பேருந்தில். சிவப்பு நிற ஒளி விளக்கின் கட்டாயத்தினால் சில மணி துளிகள் களைத்து போய், நின்ற வண்ணம் இருந்தது பேருந்து.

நகரவாசிகளுக்கு மட்டுமே பழக்கமான, சலசலப்பு கூடிய சத்தப் பேரணிகள்… வியர்வையும் வெறுப்புமாய்… காதுகளில் பேரொலியுமாய், அசைவற்ற நிலையை எங்குமே காணமுடியாத தருணத்தில், மனித கூட்ட நெரிசலில் ஓரமாய் நின்றவாறு எதையோ ஆர்வமாய் தேடிக் கொண்டிருந்த அந்த சிந்தனைகள் பொங்கி எழுந்த இரண்டு சிறிய கண்மணிகளை காண நேர்ந்தேன். எதை தான் தேடிக் கொண்டிருக்கின்றன இவை இரண்டும். எத்தனை சீரிய சிந்தனை தழல்கள் இவளை சுற்றிலும். இன்னமும் எத்தனையோ கேள்விகள் இச்சிறு மழலை மாறாத கண்களில். வானத்தை நோக்கினாள், சற்று கீழே இடதுபுறமாகவும் பார்த்தாள், வலது பக்கம் கேட்ட சத்தத்தினையும் திரும்பி பார்த்தாள். இன்னமும் விடை கிடைக்காத கேள்விகள் பலவற்றை, தன் சிறுகண்களில் சுமந்து கொண்டு நின்றிருந்தாள். அவளின் மலர் பொதிந்த முகத்தை பார்க்கும் போது, அவளின் கேள்விக்கெல்லாம் விடையை கேட்டு வாங்க வெகு நேரம் காத்து கொண்டிருப்பது போல தோன்றியது எனக்கு.

நவீன நகரப்பகுதியிலே, அங்கும் இங்கும் சத்த நெரிசலிலே, உலகை கற்றுக் கொள்ள காத்திருக்கும் சின்னஞ்சிறு உயிராய் கால்கடுக்க நின்றிருந்தாள் அவள், தன் தாயின் கைகளை பத்திரமாக பிடித்துக் கொண்டு. நாகரீக முதிர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும், அதிகாரபூர்வ அடையாளமாய் தோற்றம் அளித்தார் அச்சிறுமியின் தாய். மரபு மாறாது தன் மகளுக்கும் அவ்வாறே தோற்றம் கொடுத்திருந்தார் அந்த நவீன தாய். இவ்வாறு ஐந்து வயதினை உடைய உருவம் கொண்ட தன் மகளை தனது இடது கையினால் கவனமாய் சற்று கடினமாய் பிடித்து வைத்திருந்தார். அதைவிட கவனமாய் தனது வலதுகை விரல்கள் தன் விலையுயர்ந்த கைப்பேசியை பதம் பார்த்துக் கொண்டிருந்தது. சில நொடிக்கு ஒருமுறை தன் குழந்தையை இறங்கி பார்த்து விட்டு மீண்டும் கைப்பேசியுடன் உரையாடலில் இணைந்தது அந்த நவீன தாயின் கண்களும் சிந்தனையும்.
இருவரும் வெகு நேரமாக காத்திருப்பது போல் தெரிந்தது எனக்கு.

