சிறுகதை 6 : “டீக்கடைக்குப் போலாமா?”

“டீக்கடைக்குப் போலாமா?”
ஓய்ந்து தீர்ந்த மழையில் நனைந்து தீர்ந்த துணிகளை சலிப்புடன் காயவைக்க முயற்சித்து கொண்டிருந்த தன் மனைவியிடம் மெல்லிய குரலில் கேட்டான்.

“டீக்கடைக்கு? இந்த மழையில? ம்ம்ம்!”
என்றபடி மீண்டும் வேலையை தொடர்ந்தாள் அவள்.

“நான் உன்ன டீக் குடிக்க கடைக்குப் போலாமா னு கேட்டேன்!”
என்று மீண்டும் வினவினான்.

“இப்போ எதுக்கு டீ கடைக்குப் போகனும்? வீட்லயே பால் இருக்கு, டீத்தூள் சர்க்கரை இருக்கு, டீப் போட்டுத் தர நானும் இருக்க! வேணும்‌ னா நீங்கக் கூட டீப் போட்டு குடிங்க! இதுக்கு எதுக்கு டீக்கடைக்கு?”
என்றபடி எழுந்து சமையல் அறைக்கு விரைந்தாள்.

விரைவாக அவனும் எழுந்து அவளை மறித்து, “ஐயோ! டீக் கடைனு சொன்ன வெறும் டீக்கடை இல்லமா!” என்று அவன் கூறி முடிப்பதற்குள்…

“ம்ம்ம்! சார் ஏதோ கத சொல்லப் போறீங்க… சரி சொல்லுங்க சார்!” என்று நின்றாள்.

“ம்ம்ம் கதையா?” என்று சற்று இழுத்து பேசுவது போன்று அவளின் அருகில் சென்று விவரிக்க துவங்கினான் அவன், “அமைதியான சாயங்கால நேரம்… இப்போதைக்கு எந்த வேலையும் நமக்கு இல்ல… மழை விட்டு ரோடெல்லாம் ஈரமா இருக்கு… ரொம்ப நாள் அப்பறம் மழை வருது, மண் வாசனையும் கூட வருது… நல்லா சில்லுனு காத்து… அப்பப்போ அதுக்கூட தெளிக்குற சாரல்… பூ, இலையில எல்லாம் நீர்த்துளி… மழையில நனஞ்சிட்டு சிறக உலர்த்திக்கிற பறவைங்க… இப்படி ஒரு குளிர்ச்சியான கிரீனிஷ் மொமண்ட்(Greenish Moment) இருக்கு… இந்த அழகான நேரத்தில… நீயும், நானும்…
நானும் நீயும் மட்டும் தான்!
எப்படியும், இங்க இருந்து டீக் கடைக்கு போக அட் லீஸ்ட் இருபது நிமிஷம் ஆகும்… அதோட, நம்மல யாருமே கவனிக்க போறது இல்ல… நாம‌ மட்டும் தான்! நமக்கே தெரியாம, நமக்கு நாமே கொடுத்துக்கிற நமக்கான டைம்… யாரும் பார்க்க மாட்டாங்க, நான் உன் கையப் பிடிச்சு…‌ நீ என் கையப் பிடிச்சுகிட்டும்… தெரிஞ்சும் தெரியாமலும், என் தோள் உன்ன இடிக்கும்… கொஞ்ச நேரம் கழிச்சு உன் தோள் என்ன இடிக்கும்…

இப்படியே நீயும் நானும் போகும் போது, இவ்வளவு நேரம் மழைக்கு ஒதுங்கி இருந்த முன்பின் தெரியாத பறவைக் கூட்டம், மாலை நேரத்தில வீட்டுக்கு திரும்பி போகும், அந்த பறவையெல்லாம் உன்னையும் என்னையும் பார்த்து சிரித்துக் கிண்டல் செய்யறது போல நமக்கு தோனும்… நீ, அந்த ‘V’ வடிவ(shape) பறவைக் கூட்டம் வானத்தில பறக்குறத பார்த்திட்டு… ஏதோ அதிசயத்த பார்த்தது போல ஆச்சரியமா என்னையும் பார்க்க சொல்லுவ… நானும் அத பார்த்திட்டு அப்படியே திரும்பி உன்ன பார்த்து ஒரு சின்ன ஸ்மைல் பண்ணுவேன்… நீயும் உடனே என்ன பார்த்து சிரிப்ப… போற வழியெல்லாம் எங்கெல்லாம் மரக்கிளை நம்ம தலைக்கு மேல இருக்கோ, அதையெல்லாம் இழுத்து அசைச்சு உன் மேல மழைத் தண்ணிய கொட்டி விடுவேன்… நீயும் என்மேல தெளிப்ப…

இப்படியே, டீக் கடைக்கு போய் ரெண்டு டீ சொல்லிட்டு, நான் உன் பக்கத்துல வந்து நிற்பேன்… ஏற்கனவே பெய்த மழையின் தாக்கமா, பக்கத்து மரத்துல இருக்க இலையெல்லாம், அடிக்குற குளிர் காத்துல, மழைத் தண்ணிய நம்ம ரெண்டு பேரு மேல பூ மாதிரி தூவி விடும்… உடனே நீ சிணுங்கி அப்படியே என் முழங்கைய இருக்கி பிடிச்சிக்குவ… குளிர்ந்த காத்துல… இனிமையான மாலை நேரத்துல… டீக்கடை ரேடியோல மழைக்கு அப்படியே பொருந்துற மாதிரி ஒரு அழகான பாட்டு ஓடிட்டு இருக்கும்… அங்கங்க ஈரம் சொட்டிக் கொண்டிருக்கும்…

“என்ன ஒரு அழகான நேரம் இது!” அப்படின்னு நீ சொல்லும் போது… நானும் “ம்ம்ம் ஆமா!” னு தலைய அசைப்ப… அப்போ,
“தம்பி! டீ எடுத்துக்கப்பா…” னு இன்னொரு குரல் கேட்டதும், நான் போய் ரெண்டு டீ -ய வாங்கிட்டு வந்து ஒன்ன உன் கிட்ட தருவேன்… அந்த டீ தீர்ந்து போறதுக்கு முன்னாடி, நீயும் நானும் ஒரு குட்டி வாழ்க்கைய வாழ்ந்து முடிச்சிடுவோம்…

மறுபடியும் வீட்டுக்கு அதே போல வருவோம்! யாருக்கு தெரியும் இன்னமும் நெறைய அழகான இனிமையான நிகழ்வுகள் கூட நடக்கலாம்‌…
அதான், டீக் கடைக்கு போலாம் வா! னு கூப்பிட்ட…

சரி சரி! இதெல்லாம் நான் ஏன் உன் கிட்ட சொல்லிட்டு இருக்கேன்!
போ… போய் டீ போடு! வீட்லயே குடிச்சிக்கலாம்!”
என்று விவரித்துவிட்டு மீண்டும் சென்று அமர்ந்து கொண்டான்.

“டீப் போடவா?” என்று கூறியபடி அருகில் வந்தாள்.

“ஆமா! நீதான டீப் போட போன… பால் இருக்கு, டீத்தூள் சர்க்கரை இருக்கு, டீப் போட்டுத் தர நீயும் இருக்க… வெளியில மழை வேற பெய்யுது… போமா! போய் சீக்கிரம் டீப் போட்டுத் தா!” என்றபடி அருகில் இருந்த புத்தகத்தை எடுத்து படிக்க துவங்கினான்.

“ம்ஹூம்! அதெல்லாம் முடியாது…” என்று புத்தகத்தை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டாள்.

“முடியாதா? அப்புறம் என்ன பண்ணப் போறீங்க மேடம்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

“வாங்க டீக் கடைக்கு போலாம்!” என்று சற்று மெதுவான குரலில் அழைத்தாள்.

கணவன் சத்தம் போட்டு சிரித்துக் கொண்டே, “ம்ம்ம்… சரி வா! டீக் கடைக்கு போலாம்…” என்றதும்

இருவரும் அந்த அழகு நிரம்பிய அமைதியும் இனிமையும் ததும்பிய மங்கிய மழைக்கால மாலை பொழுதினிலே இருவருக்குமான நேரத்தில் மெதுவாக நுழைந்து மூழ்கிப் போயினர்.
மழை நின்றிருந்தது… மேகங்கள் நகரத் துவங்கின… குளிர்ச்சி சூழ்ந்தது… தணிந்து போன சாலைகளில், அவர்களின் வாழ்க்கையின் அழகிய மணித்துளிகளில் நனைந்து போகத் துவங்கினர் இருவரும்.

மழையின் போது தேநீர் இனிமையா?
அல்லது
தேநீர் கோப்பைச் சேரும் மழைக்காலம் இனிமையா?

இன்னமும் தீர்மானிக்க முடியவில்லை நம்மால்…
இதுபோன்ற, நாம் நம் வாழ்வில் அனுபவித்திராத அழகிய மணித்துளிகளை யாருக்கும் சொல்லாமல் இந்த உலகம் தன்னகத்தே ரகசியமாய் புதைத்து வைத்திருக்கிறது. அதனைத் தேடி கண்டு அனுபவிப்பதே நம் வாழ்வில் அர்த்தம் சேர்க்கும். அதுவே வாழ்க்கையின் வெற்றியும் கூட… இதுபோன்ற அழகான தருணங்கள் கணவன் மனைவி இடையே மட்டுமல்ல… எந்த ஒரு உறவுக்கும் ஆழமாக பொருந்தும். பெற்றோர் பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள் என… எந்த உறவுக்குள்ளும் எளிதில் பொருந்திக் கொள்ளும்… இதுபோன்ற தருணங்களை அனுபவிக்க தெரிந்திருந்தால் மட்டும் போதுமானது.

தேநீர், மழை போன்ற இனிமைகள் மட்டுமல்ல…
தேனினும், மழலையினும் இனியான இன்பத்துளிகள் அளவுக்கு அதிகமாக பரவிக் கிடக்கும் உலகமிது!
தேடினால் காணமுடியும்!
ஆம் தேடுவோர் மட்டுமே காணமுடியும்!
வாழ்வில் மகிழ்ச்சிகளை தேடுவோராய் வாழ்வோம்!


படைப்பு: லூயிசா மேரி சா

பெறுநர் இல்லா கடிதம்! பாகம்-1

A close photo of a persons writing a letter with a pencil.

முன்னுரை:

கடிதம், மன்னர் கால ஓலைச்சுவடி துவங்கி இன்றைய மின்னஞ்சல் வரை பல தலைமுறைகளை ஆட்சி செய்து கொண்டு வருகின்ற மாபெரும் இணைப்புக்கருவி. கடிதத்தின் மூலம், நாம் நினைக்கும் ஒருவருடன் நம்மை இணைத்துக் கொள்கிறோம். கடிதம், உண்மையில் உள்ளத்துடன் நெருங்கி, மனதினை வருடி, சிந்தையையும் சற்று தொட்டு, எழுத்துக்களின் வழி நின்று உணர்வுகளை
வெளிக்கொணரும் ஒரு அழகிய செயல்முறை.

ஒருவர், எளிதில் வார்த்தைகளை வாயினின்று பேசி விடலாம். ஆனால், எழுத்து என்பது நேரம் எடுத்துக் கொள்ளும் ஓர் நீண்ட செயல்முறை. நம்மில் தோன்றும் உணர்வுகளுக்கு ஓர் உருவம் கொடுக்கும் படைப்பையே கடிதங்கள் என்று சொல்லலாம். இன்றைய கால சூழலில் கடிதங்கள் குறுகி, சமூக வலைத்தளங்களின் Short Messages & Comments ஆக மாறிப்போய் இருந்தாலும், ஏதோ ஒரு வகையில் இவை கடிதங்களின் குறுகிய வடிவில் உள்ளன என ஆறுதல் கொள்ளலாம். 

மேலும் பழமையையும், பழமையின் ஆழத்தையும் நாம் அவ்வபோது திரும்பிப் பார்ப்பது முக்கியமானதாகவே உள்ளது. நம் சமூகத்தில் கடிதம் இன்னமும் முக்கியமான இடத்தினை தான் பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு சிறு ஆதாரம், இப்போதும் கூட அலுவலக செயல்பாடுகளுக்கு
நாம் கடிதங்களையே பயன்படுத்துகிறோம். 

இலக்கியங்களை புரட்டிப் பார்த்தோம் எனில் பல தலைமைகளின் கடிதங்கள் தனக்கென தனி இடம் பெற்று உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை ஜவஹர்லால் நேரு அவரது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய 30 கடிதங்கள். அது மட்டுமின்றி காரல் மார்க்ஸ், அம்பேத்கர், ஆபிரகாம் லிங்கன், காந்தியடிகள், பகத்சிங், அண்ணா மற்றும் பல இலக்கியவாதிகளும், தலைவர்களும் கடிதங்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். மேலும் உலகம் முழுதும் பல வரலாற்றுத் தத்துவங்களும், புரட்சி முழக்கங்களும், சமூக சீர்த்திருத்தங்களும் இந்த கடிதங்கள் வழி பரிமாறப்பட்டவை என எண்ணிப்பார்க்கும் போது, நமக்கும் கடிதங்கள் உணர்வுகளை பரிமாற, எண்ணங்களை வெளிப்படுத்த உதவும் என்பதில் ஐயமில்லை.

‘பெறுநர் இல்லா கடிதம்!’ வழி எனது மனதின் சிறு உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முயற்சித்து இருக்கிறேன். கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன…

பெறுநர் இல்லா கடிதம்!

கடிதம் ஒன்று இருந்தால், அதற்கு அனுப்புநர் இருக்க வேண்டும். பெறுநரும் இருக்க வேண்டும், அந்த பெறுநருக்கு இருப்பிடம் என்று ஒன்று இருக்க வேண்டும். ஆனால் இந்த கடிதத்திற்கு பெறுநர் இல்லை, இருப்பிடம் இல்லை காரணம், அவர் இவ்வுலகில் எங்குமே இல்லை. இது பெறுநர் இல்லாத கடிதம்.

அப்பா! உனக்கு தான் இந்த கடிதம்.

அன்பாயிருந்த அப்பாவுக்கு,

சில கடினமான ஆண்டுகளுக்கு பிறகு, நாங்கள் நலம். அப்பா! நீ எங்களை பிரிந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டன. ஏனோ தெரியவில்லை, இத்தனை ஆண்டுகள் இல்லாத உன் இழப்பின் வலியும், நீ இல்லாமல், வாழ்வின் கடினமும் கடந்த சில நாட்கள் அதிகரித்த வண்ணம்
உள்ளது. நீ எங்களோடு இருந்த நாட்களின் நினைவுகள் அவ்வபோது வந்து கண்களை ஈரமாக்கிப் போகின்றன அப்பா! நீ எங்களுக்கு சிறந்த தந்தையாக இருந்தாய் என்பதை நாங்கள் உறுதியாய் நம்புகிறோம். உனக்கு சில எதிர்மறை பக்கங்கள் இருப்பினும், அவை எல்லாம் இப்போது நினைவுக்கே வருவதில்லை, நீ எங்களுக்கு தந்த ஒவ்வொரு அன்பும், அரவணைப்பும், பக்கத்துணையாய் நின்ற ஒவ்வொரு பொழுதும், ஆழமாய் மனதினுள் பதிந்துக்கிடக்கிறது அப்பா! இன்னமும் பதிந்துக் கொண்டே இருக்கிறது.

ஒருவேளை நீ இப்போது எங்களுடன் இருந்திருந்தால், எங்கள் வாழ்க்கை முழுமை அடைந்திருக்கும் போல தோன்றுகிறது அப்பா! எங்களின் படிப்பு, வேலைக் குறித்து நீ கேட்டு அறிய வேண்டும், அதனுடன் நாங்கள் பெற்ற ஊதியத்திலிருந்து உனக்கு செலவு செய்ய வேண்டும் போன்ற ஆசைகள் பெருகுகிறது…

நான் பிறந்த போது உன் உணர்வு என்னவாக இருந்திருக்கும் என்று எனக்கு தெரியாது. நான் தவழ்ந்து வளர்ந்த போது, நீ எனக்கு என்னவெல்லாம் செய்தாய் என்று நினைவில்லை, ஆனால் எனக்கு நினைவு துவங்கிய நாட்கள் முதல், நீ எனக்கு சிறந்த தந்தையாகவே இருந்திருக்கிறாய். அவற்றை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்க்கும் போது, ஒருவேளை இன்று நாங்கள் அனுபவிக்க இயலாத பல மகிழ்ச்சிகளை நீ எங்களுக்கு தந்திருப்பாய் போல அப்பா! ஆனால், அப்படிப்பட்ட அழகான நாட்கள் எங்களுக்கு அமையவில்லை, உன் இடத்தில் எங்களுக்கு வேறு
யாருமில்லை. 

உன் திறமைகளை நினைக்கும் போதெல்லாம், நான் வியந்து போனதுண்டு அப்பா! எனக்கு உன்னை முதன்முதலில் ஓர் மாபெரும் தச்சுக் கலைஞனாகவே தெரியும். இன்றும் கூட யாரெனும் ஒரு தச்சரையோ, மரவேலை செய்வோரையோ பார்க்கும் போது, உன் நினைவுகள் மரத்துகள்களைப் போன்று மனதின் மீது பதியும். அது அத்தனை மகிழ்ச்சி தரும். உன்னை போன்ற ஓர் நிழல், இடது கையில் உளியும் வலது கையில் சுத்தியலும் என, நீ செய்த அதே வேலையை செய்வதை பார்க்கும் போது, பெருமகிழ்ச்சியாக இருக்கும்.

எங்கேயாவது, சுத்தியல், உளி, ரம்பம், போன்ற தச்சுக் கருவிகளை பார்க்கும் போதெல்லாம், நீ கையோடே வைத்து திரிந்துக் கொண்டிருந்த உன் Tool Bag நினைவுக்கு வரும். நீ, ஒருவரையும் அந்த பையை நெருங்க விட்டதில்லை. உன் தச்சுக்கருவிகளின் மீது உனக்கு அதீத அன்பு. அதனுடன், நீ புதிதாக வாங்கிய மூன்று மின் கருவிகளை (Electronic Machines) எனக்கு நினைவிருக்கிறது அப்பா! ஒரு பெரிய பச்சை நிற நெகிழிப் பெட்டியினுள் மூன்று இயந்திரங்கள். அவற்றை ஆர்வமாய் எங்களுக்கு திறந்துக் காட்டி, ஒவ்வொன்றும் என்ன என்பதையும், என்னென்ன வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதையும், விவரித்தாய் நீ, கண்களில் அத்தனை மகிழ்ச்சிகளுடன். எல்லாவற்றையும் எங்களுக்கு எடுத்து காட்டினாய் ஆனால், ஒருபோதும் எங்களை கருவிகளை தொட்டுப் பார்க்க அனுமதித்ததில்லை. மேலும் நீ வீட்டில் இல்லாத நேரம், நாங்கள் அதை எடுத்து விளையாட மறந்ததில்லை.

உன்னுடைய வேலை செய்யும் இடம் (Workshop) எனக்கு அதிகம் பிடித்த இடம் அப்பா! அது உனக்கு தெரியாது. அந்த அறைக்குள், இருக்கும் உன் கைகளாலே செய்யப்பட்ட, பெரிய மற்றும் சிறிய மேசைகள், அவற்றின் அமைப்பு, அவற்றின் Drawers அதனுள் இருக்கும் சிறு சிறு பொருட்கள், அலமாரியில் இருக்கும் பாதி தீர்ந்து போனதும், புதிதாக வாங்கியதும் என வரிசைக்கட்டிய பெயின்ட் டப்பாக்கள், வார்னிஷ் பாட்டில்கள், என அறைதோறும் வண்ணங்களின் கலை நிகழ்ச்சிப் போலிருக்கும்.

உன்னிடத்தில் ஒரு தங்க நிறம் போன்ற Chemical Solution இருக்கும். அது ஒரு வகை ஒட்டும் கம் (Gum). ஒவ்வொரு முறையும் புதிய டின் (Tin) வாங்கும் போதெல்லாம் அந்த டின்னுக்குள் இருக்கும் குட்டி ஆச்சரியத்தை காணும்படி, எங்களை அழைப்பாய். நாங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு உன்
பக்கத்தில் வந்து அமர்ந்துக் கொள்வோம். நீ அந்த டின்னின் மேற்ப்பகுதியினை ஒரு சிறிய Screw Driver கொண்டு திறந்து, அதனுள் இருக்கும் வழவழப்பான Chemical Solution -ஐ மற்றொரு டப்பாவில் ஊற்றிவிட்டு டின்னில் தங்கியிருக்கும் ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து எங்களில் ஒருவருக்கு தருவாய், இன்னொரு Chemical Solution  டின்னையும் காலி செய்து அதனுள் இருக்கும் நாணயத்தை மீதமிருப்பவருக்கு தருவாய், அதிலும் ஐந்து ரூபாய் நாணயம் இருந்தால் நீ தப்பிப்பாய், மாறுதலாக
சிலமுறை இரண்டு ரூபாய் நாணயம் இருந்துவிட்டால் சண்டைக்கு நீ தான் பொறுப்பு. அந்த Chemical Solution  டின்னுக்குள் ஐந்து அல்லது இரண்டு ரூபாய் நாணயங்கள் இருப்பதற்கு காரணம் ஒரு வித தள்ளுபடி என்று எங்களுக்கு வளர்ந்த பிறகு தான் தெரிந்தது, ஆனால் அதை ஒரு Magic போன்று செய்துக் காட்டி எங்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறாய் அப்பா!

உண்மையில் எல்லா அப்பாக்களும் தம்தன் பிள்ளைகளுக்கு, முதன்மை கதாநாயகர்கள் தான். நீயும் எங்களுக்கு அப்படிதான் அப்பா!

உன் வேலை அறைக்குள் ஏற்கனவே பாதி வேலைகள் முடிந்தும், முழுமை அடையக் காத்துக் கொண்டிருக்கும் அறைகலன்கள் (Furniture), நீ பயன்படுத்தும் Carpentry tape, பேனாக்கள் இருக்கும் பெட்டி, அந்த பெட்டிக்குள் இருக்கும் பெரிய மற்றும் தட்டை வடிவ மஞ்சள் நிறப் பென்சில், அது போன்ற பென்சிலை முதலும் கடைசியுமாக உன்னிடத்தில் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். அது ஒரு
வித்தியாசமான பென்சில், கலைத் தொழில் செய்வோர் மட்டுமே பயன்படுத்தும் பென்சில் என்று நீ அடிக்கடி சொல்லுவாய்.

நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது, ஒரு நாள் அந்த பென்சிலை பள்ளிக்கு
எடுத்துச் செல்ல உன்னிடம் கேட்டேன். ஆனால் நீ, அதை நான் பயன்படுத்தக் கூடாது எனக் கடிந்துக் கொண்டாய். ஆனாலும், வழக்கம் போல, உனக்கு தெரியாமல் பென்சிலை பள்ளிக்கு எடுத்துச் சென்று சீன் போட்டது நினைவிருக்கிறது அப்பா! வகுப்பில் அன்று முழுதும் உனது பென்சில் கதை தான். அதே நேரம் அன்று வீட்டில் நீ பென்சிலை தேடியதும் நினைவிருக்கிறது…

அந்த அறையில் மற்றொரு முக்கியமானப் பொருளும் இருந்தது, அது ஒரு சின்ன அலுவலக பயன்பாட்டு டெலிஃபோன் (Telephone), அது உன் நண்பர் ஒருவர் உனக்கு கொடுத்தார் என்று கூறினாய். உண்மையில் அதுவரை டெலிஃபோனை நான் நேரில் பார்த்ததில்லை. கரு நீல நிறத்தில், வெள்ளை நிற பொத்தான்களுடன் (Buttons) கைக்கு அடக்கமாக இருந்தது. அதை எடுத்துக் காதில் வைத்தால் கிர்ர்ர் என்ற ஒலிக் கேட்கும், சற்று வினோதமான அனுபவம். அந்த ஃபோன் நீ வைத்திருந்த Nokia ஃபோன் போன்று இல்லை. எந்த எண்ணை தொட்டு காதில் வைத்தாலும் “எண்ணை சரிப்பார்க்கவும்” என்று கூறும். அதை கேட்க நானும் உன் மூத்த மகளும் பள்ளி விட்டு வந்ததும் மாறி மாறி கேட்டு மகிழ்ந்தோம். அது கம்ப்யூட்டர் குரல் என்பதையே நாங்கள் வளர்ந்த பிறகு தான் தெரிந்துக் கொண்டோம். 

நீ வைத்திருந்த ஒவ்வொரு சிறு சிறு பொருளும் ஒவ்வொரு குட்டிக் குட்டி அற்புதங்கள் போன்று தோன்றிய நாட்கள் அவை. அவற்றை நீ பாதுகாக்கும் விதம், கையாளும் நேர்த்தி, உனது கைகளின் அசைவுகள், உனது Pants பாக்கெட்டில் இருக்கும் இன்ச் டேப் (Inch Tape), சட்டைப் பாக்கெட்டில் இருக்கும் பேனா, மாதிரி வரைப்படங்களின் குறிப்புகள், நீ வேலை செய்யும்போது எடுத்து எடுத்து பயன்படுத்தி, மீண்டும் உனது காதின் மேற்புறத்தில் சொருகி வைக்கும் பென்சில், முந்தைய நாளின் வேலையின் போது, உனது இருக்கரங்களிலும் தற்காலிகமாக குடியேறி இருக்கும், மரத்தின் மேல் பூசப்பட்ட சிவப்பு நிற வண்ணப்பூச்சு, “அப்பா! உன் கையில் மருதாணி” என்று நாங்கள் கேலி செய்து சிரித்த தருணங்கள், ஒவ்வொன்றும் நிலை மாறாமல் நினைவிருக்கிறது அப்பா!

நமக்கு ஆயத பூஜை ஒரு வழக்கமாக இல்லாத போதிலும், உனது ஆயதங்களை மரியாதை செய்து, உன் நண்பர்களுடன் இனிப்பு, பழங்கள் பகிர்ந்து கொள்வாய் நினைவிருக்கிறது அப்பா! அப்படி ஒரு ஆயத பூஜை நாளில், உனது Workshop -னுள் அழையா விருந்தாளியாய் யாரும் இல்லா நேரம் பார்த்து நுழைந்து, பெயின்ட் டப்பாக்கள் அடுக்கி இருக்கும் அலமாரிக்கு சென்று, ஒவ்வொன்றாய்
தொட்டுப் பார்த்தேன். ஆம்! உனது பொருட்கள் மீது எனக்கு ஓயாத ஆர்வம். அதிலும் குறிப்பாக பெயின்ட் டப்பாக்கள் மீது தான். பெயின்ட் டப்பாக்களை வழக்கம் போல் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்த போது, அன்று எதிர்பாரா வண்ணம், அதின் ஒரு வெள்ளை நிற பெயின்ட் டப்பா சரியாக மூடப்படாத காரணத்தினால், என் மீது கொட்டி உடைகளில் வெள்ளை நிறத்தை நிரப்பியது. அன்று, பள்ளி சீருடையை வேறு அணிந்திருந்தேன், உடை முழுமையும் பாழாய் போனது. அப்போது எனக்கு
வந்த அச்சத்தின் அளவை சொல்ல இயலாது, அத்தனை பெரும் பயம் என் உள்ளத்தில்.

அந்த வர்ணஜாலத்தை உன் கண்களில் படாமல், நானே கழுவி விடலாம் என்று அதி புத்திசாலி போன்று எண்ணி, தண்ணீரை ஊற்றி ஊற்றி தேய்த்து கழுவிக் கொண்டிருந்தேன், நிறமும் போனதாய் தெரியவில்லை, நானும் விட்டதாய் இல்லை. பட்டென ஓங்கி விழுந்தது, நடு முதுகில் இடிப் போன்ற ஒரு அடி, உன்னிடமிருந்து தான் அந்த அடி. என்னை கழுவிக் கொள்ள அவசர அவசரமாக ஓடி வந்த நான், அறையில் இருந்த பெயின்ட் டப்பாவையும், கீழே கொட்டப்பட்ட பெயின்ட்டையும் அப்படியே மறந்து வந்து விட்டேன். இந்த வானரத்தனத்தை கட்டாயம் உன் இரண்டாம் மகள் தான் செய்து இருப்பாள் என்று நன்கு அறிந்த வண்ணமாய் வந்து எனக்கு அடியையும் தந்தாய். பின்பு, என்னைத் திட்டிக் கொண்டே நீயே பெயின்ட்டை வார்னிஷ் கொண்டு துடைத்து எடுத்தாய். அன்று, திட்டும் அதிகம், அடியும் அதிகம், வார்னிஷ் எரிச்சலும் அதிகம், பெயின்ட்டும் அதிகம் தான்.

இது போன்ற பல இனிமை ததும்பும் இன்பங்கள் நினைவிருக்கிறது அப்பா! இன்றும் கூட உனது ஒவ்வொரு அசைவுகளும் ஆழ்மனதினுள் தங்கிப் போய் கிடக்கின்றன. உனது விருப்பமான Workshop இன்று இல்லாமல் இருக்கலாம், நீ குழந்தைகள் போன்று பாதுகாத்து வைத்த உனது தச்சுக் கருவிகள் மொத்தமும் காணாமல் போய் இருக்கலாம், உனது தச்சுக் கலை உன்னோடே மறைந்துப் போய் இருக்கலாம் ஆனால், இன்னமும் நினைவுகளாய், பாடங்களாய், அனுபவங்களாய், அக்கரைகளாய், அரவணைப்புகளாய், இன்னமும் இனிமை மாறாமல் எங்கள் இதயங்களில் ஊன்றி கிடக்கிறது அப்பா! இன்றும் கூட ஏதேனும் மரக்கடைகளையோ, தச்சுக்கூடங்களையோ, தச்சர்களையோ, பார்க்கும் போது உன்னுடைய வற்றாத நினைவுகள் எங்களை வந்து நனைத்துப் போகும் …

அப்பா! நீங்கள் எங்களுக்கு தந்தது குறுகியக் கால அனுபவங்களாக இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் எங்கள் வாழ்வின் இறுதி வரை துணை நிற்கும் நீங்கா நினைவுகளாய்
உயிரோடு இருக்கும். 

நினைவிருக்கிறது அப்பா!
நினைவில், என்றும் இருக்கிறது!!

…தொடர்ச்சி அடுத்த பாகத்தில்

படைப்பு: லூயிசா மேரி சா

கட்டுரை 2: “திருமணம் Vs வணிகம்!”

“வரதட்சணை” வரன் + தட்சணை வரனுக்கு கொடுக்கப்படும் தட்சணை (வெகுமதி, பரிசு, உதவிக்கான சன்மானம்) ஆம், இதிலிருந்தே நாம் ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.  இந்த பெயர் காரணமும், பெயர்களும் வடமொழியிலேயே முழுக்க முழுக்க இருப்பதினின்று, “வரதட்சணை” என்ற சொல் தமிழுக்கு சொந்தமில்லை என்பதையும், தமிழர் மரபிற்கு பொருத்தமில்லை என்பதையும் ஆராய்ந்து பார்க்க முடியும்.

“சீதனம்” என்ற சொல் தமிழ் சொல்லாக நமக்கு தோன்றலாம். ஆனால் அதுவும் கூட, ஸ்திரீ(பெண்)+ தனம்(செல்வம்) என்று பிறக்கப்பட்ட வடமொழி சொல் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பண்டைய தமிழர் மரபிலும் பண்பாட்டிலும் இலக்கிய சான்றுகளிலும் கூட பெண்களின் திருமணத்தின் போது, பெண்களுக்கு சீர் செய்யும் வகையாக பொருட்கள் கொடுத்தனரே தவிர, மணமகனுக்கு வெகுமதியாகவோ, பரிசாகவோ கொடுக்க படவில்லை. எடுத்துக்காட்டாக, காப்பிய நூலான ‘சிலப்பதிகாரம்’ கூறும் கோவலன் கண்ணகி திருமண சீர்கள், அவர்களின் பொருள் வளத்திற்கு சான்றாக கூறப்பட்டனவே தவிர, அதனை ஒரு கட்டாயமான வழக்கமாக எங்கும் குறிப்பிடவில்லை ஆசிரியர். அன்றைய கால தமிழ் மக்கள் வரதட்சணை என்ற ஒரு வழக்கத்தை பழகி இருக்க வில்லை என்பதற்கு இலக்கியங்கள் சான்றாகும். இது போன்ற ஒரு வழக்கத்தை தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் சொல்லப்படவில்லை என்பது தெளிவாகிறது.

மற்றுமொரு கருத்து என்னவெனில்,  அன்றைய பெண்களுக்கு சொத்தில் பங்கு இல்லாததின் காரணமாகவும், அப்போதைய பெண்கள் வருமானம் ஈட்டமுடியாத நிலையில் வைக்கப்பட்டு இருந்ததினாலும், பெண்களின் கணவர் இல்லத்தை வேற்று இடமாக உணராமல், தன் இல்லம் போன்று உணரவும் அவர்களுக்கு சீர்வரிசை கொடுக்கப்பட்டது. அப்படி கொடுக்கப்பட்ட பொருட்கள் மீது அந்த பெண்ணே முழு உரிமை செலுத்தும் வண்ணம் பழகி இருந்தனர் அக்கால தமிழ் மக்கள் எனலாம். மேலும், நமது தமிழர் சமூகம் துவக்கத்தில் “தாய்வழி சமூகமாக” இருந்ததினால், பெண்களே அனைத்தின் மீதும் உரிமை உள்ளவர்களாய் இருந்திருக்க வேண்டும், அதன் அடிப்படையில் பெண்களுக்கு பொருட்கள் தந்திருக்க கூடும் என சிந்திக்க முடிகிறது.