இச்சிறு மழலை மனதில் எத்தனையோ சந்தேகங்களும், கேள்விகளும் மாறி மாறி தோன்றி மறைந்து கொண்டிருப்பதை நன்றாகவே கணிக்கமுடிந்தது என்னால். அவளின் மழலை முகத்தினின்று சிதறி கொண்டிருந்த சிந்தனைகளாக என்னால் சிலவற்றை யூகிக்க முடிந்தது. அவை,
நகரம் ஏன் கூட்டமாக இருக்கிறது என கேட்க நினைத்திருப்பாளோ? ஏன் சிலர் நடந்தும், சிலர் கார்களிலும், சிலர் இருச்சக்கர வாகனங்களிலும், சிலர் பேருந்துகளிலும் செல்கிறார்கள், ஏன் இத்தனை வேறுபாடுகள் என எண்ணிக் கொண்டிருக்கிறாளோ? எதற்காக இந்த அண்ணன்கள் படிகளில் தொங்கிக் கொண்டு போகிறார்கள் என நினைத்திருப்பாளோ? ஏன் டிக்கெட் கொடுக்கும் அன்கிள் கத்திக் கொண்டிருக்கிறார், எல்லாம் எங்கு தான் செல்கிறார்கள் என சிந்தித்தாளோ? டிராஃபிக் போலிஸ் ஏன் கை அசைக்கிறார்… ஏன் சிவப்பு விளக்குக்கு எல்லா வண்டிகளும் கொஞ்ச நேரம் நின்று செல்கின்றன என எண்ணினாளோ? ஏன் அனைவரும் கடுகடுவென கோப முகத்தில் இருக்கிறார்கள், இவர்கள் எல்லாம் சிரிக்க மாட்டார்களா? ஏன் எல்லோரும் செல்போன் பார்த்து கொள்கிறார்கள் அம்மாவை போல, அப்படி தான் நானும் பார்க்க வேண்டுமா?

இன்னமும் எத்தனை எத்தனையோ கேள்விகள், ஆனால் விடைகள் கிடைக்காமல், மரணித்துக் கொண்டிருந்தன அவளின் கேள்விகளும், சந்தேகங்களும். அவள் ஏன் தன் தாயிடம் கேட்டறிய எந்த முயற்சியும் எடுக்கவில்லை என எனக்கு கேள்வி எழுந்தது. ஒருவேளை கேட்டு இருந்திருக்கலாம், அவளின் தாய் கைப்பேசியுடன் ஆழ்ந்த உரையாடலில் இருந்த காரணத்தினால் அவளின் சிந்தனை கேள்விகள் தாயின் செவிகளுக்கு சென்றிடாமல் இருந்திருக்கலாம். அவள் ஓர் நவீன தாயின் மகள் அல்லவோ, ஒருவேளை இதனை தானே புரிந்து கொண்டு, தனக்குத்தானே சிந்தனை மட்டுமே செய்துக் கொண்டிருந்தாள் போல.

சிவப்பு நிற ஒளி விளக்கு பச்சை நிறத்திற்கு மாறவே, மெதுவாக நகர்ந்தது, களைப்பில் நின்றிருந்த, நான் பயணிக்கும் பேருந்து, சில கடினமான ஒலிகளுடன். நான் அந்த சிறிய உள்ளத்தின் சிந்தனைகள் வீணாகிப்போன கசப்பு நிறைந்த காட்சியுடன் கடந்து சென்றேன், என் நினைவுகளையும் என்னோடு எடுத்துக் கொண்டு. பாவம், கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடனும், ஆசைகளுடனும் பல்வேறு பரந்த சிந்தனைகளை தனக்குள்ளேயே புதைத்து கொண்டும், இன்னமும் பல கேள்விகளின் பாரத்தை தன் விழிகளில் சுமந்து கொண்டும், தாயின் கையை இறுகப் பிடித்த வண்ணம், அங்கேயே நின்று கொண்டிருந்தாள். அவளின் சிந்தனை திறனும், விடை தேடும் ஆர்வமும் அங்கேயே சிறிது சிறிதாக தன்னைத் தானே கொன்று கொண்டிருந்தன.

ஒரு நவீன உலகில், நவீன மக்களின் நவீன பழக்கவழக்கங்கள் நவீனமாய் நவீனமயமாக ஒருபக்கம் வளர்ந்துக்கொண்டே, மற்றொரு பக்கம் மனிதனின் அறிவு முதிர்ச்சிக்கு முக்கிய காரணமாய் இருக்கும் சிந்தனை திறனையும், சிறிது சிறிதாக கொலை செய்து கொண்டிருந்தது…
“சிந்தனை கொலைகளாய்”
எதனையும் அறியாமல் நம்மை நாமே நவீனமயமாக்கிக் கொண்டே நாமும் பழியேற்கிறோம்…
“சிந்தனை கொலையாளிகளாய்!”…

படைப்பு: லூயிசா மேரி சா

1 thoughts on “சிறுகதை: 3 “சிந்தனை கொலை!”

பின்னூட்டமொன்றை இடுக