Pin on Poetry

இன்றைய வரதட்சணை முறையானது 19 ஆம் நூற்றாண்டில் தான் பரவலாக அறியப்பட்டு வந்திருக்க முடியும். நாமும் அதன்படி வசதிக்கேற்ப வரதட்சணை கொடுத்தும் பெற்றும் வருகிறோம். ஆனால், ஆதி தமிழரிடையே ஆண்களுக்கு வரதட்சணை கொடுக்கும் வழக்கம் இருந்தது இல்லை.

சமீபத்திய செய்திகளை பார்க்கும் போதும், படிக்கும் போதும், வரதட்சணை ஒரு கடுமையான சமூக பிரச்சனையாக, ஒரு கொடுமையான வன்முறையாக உருவெடுத்துள்ளது. இதில், வருத்தம் தரக்கூடியது என்னவெனில், நன்கு படித்த சமூகத்தில் முன்னேறிய நிலையில் அறியப்படும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான். படித்திருந்தாலும் இன்னமும் பெண்களின் உரிமைகள், அவர்களின் கணவர், பெற்றோர், உறவினரின் கைகளில் உள்ளது என்பது சமூகம் இன்னமும் முன்னேற்ற நிலையை அடையவில்லை என்பதை நன்றாக காட்சிப்படுத்துகிறது.

திருமணம் என்பது வணிகச் சந்தை போன்றும், திருமண வீட்டார் வணிகர்கள் போன்றும், வணிக பொருட்கள், விற்பவரிடமிருந்து வாங்குபவருக்கு இடம் மாறுவது போலவும், இறுதியில் வரவு செலவு கணக்கு பார்த்து திருமண பெண்ணை பொருளாக மதிப்பீடு செய்வது என மொத்தத்தில் திருமணம், ஒரு மிகப்பெரிய வியாபாரமாக நடந்து முடிகிறது இன்றைய சமூகத்தில். 

இது போதாது என திருமணம் முடிந்த பிறகும் ஒவ்வொன்றிற்கும் சீர் செய்ய பெண் வீட்டார் நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர். இங்கு பிரச்சனை, பொருள் தருவதோ வாங்குவதோ இல்லை. அது அவரவர் உரிமை சார்ந்த செயல்கள். ஆனால், அதுவே ஒரு சமூகத்தில் முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கப்படும் போது, பொருள் பலம் இல்லாத எளிய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.  தன்னிடம் இல்லாத நிலையிலும், கடன் வாங்கி பெண் பிள்ளைகளின் திருமணங்களை முடித்து வைக்கின்றனர்.  காலம் முழுதும் கடன் தொல்லைக்கு தள்ளப்படுகின்றனர். இது சமூக கொடுமைகளில் ஒன்றும் கூட.

மதிப்பீடு செய்து கல்வியில் கூட பிரிவினை ஏற்படுத்த கூடாது என்று பேசிக்கொண்டிருக்கிறோம்.  ஆனால், அதே மதிப்பீடு தான் இங்கு திருமண சீர் என்ற பெயரில் சமூகத்தை பழுதாக்கி கொண்டிருக்கிறது. அதிகம் எடுத்து வந்த பெண், குறைவாய் எடுத்து வந்த பெண். “அதிகம்” “குறைவு” என்று பேசும் போது, அங்கு ஒரு உயிருள்ள, உணர்வுள்ள, சம உரிமைகள் உள்ள பெண் மற்றும் அவளின் மதிப்புகள் மறக்கப்படுகின்றன. பொருளின் பெயரில், மறைக்கவும் படுகின்றன.

பெண்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் உரிமையை முழுமையாக பெற வேண்டும். பெண்கள், திருமணத்திற்கு முன்பும்,  திருமணமாகி கணவருடன் சேர்ந்து வாழும் போதும், வாழ்வின் எந்த சூழலிலும் தனக்கென்று ஒரு சேமிப்பை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தனது அவசரத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, “சேமிப்பை” தவிர வேறு நல்ல வழி இருக்க வாய்ப்பில்லை.

ஆம், குடும்பத்திற்காக தான் வாழ்கிறோம், குடும்பம் முன்னேற தான் உழைக்கிறோம், குடும்ப நலம் தான் நம் நலம். அதேபோல, நமக்கான நமது சேமிப்பு என்பது நமக்காக நாம் ஏற்படுத்தி கொள்ளும் நலம். அது எந்த வகையிலும் தன்னலமாக ஆகாது. அதுவும் ஒருவகையில் குடும்ப முன்னேற்றம் தான், குடும்ப நலம் தான். பெண்களே தனது முழு வாழ்க்கைக்கும் பொறுப்புள்ளவர்கள் ஆவார்கள். இன்றுவரை இல்லையெனில், இன்றுமுதல் பெண்கள் தனக்கான சேமிப்பை தானே செய்யவேண்டும். இது, திருமணத்திற்கு முன் மற்றும் திருமணத்திற்கு பின் என பெண்களின் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தும். அதன் மூலம் ஒரு பெண் தனது உரிமைகளை தற்காத்துக் கொள்ளலாம்.

வரதட்சணை வாங்குவது எப்படி தகுதியற்ற தன்மையாக பார்க்க படுகிறதோ, அதே போன்று அதனை கொடுப்பதும் தகுதி இழக்கும் தன்மை தான். அது தங்கள் உணர்வுள்ள பெண்பிள்ளைகளை உயிரற்ற பொருட்களுடன் சேர்த்து மூட்டை கட்டி அனுப்புவதற்கு சமம். 

பெற்றோர்களே, நமது பிள்ளைகளின் தகுதியும், திறனும் வாழ்வின் அறநெறிகளின் அடிப்படையில் தான் வகுக்கப்படுகிறது. எனவே, திருமணம் செய்து வைக்கும் பெயரில் வணிகம் செய்ய வேண்டாம். அதற்கு நமது சமூகத்தை பழக்கி விடுவதால், நமது சமூகத்தின் பல பெண்களை பலிகொடுத்து இழப்புகளை சந்திக்கின்றோம். அதற்காக நாம் ஒவ்வொருவரும் ஒருவகையில் காரணமாகிவிடுகிறோம். வரதட்சணையின் பெயரில் இழைக்கப்படும் வன்முறைகளை அடியோடு அழித்து விடும் ஆற்றல், நமது ஒவ்வொருவரிடமும் உள்ளது. இதுபோன்ற தீமைகளை சரிசெய்து, அறம் வளர்த்த தமிழ் மக்களாய் வாழ்வை நெறிப்படுத்தும் இடத்தில் நாம் இருக்கிறோம் என்று சிந்தனையில், உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து வைத்து கொள்வோம்.

சமூக பிரச்சனையான வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் குற்றமே. அந்த குற்றத்தை நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் கம்பீரமாக எதிர்த்து நிற்கிறது. அவற்றை அறிந்திருக்க வேண்டியது நம் ஒவ்வொருவருக்கும் தலையாய கடமையாக உள்ளது.

1961 ஆம் ஆண்டு வரதட்சணை தடுப்புச் சட்டம் (1984 இல் திருத்தப்பட்டது). வரதட்சணை வாங்குபவர்களுக்கு சிறைத் தண்டணைகளை கூடிய கடுந்தண்டணைகளை அளிக்கின்றது.

வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றமாகும்.

1. இக்குற்றத்திற்கு,ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.

2. வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ.10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.

3. வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.

4. ஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498A (IPC Section 498A)

ஒரு பெண்ணை, அவளுடைய கணவன் அல்லது கணவரின் உறவினர்களில் ஒருவர் கொடுமைப்படுத்தினால் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்பட வேண்டும்.

இந்தப்பிரிவில் வரும் கொடுமைப்படுத்துதல் என்ற சொல் தரக்கூடிய பொருள் யாதெனில்;

1. ஒரு பெண்ணைத் தற்கொலை செய்து கொள்ளும்படி தூண்டக்கூடிய அல்லது அவளுடைய உயிருக்கு, உடலுக்கு அல்லது சுகத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு செயலைக் குறிக்கும் (அது உடலுக்கு அல்லது உள்ளத்துக்கு கேடுபயக்கக் கூடியதாகக் கூட இருக்கலாம்)

2. சட்ட விரோதமாக ஒரு சொத்தை அல்லது மதிப்புள்ள காப்பீட்டை அந்தப் பெண் மூலம் அல்லது அவளுடைய உறவினரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பெற வேண்டும் என்பதற்காக அல்லது அப்படி அவளால் அல்லது அவளுடைய உறவினரால் அப்படிக் கொடுக்க முடியவில்லை என்பதற்காக அந்தப் பெண்ணுக்குப் பொறுக்க முடியாத சங்கடங்களை உண்டாக்குவதைக் குறிக்கும்.

இந்திய தண்டனை சட்டத்தில் 1983ல் 498A என்ற பிரிவு இணைக்கப் பட்டு, கணவனும், அவனது உறவினர்களும் மனைவியை உடல் ரீதியாக அல்லது மனரீதியாகக் கொடுமைப் படுத்தினால், 3 ஆண்டுகள் வரை சிறை தண் டனை என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. முதன் முறையாக மன ரீதியான சித்ரவதை என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது. பிறகு 1986ல், 304B என்ற பிரிவு வரதட்சணை சாவு குறித்துக் கொண்டு வரப்பட்டது.

குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டம் என்ன சொல்லப்படுகின்றது என்றால் ஒரு குடும்பத்திற்குள் எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த ஒரு பெண்ணும் தாயோ, மனைவியோ, சகோதரியோ, மகளோ எப்படிப்பட்ட உறவு இருந்தாலும் எந்த ஒரு ஆண் மகனும் அந்த பெண்ணை எந்த வித வன்முறைக்கும் அதாவது உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, சொத்து சம்பந்தமாகவோ எந்த விதத்திலும் அந்த பெண்ணை வன்முறைக்கு ஆளாக்க கூடாது, சித்ரவதை செய்யக்கூடாது, துன்புறுத்த கூடாது.

இத்தனை‌‌ தண்டனை சட்டங்கள் இருந்தாலும், நாம் இன்னமும் பல உயிர்களை வரதட்சணை எனும் தீயில் தள்ளிக்கொண்டு தான் இருக்கிறோம். இப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்வது அவமானத்திற்குரியது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனை ஆழ்ந்து உணர்ந்து மாற்றம் செய்வோம்.

இன்றைய பெண்கள், அந்த கால பெண்களை போன்று இல்லாமல் தனது கணவரின் இல்லத்தின் வருமாத்திற்கும் பங்களிக்கிறார்கள். இன்றைய பெண்கள் அன்றைய பெண்கள் போன்று இல்லாமல், அறிவு பூர்வமாகவும் பங்காற்றுகின்றனர். இன்றைய காலகட்டத்தில், பெண்களின் “அறிவு செல்வம்” அவர்களின், கணவன்மார்களின் வீட்டுக்கு எடுத்து வரும் மாபெரும் கொடையாக கருதவேண்டும்.

திருமணம் என்பதை வெறும் பொருட்களின் இடமாற்றம் என்று எண்ணாமல், பல உணர்வுகளின் ஒருங்கிணைப்பு என்று கருதவேண்டும். உறவுகளே அனைத்திலும் மேன்மையாக மதிக்கப்பட வேண்டும். பொருள்களின் மீதுள்ள முக்கியத்துவத்தை குறைக்க வேண்டும். உறவுகளும் உணர்வுகளும், பெரும் சக்திகளாக திருமண நிகழ்வுகளில் நிறைந்திருக்க வேண்டும்.

இவையெல்லாம் தேவையில்லை, திருமணத்திற்கு “வரதட்சணை” தான் தேவை என்று பிடிவாதம் பிடித்தால், வேறு வழியே இல்லை, அப்படிப்பட்டவர்கள் தாங்கள் திருமணம் செய்யும் தகுதியை இழக்கின்றனர், குடும்பத்தைக் கட்டி எழுப்பும் திறனை இழக்கின்றனர், முக்கியமாக திருமணம் என்ற பெயரில் வியாபாரம் செய்கின்றனர். அவர்களே சமூகத்தை அழிக்கும் கொள்ளை நோய்கள். 

வரதட்சணை தவறான வணிகமாகும்…

அது குற்றமாகும்!

வரதட்சணை குற்றமே!

படைப்பு: லூயிசா மேரி சா

சிறுகதை 5 : “துணி…”

அது ஒரு முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை, ஊரே அமைதி உருவெடுத்து அசையாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தது. சாலைகளும், தெருக்களும், சந்து பொந்துகள், மூலை முடுக்குகள் என எல்லா இடங்களும் முற்றிலும் துடைத்து எடுத்தது போன்று காலியாக இருந்தது. தலைமுறைகள் கேட்காமல் இருந்த சின்ன சின்ன பறவைகளின் சத்தங்களும் விலங்குகளின் ஓசைகளும் ஏன், சிறு சிறு பூச்சிகளின் ரீங்காரங்கள் கூட கேட்கும் வண்ணம் அத்தனை தூய அமைதி. வாகனங்கள் ஓடும் பாதைகளில் நாய் குட்டிகள் படுத்து புரண்டு கொண்டு இருந்தன. பூனைகள் செடிகளின் மீதுள்ள வண்டுகளை நோட்டம் விட்டு கொண்டு இருந்தன. மரச்செடிகளின் இலைகள், கோடை வெப்ப காற்றுக்கு மறுமொழி கூறிக்கொண்டு இருந்தன. அனைத்தும் சற்று மாற்றமாக இருந்தது. உலகமே தன் அனுதின செயல்பாடுகளை மாற்றி கொண்டு இருந்தது.

மனிதரெல்லாம் உயிரை காக்க ஓடி அலைந்து ஒடுங்கி கொண்டிருக்கும் அதே நேரத்தில் இயற்கை மட்டும் அதன் அன்றாட வாழ்வை தொடர்ந்தது. மாற்றமான உலகம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கத்தரி வெயிலின் வெப்பம் தலைகளில் தாக்கம் செய்து கொண்டிருக்க… நான் மட்டும் கொஞ்சம் அதிகமாக தூங்கிவிட்டு,  எழுந்திரிக்கலாமா? வேண்டாமா? என்று சிந்தனையில் ஆழ்ந்திருந்த வேலையில் பளீரென்று கண்ணத்தில் ஒரு அறை விழுந்தது கண்கள் இரண்டும் கூசியது. வேறு யாரும் இல்லை சூரியன் சார் தான், நன்றாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டு என்னையும் கண்ணத்தில் அடித்து எழுப்பி விட்டு வெப்பத்தில் வேக வைத்து கொண்டும் இருந்தார். ஊரடங்கு மே மாதமும் புதிதாய் வாங்கிய அன்ரூல்ட்(Unruled) பேப்பரும் ஒன்று இரண்டிலும் ஒன்றுமேயில்லை வெற்று பக்கங்களை தவிர… வேறு வழியின்றி பிடிக்காத நாளை எப்படியோ கடக்க வேண்டுமே என்று சலித்து கொண்டே விடியலை துவங்கினேன் பட்ட பகலில்.

மதியம் ஆக கொஞ்ச நேரம் மட்டுமே இருக்கும், அப்போது தான் நாளின் முதல் உணவை முடித்து விட்டு மீண்டும் ஓய்வு நிலைக்கு சென்றேன். “இந்தா மா, சோப்பும் சர்ஃபும் வெயிலுக்கு முன்னாடி துவச்சிட்டு, அப்பறம் நல்லா வெயில்ல காய போடு… சீக்கிரம்… வெயிலுக்கு முன்னாடி…” என்றபடி அடுப்பறை நோக்கி நுழைந்தார் என் அம்மா. மூன்று நொடி குழப்பத்திற்கு பிறகு தான் தெரிந்தது, “நாளைக்கு நா துணி துவைக்கிற மா…” என்று நேற்று நான் சொன்னது நினைவுக்கு வந்தது. கொடுமை! இதுவரை என் வாழ்வில் நான் துணி துவைத்ததே இல்லை… (ஆமா, நீங்க நம்பலனாலும் அதான் நெசம்!)

வரலாற்றிலேயே முதன்முறையாக… என்பது போன்று என் துணிகளை நானே துவைக்க போகிறேன். இது ஒரு பெரிய சாதனை கிடையாது தான் (இதுவரை என் துணிகளை நான் துவைத்ததில்லை என்று சொல்வது கூட ஒரு வகை மானகேடு தான்).  பொதுவாக நம் இல்லங்களில் நம் தாய்மார்களின் மற்றுமொரு வீட்டு வேலை இது… அவர்கள் இதையெல்லாம் பெரிதான ஒன்றாக நினைப்பதில்லை, பத்தோடு ஒன்று பதினொன்றாய் வந்து விடும் ஒவ்வொரு தனித்தனி வேலைகளும். அப்படி தான் நாமும் நம் சமூதாயமும் பழகி வருகிறோம். பெண்களின் வேலைகள் ‘வீட்டுவேலை’ அவ்வளவு தான்… அத்தனை சிறியது தான்… ஆனால் நம் வீடுகளில் உள்ள வேலைகளின் எண்ணிக்கையும் அதன் கடினங்களும் சிறு குழந்தை முதல் பெரியவர் வரை நாம் எல்லாருக்கும் நன்கு தெரிந்ததே. ஆனால் அவற்றை வெறும் ‘வீட்டுவேலை’ என்று தான் மொத்தமாக சொல்லி வருகிறோம், அவ்வளவு தான்.

வீட்டின் ஒவ்வொரு வேலையும் தனித்தனியாக பார்க்கப்பட வேண்டும், நம் அலுவலகங்களில் இருப்பது போன்று. தனித்தனி டிபார்ட்மெண்ட், தனித்தனி செயல்முறை, தனித்தனி வேலையாட்கள், தனித்தனி வேலைகள், முக்கியமான ஒன்று அதற்கு தகுந்தாற்போல் தனித்தனி ஊதியம் (Salary). எல்லாமே தனித்தனி வேலைகளாக அளவிடப்பட வேண்டும். அப்போது தான் நமக்கு புரியும் ஒவ்வொரு வேலையும் எத்தனை கடினமென… ஒவ்வொரு வேலையும் எத்தனை மதிப்பானது என…

“இன்னும் ஆரம்பிக்கலயா…?” உள்ளிருந்து ஒரு கேள்வி குரல். “ஹாம்… இதோ போறேமா!” என்றபடி மெதுவாக என்னை நானே தள்ளிக் கொண்டு நகர்ந்தேன். சென்ற வாரத்தில் ஒரு நாள் ரொம்ப நேரமாக என் அம்மா துணிகளை துவைத்து கொண்டிருந்தார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கும் மேலாக, இடைவேளை கூட இல்லாமல். அவருக்கு சிறிய ஆறுதல் அளிக்கும் விதமாக எப்போதும் போல, “நா வேணும்னா துவைக்கட்டுமா மா?..” என கேட்டேன் பாதி அக்கறையுடன், வேண்டாமென எப்போதும் போல மறுத்து விடுவார் என்று நம்பினேன். ஆனால், என் அம்மா என்ன கடுப்பில் இருந்தாரோ தெரியவில்லை, “இப்போ நா துவச்சிட்ட… அடுத்த முறை நீ துவை!” என்று வெறுப்பில் சொன்னார் குரலை உயர்த்தி. கேட்டவுடன் பதில் வந்தது வழக்கத்திற்கு மாறான வார்த்தைகளுடன்… எப்போதும் நானே வேலை செய்ய கேட்டாலும் என் அம்மா மறுத்து விடுவார். இம்முறை மறுக்கவில்லை சொன்னதை மறக்கவுமில்லை. சரியாக இன்று மறக்காமல் துணிகளை எடுத்து தருகிறார், மீண்டும் உறுதி செய்ய சொப்பும் தருகிறார். நான் சற்று மானமுள்ள பெண்பால் என்பதால், மறுக்க முடியாமல் சென்று கொண்டிருக்கிறேன் துணிகளை துவைத்து எடுக்க.

நான் முதன்முறையாக துணிகளை துவக்க போவதால் எனக்கு துணி துவைக்க தெரியாது என்று மட்டும் நீங்கள் எண்ணி விட வேண்டாம். பிறந்தது முதல் துணி துவைப்பதை நன்றாக வேடிக்கை பார்த்திருக்கிறேன். எல்லா நுணுக்கங்களும் நன்றாகவே தெரியும். துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து சோப்பு நீரில் ஊறும் படி வைத்தேன் சிறிது நேரம் சென்றபின் ஒவ்வொன்றாக துவைக்க துவங்கினேன். என் நல்ல நேரம் வாஷிங் மிஷின் உபயோகத்தில் இல்லை. என் இரு திருக்கரங்களை கொண்டு தான் துணிகளை துவைத்து எடுக்க வேண்டிய கட்டாயம். நானெல்லாம் பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு முன்பு பிறந்து இருக்க வேண்டும், என்று நினைத்து கொண்டு, என்னை நானே கிண்டல் செய்தபடி துணிகளுடன் பணியில் ஈடுப்பட்டேன். இப்போது தான் நான் கவனிக்கிறேன் கடந்த சில நாட்களாகவே என் அம்மா கைகளால் தான் துவைத்து கொண்டிருக்கிறார். இத்தனை நாட்கள் எத்தனை வலியோடு இந்த துணிகளை துவைத்து இருக்க வேண்டும் (அம்மா! யூ ஆர் கிரேட்). நமக்கு வரும்வரை எந்த துன்பமும் நமக்கு துன்பமாய் தோன்றாது போல, பட்டறிந்தால் மட்டுமே எதையுமே நாம் உணர்கிறோம்… சரிதானே? இன்று தான் உணர்கிறேன் அவரின் கடுமையான நேரங்களை. என் அம்மாவின் கோபமுற்ற கடுகடுப்பு பேச்சுக்களுக்கு இது போன்ற உடல் சோர்வு தான் காரணமாக இருக்க முடியும். ஒவ்வொரு கோபத்திற்கு பின்னாலும் வலிகள் மறைந்திருக்கிறது என்று நமக்கு தெரிவதில்லை.

பெருமைக்கு சொல்லவில்லை, சற்று ஆர்வமுடன், மடமடவென துணிகளை துவைத்துக் கொண்டிருந்தேன். வேகமும், ஆற்றலும் துணிகளை தூய்மை படுத்திய வண்ணம் இருந்தன. துவக்கத்தில் நன்றாக தான் தெரிந்தது, எதையோ வெற்றிக் கொள்வது போன்று… போகப் போக தான் உணர்ந்தேன், காத்திருந்த வலியெல்லாம் ஒன்று சேர்ந்து என்னை சிறிது சிறிதாய் தாக்குதல் செய்ய துவங்கின. முதலில் இடுப்பு வலி பிறகு கைகள் என உடல் முழுவதும் வலிகள் அதிகமாயின. எத்தனை அதிகமான வலிகள், இத்தனையும் பொறுத்து கொண்டு எப்படி தான் நம் இல்லத்தின் அரசிகள் குறைக் கூறாமல் பல வருடங்களாக இந்த வேலைகளையெல்லாம் செய்து வருகின்றனரோ…  மோசமான வேலைகள் இவையெல்லாம். ம்ம் ம்ம்….

இடையிடையே என் அம்மா என்னிடம் வந்து, “முடியலனா வந்திடு மா… நா துவச்சிக்கிற!” என்று சொல்லும் போது, ஒரு வகை நிம்மதியான ஆறுதல் கிடைத்தது எனக்கு கூடவே மனதுக்குள் ஒரு பாரமான உணர்வு, இத்தனை நாட்களில் நான் ஒரு நாள் கூட முழுமனதுடன் என் அம்மாவிடம் இதுபோன்று கேட்டதில்லை. கேட்டிருந்தால் அவரும் இதே போன்ற ஆறுதலை பெற்றிருப்பார், என்னை நானே ஒரு கொடிய பிறவியாக உணர்ந்தேன். இத்தனை நாட்கள், என் அம்மாவின் வலியை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறேன். தன்னலமாய், என் அம்மாவை சுரண்டியது மட்டுமில்லாமல், அவரின் உழைப்பில் குறையின்றி இளைப்பாறி இருக்கிறேன். அவரின் வேலைகளை குறைக் கூறி இருக்கிறேன். அவரின் உழைப்பில் என் உடலை சேதமின்றி வளர்த்திருக்கிறேன். மோசமான குணங்கள் எனக்குள் ஊடுருவி இருப்பதை நினைத்து கவலைப்பட துவங்கினேன்… இத்தனையும் நினைத்து கொண்டே, “வேணாமா! நானே துவைக்கிற…” என்று சொல்லும் போது தொண்டையில் ஒருவகை வலி தோன்றியது, குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடு அது. அம்மா உள்ளே போனதும் துணிகளை கசக்கி மீண்டும் துவைக்க துவங்கினேன்.

வெவ்வேறு துணிகளை தனித்தனியாக துவைக்கும் போதெல்லாம் ஒன்றை கவனித்தேன். அதனை இதுவரை என் அம்மா சொல்லி காட்டியதில்லை. ஏன் பெரும்பாலான பெண்கள் இதனை ஒரு பொருட்டாக நினைத்து வெளியில் சொல்வதில்லை. அவர்கள் எல்லா துணிகளையும் ஒரே போன்று தான் பார்க்கின்றனர் ஆனால் அனைத்தும் ஒன்றல்ல. துணிகளின் எடை அதிகமாக இருக்கும் எனில், அவற்றை துவைக்கும் போது அதிக வலி ஏற்படுகிறது. அவற்றை கையாள கூடுதல் நேரமும் உழைப்பும் தேவைப்படுகிறது. அது கொடுமையான வலிகள்… நாடி நரம்பெல்லாம் கதறி அழுவது போன்ற வலிகள். எடை அதிகமுள்ள துணிகளை நீருடன் சேர்த்து தூக்கி, இறக்கி, துவைத்து, அலசி, பிழிந்து காய வைப்பதற்குள் உடலை விட்டு உயிர் பிரிந்து வெளியே சென்று ஓய்வெடுத்து பின்னர் மீண்டும் வந்து உடலில் நுழைந்து வேலையை தொடரும் போன்று இருக்கும். அய்யோ! போதும் இந்த வாழ்க்கை என்றாகிவிடும் அந்த ஒரு எடையுள்ள துணிக்கு.

நம் உடைகளை நாமே துவைத்து கொண்டால் பிரச்சினை இல்லை, கேள்விகளும் இல்லை. தாராளமாக எந்த வகை ஆடைகளையும் நாம் வாங்கி போட்டு துவைப்பதில் விவாதம் இல்லை. தங்கள் துணிகளை தாமே துவைப்பது நற்பண்பு, அவ்வாறு செய்வோருக்கு கேள்விகளே இல்லை. மாறாக, நம்முடைய எடை அதிகமான மற்றும் துவைப்பதற்கு கடினமான, உயர்தர ஆடைகளை வீட்டிலுள்ள இன்னொருவர் துவைப்பது என்பது அபத்தம், அநீதி, எனக்கு ஏதோ ஒருவரின் உழைப்பும் நேரமும் சுரண்டப்படுவதாய் தோன்றுகிறது… அது தானே உண்மையும் கூட. ஆம், நம் வேலைகளை அடுத்தவர் மேல் சுமத்துவது சுரண்டலுக்கு சமம்.

பொதுவாக நாம் ஒரு ஆடையை அதன் தரத்தினை பார்த்து வாங்குகிறோம். அது உழைக்கும் நாட்களை கணக்கிட்டு வாங்குகிறோம். அது எவ்வளவு எடையுடன் உள்ளது என ஆராய்ந்து வாங்குகிறோம். குறிப்பாக ஆண்களின் ஆடைகள் அதிக திடத்தன்மை கொண்டதாகவே அமைந்து விட்டதால். அதனை துவைத்து முடிப்பதற்குள், ஒரு வனவாசத்தை முடித்து வருவது போன்ற உணர்வு தோன்றிவிடும் நமக்கு. இன்னும் குறிப்பாக சொன்னால் ஆண்களின் கால் சட்டைகள் (Pants, Jeans etc.) அய்யோ..! முடியாத வேதனைகள் அவை. அதற்காக ஏன்? ஆண்கள், Jeans போன்ற அதிக திட தன்மை கொண்ட ஆடைகளை அணிய உரிமை இல்லையா… போன்ற ஆணியம் சார்ந்த கேள்விகள் உடனே வரும், கொஞ்சம் பொறுங்கள்… பெண்களும் திடத்தன்மை அதிகம் உள்ள உடைகளை பயன்படுத்துகின்ற காலம் இது.

ஆண்கள் மட்டுமல்ல எல்லோரும் தாராளமாக அணியலாம். இவ்வுலகில், யார் வேண்டுமானாலும் அவரவருக்கு ஏற்ற எந்த வகையான ஆடைகளையும் அணிய உரிமைகள் உண்டு. ஆனால் இங்கு பிரச்சினை நாம் எடை அதிகமான ஆடைகள் அணிவது இல்லை, அதனை துவைப்பதற்கு அதிக கடினமாக இருப்பது தான். அதனை நாம் துவைக்காமல் வீட்டிலுள்ள அப்பாவிகளின் மேல் ‘கடமை’ என்ற பெயரில் திணிப்பது தான். அவரவர் தம்தம் துணிகளை தாமே துவைத்து கொண்டால் தாராளமாக எந்த வகை ஆடைகளையும் பயன்படுத்தலாம். அது யாரையும் சுரண்டாது… துன்பப்படுத்தாது… யாருக்கும் வலி கொடுக்காது… என்று சிந்தனையில் மூழ்கி இருக்கும்போது ஒன்று தோன்றியது. நமக்கு குறிப்பிட்ட வகை ஆடைகள் பிடிக்கும் என்பதற்காக வீட்டிலுள்ளோரை அடிமையாக்கி வாட்டி எடுப்பது என்பது கொடுங்குற்றம் என்று நன்றாக புரிந்து கொண்டேன். நானும் இனி அந்த தவறை செய்ய மாட்டேன். இனி நானும் திடத்தன்மை அதிகம் கொண்ட ஆடைகளை வாங்க போவதில்லை என முடிவெடுத்து கொண்டேன். அப்படியே வாங்கினாலும் அதனை யாருக்கும் துன்பம் வராத வண்ணம் நானே துவைத்து கொள்ள போகிறேன். உயர் தரமோ, அலங்காரமோ, ஆடம்பரமோ நம் அம்மாக்களின் வேலை சுமையை குறைக்க போவதில்லை என்று நன்றாக புரிந்தது எனக்கு.

ஒருவழியாக எல்லா துணிகளையும் தூய்மை படுத்தி, வெயிலின் கையில் ஒப்படைத்து விட்டு உள்ளே போனேன். பரிதாபமாக என்னை பார்த்தபடி, “ரொம்ப கஷ்டமா இருந்திச்சா மா… நீ பாதியில என்ன கூப்பிடுவனு நெனச்ச… ஆனா நீ ஏதும் சொல்லல!” என்று அம்மா என்னை கேட்டதும் அவர் குரலில் ஒலித்ததெல்லாம் இத்தனை வருடத்தின் மொத்த வலிகளின் உணர்வு மட்டுமே. (ஏனெனில் அவள் வலி அறிபவள்… காரணம் அதில் அவள் அனுபவம் பெற்றவள்) அம்மாவின் கண்களில் தடுமாறி கொண்டிருந்த அன்பை பார்த்தபடி “கஷ்டமா தா இருந்திச்சி மா… ஆனா, இத்தன நாளா நீ எப்படி துவச்சி இருப்பனு யோசிச்ச… நா பண்ணது பெரிய கஷ்டமா தெரியல… இனி என் துணிய நானே துவச்சிக்கிற மா!” என்று சிரித்த முகத்துடன் சொன்னேன், என் அம்மாவின் கண்களில் அன்பு சிரிப்பும், உதட்டில் மகிழ்ச்சி சிரிப்பும் தெரிந்தது. அன்று என் அம்மா எனக்கு பெரும் வீராங்கனையை போன்று காட்சியளித்தார்… என் அம்மா மட்டும் இல்லை, இதுபோன்ற ஒவ்வொரு வீட்டிலும் உள்ள அத்தனை அம்மாக்கள், மகள்கள், மாமியார்கள், மருமகள்கள், அக்காக்கள், தங்கைகள் என வீட்டு வேலைகளை குறை கூறாமல் செய்து கொண்டிருக்கும் அனைவருமே பலம் கொண்ட மாவீராங்கனைகள் தான்…

“அவர்களை ஆதரிப்போம்…
அவர்களை ஆறுதல் செய்வோம்!
அவர்களை போற்றுவோம்…
அவர்களை பாராட்டுவோம்!
அவர்களின் எல்லா வேலைகளையும் பகிர்ந்து கொள்வோம்..!”

குறிப்பு:
உலக ஆய்வுகளை எடுத்து பார்த்தால், உலகிலுள்ள பெண்கள் அதிகமாக உழைப்பை செலவிடுவது வீட்டு வேலைகள் செய்வதற்காக தான், அதற்கான அவர்கள் தகுந்த ஊதியம் எல்லாம் கேட்பதில்லை (Without Salary). கிட்டத்தட்ட ஒரு நாளுக்கு ஆறு மணி நேரம் வீட்டு வேலைகளை மட்டுமே செய்கின்றனர் நமது மதிப்பிற்குரிய இல்லத்தரசிகள். அலுவலக முழு வேலை நேரம் எட்டு மணி நேரம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் அலுவலகம் செல்லும் பெண்களின் பாடு பெரும்பாடு, வீட்டிலும் வெளியிலும் என வலிகள் மட்டுமே நிறைந்தது அவர்களின் வாழ்க்கை. கொடுமையான வாழ்க்கை!

2012 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வில், இந்தியாவில் ஒரு சராசரி நகர்ப்புற நடுத்தர குடும்ப பெண் செய்யும் வேலையின் ஊதியம் கணக்கிடப்பட்டுள்ளது, ஒரு மாதத்திற்கு ரூபாய் 45,000/- வரை ஊதியம் கொடுக்கலாம் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் கணக்கிடப்பட்ட அளவு, இன்றைய தேதிக்கு கணக்கிட்டால் குடும்ப தலைவர்களின் முழு வருமானம் போதாது போல தெரிகிறது. மேலும், நமது வீட்டின் பெண்கள் விடுமுறை இன்றி, ஓய்வின்றி 24/7 உழைப்பை அளித்து வருகின்றனர்.

இந்த ஆய்வுகளை குறிப்பிட்டதின் நோக்கம், ஆண்களை விவாதத்திற்கு நிறுத்துவதற்கோ அல்லது பெண்களின் உழைப்பை பட்டியலிடவோ அல்லது உழைப்பின் அளவை அளப்பதற்கோ இல்லை. மாறாக, நம் வீட்டு பெண்களின் உழைப்பு ஒப்பற்றது… விலைமதிப்பற்றது… காரணம் அவர்களின் உழைப்பு தூய்மையானது… அன்பு கலந்தது… நமக்கானது…


ஏன் ஆண்களின் உழைப்பும் நிகரற்றது தான்… மனிதராய் பிறந்த ஒவ்வொருவரின் உடல் உழைப்பும் மதிப்பு பெற வேண்டிய ஒன்று. ஆனால், வீட்டு வேலைகளை பெண்ணின் பிறவி கடமை என கூறுவதும், வீட்டு வேலை செய்யும் ஆண்களை கேலி கிண்டலுக்கு ஆளாக்குவதும் என்று இன்னமும் நம் சமூகம் வளர்ச்சி இல்லாமல் கிடக்கிறது.
பெண்ணோ… ஆணோ… யாராயிருந்தாலும் அவர்களை அடிமை போன்று நடத்துவதும், அவர்களின் ஆற்றலை சுரண்டல் செய்வதும் குற்றமே!


உழைப்பின் மதிப்பை நாம் ஒவ்வொருவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம், நம் தாய்மார்களின் சுமைகளை பகிர்ந்து கொள்வோம்… வீட்டின் வேலையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களே உண்மையில் உயர்ந்த… சிறந்த… மாமனிதர்கள்.


இதில் ஆண் பெண் வேறுபாடில்லை…
மனிதராய் பிறந்த நம் எல்லோருக்கும் இது
சமமான நீதி!
சமூகநீதி!
உயிரியல் நீதி!
இயற்கை நீதி!
சரியான நீதி!

படைப்பு: லூயிசா மேரி சா

கட்டுரை 1 : “பெண்ணதிகாரம்!”

‘மகளிர் தினம்’ வந்தாலே போதும் உலகமே ஒருங்கிணைந்து பெண்ணினத்தின் அருமை பெருமை சாதனைகளை பட்டியலிட்டபடி போற்றி முடிக்கும் இந்த ஒரு நாளுக்கு மட்டும். ஆண்டு முழுவதும் இம்மாதரசிகளின் செயல்களுக்கெல்லாம் புகழ் பாடி முடிக்க இந்த ஒரு நாள் போதுமானது உலகத்தின் பார்வைக்கு. முக்கியமானது என்னவெனில், இந்த ஒரு  நாளும் கூட வீட்டு வேலைக்கு விடுமுறை நாளல்ல நம் இல்லத்தின் தவப் புதல்விகளுக்கு. மேலும், ஒரு பெண்ணாக… தன் பெண் தன்மைகளை சுமந்து கொண்டு, பெண் குணங்களை தன்னுடன் எடுத்துக் கொண்டு, பெண்களின் பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றிக் கொண்டு பெண்களாய் இச்சமூகச் சூழலை சந்தித்துக் கொண்டு, பெண்களாய் குடும்ப பாதையில் பயணித்துக் கொண்டு, பெண்களாய் தனித்து நின்று கொண்டு, இன்னமும் பல மைல் தூர கடின வழிகளைக் கடந்து வளர்ச்சி காணும் தேவையும் அதிகம் இருக்கிறது உலகின் எல்லா பெண்களுக்கும்.

சரி சரி, இதையும் பெண்களை போற்றி பேசும் மற்றுமொரு கட்டுரை என எடுத்துக் கொள்ள வேண்டாம். அதே நேரம் ஆண்களை பழித் தீர்க்கும் வரிகளும் இவை இல்லை. பல காலமாக ‘பெண்ணியம்’ என்றதும் ஆண்களை பழிக்க ஒரு கூட்டம், பதிலுக்கு பெண்களை விமர்சனம் செய்ய மறு கூட்டமாய் பிரிந்து போய் கிடக்கிறோம். நம் சமூகத்திற்கு, ‘ஆண்களா? பெண்களா?’ என்பது போன்ற அர்த்தமற்ற தலைப்புகள் அதிகம் பழக்கப்பட்ட ஒன்று. இங்கு குறைபாடு ஆண் vs பெண் என்பதல்ல. எடுத்துக்காட்டாக, எந்த ஒரு சிறு கூட்டம், எந்த ஒரு பெரும் கூட்டத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அடிமையாக்கப் படுகிறதோ, அங்கு ஆளுகையும் அதிகாரமும் ஓங்கி நிற்கும். அப்போது, மனிதத்தன்மை எனும் ஆற்றல், சுரண்டப்பட்ட சிறு கூட்டத்துடன் நிற்க சொல்லும் நம்மை. அதுவே சமத்துவம்… அதுவே சரிசமம்… அதுவே நீதியும் கூட.

இக்கட்டுரையில் சற்று வேறு கோணத்தில் சிந்திக்க எண்ணம் எடுப்போம். “பெண்ணதிகாரம்” அதிகாரம் கொண்ட பெண்கள் பற்றியது போன்று தோன்றலாம். மாறாக இங்கு, ‘அதிகாரம்’ என்பதின் மற்றொரு பொருளான, ஒரு குறிப்பிட்ட பகுதி, தொகுதி அல்லது தலைப்பு என கொள்ளலாம். ஆம், பெண் கூட்டம் இச்சமூகத்தின் ஒரு முக்கிய பகுதி என்பதை நினைவூட்டும் வகையில் சிந்திக்க முற்படுவோம்.

சங்க இலக்கிய காலம் துவங்கி அதற்கு பின்பு சங்கம் மருவிய காலம் தொட்டு, இப்போது நடப்பில் இருக்கும் இலக்கிய காலம் வரை பல்வேறு பெண்களை கண்டும் கேட்டும் இருக்கிறோம். பெண்களின் பரிணாமம், பெண் அடிமைத்தனம், பெண் விடுதலை, பெண் வளர்ச்சி போன்ற அனைத்தும் பார்த்திருக்கிறோம், அறிந்திருக்கிறோம். ஆனால் இவற்றில் கூட தென்படவில்லை உண்மையான பெண் உணர்வுகள். இந்த உலக உயிர்க்கோளத்தின் நியதிப்படி பெண் என்பவளை பாலினம் கடந்து பார்க்கும் போது ‘பெண்’ மனித இனத்தின் ஓர் பகுதி, ஓர் தனிப்பட்ட உயிர்.

தற்போது ட்ரெண்டிங் படி பெண்கள் குறித்து வெளிவரும் கேலிக்கை, நகைச்சுவை பதிவுகள், இடுகைகள் சிலவற்றை மேற்கோள் காட்டி இன்றைய சமூகப் பார்வையை தெரிந்து கொள்ளலாம்.

இவை தானா பெண்கள் பற்றிய நம் எண்ணங்கள்? நம் இளைய சமூகம், புதிய சமூகம், வளர்ந்த சமூகம், மகளிர் தினங்களில் பெண்களை உருகி உருகி போற்றும் சமூகம் மற்ற நாட்களில், இந்த வகைகளிலெல்லாம் பெண்களை சித்தரிக்கிறது… சிரிக்கிறது. ஆண்கள் தங்கள் வாழ்நாளில் கண்ணாடி பார்த்து அலங்கரித்து கொள்ளாதது போலவும், பெண்களின் 24/7 வேலையே கண்ணாடி முன் நிற்பது போலவும், சமையல் வேலை பெண்களுக்கென எழுதி வைக்கப்பட்ட அடிமை/உரிமை சட்டம் போலவும், சமைக்க தெரியாத பெண்கள், பெண்களே இல்லை என்பது போலவும், சமையல் தெரிந்த ஆண்கள், ஏதோ ஆண்களின் குணங்களில் ஒன்றை இழந்தது போலவும், காதல் தோல்வி ஆண்களுக்கு மட்டுமே நிகழ்வது போலவும், அதற்கு பெண்களே… பெண்கள் மட்டுமே காரணம் என்பது போலவும், பெண்களுக்கு வலிகள் இல்லாதது போலவும், தாடி வளர்த்த ஆண்களுக்கே தோல்வி, வலி இருப்பது போலவும் என இன்னமும் நீட்டி கொண்டே போகலாம்.

பெண்களின் கரங்களில் நம் கலாச்சார பண்பாட்டின் மொத்த பொறுப்பும் கொடுக்கப்பட்டிருப்பது போல, மற்றவர்களுக்கு இந்த கலாச்சார கவலைகள் இருப்பது இல்லை. பெண்களை தவிர்த்து வேறு யாரையும் இந்த பண்பாடு, கேள்விகள் எழுப்புவதில்லை. இதுவரை நாமும் அவற்றை கண்டதில்லை! இது நாகரிகத்தில் வளர்ச்சி பெற்ற சமூகம், மறுமலர்ச்சிக்கு பெருமை பேசிக்கொள்ளும் சமூகம், மற்றும் பெண்களின் வளர்ச்சிக்கு கலாச்சார எல்லைக் கோடு வரைந்து கொண்டு இருக்கும் சமூகமும் கூட என்பதை மறக்க வேண்டாம்.

பெண்களை பொழுதுபோக்காக, போகப் பொருளாக, வியாபார சந்தை பொருளாக, கேலிக்கை உருவமாக வழங்கி கொண்டிருக்கிறது இன்றைய திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், நாடகங்கள், நகைச்சுவை வரிகள். இதற்கு குடும்பமே (பெண்கள், ஆண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்) சேர்ந்து சிரித்து தள்ளும் காட்சிகளும் நமக்கு பழகியவையே. இந்த சமூகத்தில், நாடகம் பார்ப்பதும் பெண்கள் தான், அவற்றில் வில்லி கதாபாத்திரங்களும் பெண்கள் தான், அழுத முகத்துடனே வாழ்நாளை கழிக்கும் கதாநாயகிகளும் பெண்கள் தான். சண்டையிடுவதும் பெண்களே… சதி திட்டம் தீட்டுவதும் பெண்களே… எல்லா தீமைகளும் ஆபத்துகளும் இந்த பெண்கள் மட்டும் தான். என்ன ஒரு கொடுமை, இத்தனையும் சிந்தனை செய்து, எழுதி, இயக்குவது மட்டும் பாவப்பட்ட ஆண்கள். இதிலும் ஒரு திருப்புமுனை என்னவெனில், குரல் உயர்த்தி கேள்வி கேட்கும் பெண்கள் எல்லாம் வில்லிகள். தன் உரிமையை போராடி பெற இயலாத அடிமை குணம் கொண்ட பெண்கள் கதாநாயகிகள். கொடுமை!

இது போன்ற அறிவுசார் இயக்குனர்கள் செய்து போன மற்றுமொரு சாதனை உண்டு. நம் சமூக குடும்ப உறவுகளுக்குள்ளே கலக நஞ்சை செலுத்தி போனது தான். குறிப்பாக மாமியார் மருமகள் என்ற இணையற்ற உறவை ஏறக்குறைய இரண்டு மூன்று தலைமுறைகள் எதிரிகளாகவே சித்தரித்த பேரும் புகழும் மேலே குறிப்பிட்ட அந்த அறிவுசார் இயக்குனர்களை சாரும்.  இதற்கு இடையில் ஒன்றை சிந்தித்து பார்ப்போம். மாமனார் மருமகன் உறவு, அவர்களுக்குள் சண்டை இல்லை சச்சரவு இல்லை காரணம் அவர்கள் ஆண்கள்… அப்படியா? இல்லவே இல்லை ஒன்றை நினைவில் கொள்வோம், முகத்தோடு முகம் நேருக்கு நேராக சந்திக்காத போது, அங்கு பேச்சுக்கே இடமில்லாத போது சண்டைக்கு எப்படி இடமிருக்கும்? சரி, சிந்தனைக்கு வருவோம். இவ்வாறான அரைக்குறை மனநிலைகளில் சில… ஒரு பெண் கணவன் வீடு சென்ற பிறகு தான் அந்த குடும்பத்தில் சண்டை வரும் என்பது போலவும். திருமணத்திற்கு முன் எல்லா ஆண்பிள்ளைகளும் தங்கள் பெற்றோரை சண்டை போட்டதும் இல்லை என்பது போலவும், காயபடுத்தியது இல்லை என்பது போலவும், தன் தாய் தந்தை பேச்சுக்கு இணங்கி இருந்தது போலவும், மனைவியே அவனை தீயவனாக இயக்குவது போலவும், இன்னமும் பல பழி சொற்களை ஒன்றன்பின் ஒன்றாக பெண்கள் மீது மட்டுமே சூட்டி கொண்டிருக்கிறது கடந்த சில தலைமுறைகள்.

மனித, மனிதியின் உணர்வுகளை, செயல்களை, செய்கைகளை பாலினம் கண்டு பிரித்து பார்க்கும் மனநிலை இன்னமும் நம்மை வளர்ச்சி திசைக்கு சற்று தள்ளியே நிறுத்துகிறது என்பது வருத்தமான ஒன்று. பெண்களின் மனதின் ஆழம் யாருக்கும் புரியாது, ஆண்களின் மனதின் ஆழமும் புரியாது இதில் வேறுபாடு இல்லை. பெண்கள் ஆசைகள் அதிகம் கொண்டவர்கள், ஆண்களும் ஆசைகள் அதிகம் கொண்டவர்கள் இதில் வேறுபாடு இல்லை. பெண்கள் அதிகம் அழுவார்கள், ஆண்களும் அதிகம் அழுவார்கள் இதில் வேறுபாடு இல்லை. குறிப்பிட்ட வேலை பெண்களுக்கானது… குறிப்பிட்ட வேலை ஆண்களுக்கானது… என்றில்லாமல், அவரவர் வேலை அவரவர் உடையது. தங்களுக்கு வேண்டிய வேலையை அவர்களே செய்து கொள்ளலாம் இதில் வேறுபாடு இல்லை. இன்றைய நவீன உலகில், திறமைக்கும், சாதனைகளுக்கும் பாலினம் இல்லை என்பதை உணர்ந்து அறிவோம். ‘பாலினம்’ என்பது, உயிரியல் வேறுபாடே தவிர உணர்வு வேறுபாடு இல்லை.

மனிதன், மனிதி மற்றும் உலகின் மற்ற அனைத்து உயிர்களும் வாழ்வது ஒரே உயிரியல் சூழல் எனும் போது, ஒரே உலகம் எனும் போது, ஒரே உணர்வுகள் இருப்பதில் தவறில்லையே. சிலமுறை ஒரே குணங்கள் வெளிப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லையே. ஆனால், நாம் உணர்வுகளையும், குணங்களையும் பாலின அடிப்படையில் பிரிப்பதால் இருப்பாலரின் ஏன் அனைத்து பாலரின் உணர்வுகளையும் காயப்படுத்துகிறோம். மனிதனாக சிந்திக்கும் போது, ‘அன்பு’ எனும் உயர்ந்த குணத்தை தருகிறோம்.முதலில் மற்றும் முக்கியமாக நாம் எல்லோரும் மனித இனத்தின் ஒவ்வொரு தனித்துவம் வாய்ந்த வெவ்வேறு மற்றும், ஒரே மாதிரியான உணர்வுகளை கொண்ட தனிப்பட்ட உயிர்கள், அத்தனை மனித கூறுகளும், சமூகங்களும், ஒவ்வொரு உயிர்களும் வாழ, வாழ்ந்து பழக, உணர்ச்சிகளை வெளிக்கொணர உரிமை பெற்றே பிறக்கின்றோம். அவற்றின் வளர்ச்சி, முதிர்ச்சி, மறுமலர்ச்சி அனைத்தும் அவரவரின் தனிப்பட்ட செயல்பாடுகளை பொருத்தி அமைவன என்பதை உள்ளார்ந்து உணர்ந்து, அனைத்தையும் மதிப்போம்! அனைவரையும் மதிப்போம்!! மனிதர்களாய் அன்பை பரப்புவோம்!!!
பெண்கள், பெண்களாய் தெரிவதற்கு முன், மனித இனத்தின் மற்றுமொரு பகுதி என்பதை உணர்ந்து கொண்டாலே போதுமானது, இதன்மூலம் பெண்களுக்கு இழைக்கப்படும் எல்லா அநீதிகளுக்கும் தீர்வு காண இயலும்.

மனிதம் வேறுபாடு துறந்தது…
மனிதன்/மனிதி வேற்றுமை அற்றவர்…
மனிதத்தன்மை எதையும் பிரித்து பார்க்காது…
மனிதத்தன்மை அன்பை பெருக்கம் பண்ணும்…

“பெண்ணதிகாரம்” உலக உயிர்க்கோளப் புத்தகத்தில் இணைந்தே இயங்கி வரும் மற்றுமொரு முக்கியமான அதிகாரம் (பகுதி & அங்கம்). பெண்களின் உணர்வுகளை பிரித்து பார்ப்பதும், உயிரியல் விதி புத்தகத்தின் சில முக்கிய பக்கங்களை கிழித்து பார்ப்பதும் ஒன்றே. “பெண்ணதிகாரம்” இல்லையேல் உலக உயிரியல் கோட்பாடுகள் முழுமை அடையாது.

படைப்பு : லூயிசா மேரி சா

சிறுகதை 4 “சென்னை கடற்கரை!”

“வீட்டுக்கு போய் சேர வேண்டும்” முடிந்தவரை அதிக வேக விரைவில், வீடு திரும்ப வேண்டும். பழைய மாகாபலிபுர (OMR) பரபரப்பான பிரதான சாலையில், ஷேர் ஆட்டோவில் ஏறியது முதல் இப்போது இறங்கும் வரை, இரயில் ஏறுவது முதல் இரயில் இறங்கும் வரை மீண்டும் பிளாட் ஃபார்ம் கடந்து பேருந்தை பிடித்து வீடு சேரும் வரை, என் மனதில் துடித்துக் கொண்டிருக்கும் அந்த ஒரே வரி, “வீட்டுக்கு போய் சேர வேண்டும்”

காலையில் உறக்கத்தில் சிறிதளவு தியாகம் செய்துவிட்டு, காலை உணவை கூட புறக்கணித்து விட்டு, அம்மாவின் கேள்விக்கு கூட பதில் சொல்லாமல், அவசர அவசரமாக அலுவலகம் சென்று சேர வேண்டும் என ஓட துவங்கி, வேலை முடித்து திரும்பும் போது ஒரு முழு நாளுக்குரிய சோர்வையும் மன அழுத்தத்தையும் தவறாமல் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பல நடுத்தர பெண்களின் பிரதிநிதி நான்.

கடினம் தானே, இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும், வீடு முதல் அலுவலகம் வரை. மீண்டும் மற்றொரு இரண்டு மணி நேரம் வேண்டும், அலுவலகம் துவங்கி வீட்டை அடைய. இதற்கிடையில், அழுத்தம் தரும் வேலைகள், குழம்பிய நிலையில் சிந்தனைகள், விருப்பமில்லா உணவு இடைவேளைகள், சில நேரங்களில் அந்த இடைவேளைகள் கூட இல்லை, காரணம் பசியையும் மறக்க வைக்கும் பணி சுமைகள். இதனால் ஏற்படும் களைப்பின் கோபத்தையும், வெறுப்பையும் மறக்காமல் வீடு சேர்த்து தினம் தினம் அம்மாவை திட்டுவதற்கும், மனதை உடைப்பதற்கும் சற்றும் மறக்கவில்லை. அதனையும் பொருட்படுத்தாமல், என்னையும் என் சோர்வையும் நன்கு கையாள தெரிந்த அம்மாவின் உபசரிப்புக்கோ குறை ஏதும் இருக்காது.

இன்னமும் எத்தனையோ மன உளைச்சல்கள் நிறைந்த நேரத்தை எண்ணினால் வெறுப்பும் சலிப்பும் தவறாது ஒன்றன்பின் ஒன்றாக வந்து போகும். இவற்றிற்கெல்லாம் சேர்த்து ஒரே ஒரு ஆறுதல் தான். நான் அனுபவிக்கும் இதே அலுவலக அலைச்சலை என்னை போன்றே தினம்தினம் பல லட்சம் பெண்கள் அனுபவிக்கின்றனர், உதாரணத்திற்கு சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி செல்லும் பறக்கும் இரயிலை சாட்சிக்கு எடுத்து கொள்ளலாம். வாழ்க்கை பாடத்தை சில நேர பயணத்தில் சொல்லிவிடும் அந்த இரயில். 

எத்தனையோ பெண்களுடன் சேர்த்து, அவர்களின் மன சுமையையும் உள்ளத்தின் பாரத்தையும் சேர்த்தே சுமந்து செல்லும் அந்த இரயில். என்னை போன்றே ஒவ்வொரு வேலை செய்யும் பெண்களின் விடுதலை வழி அந்த இரயில். அந்த இரயிலை கண்டதும் நாங்கள் கொள்ளும் இன்பம் ஒப்பற்றது. அந்த இரயில் வந்து நின்றதும், அதனின் வாயில்கள் எங்களுக்கு சொர்க்க வாசல்கள் போன்றவை. காற்றை கிழித்துக் கொண்டு வந்து நிற்பதை காணும் போது, எங்களை விடுவித்து கூட்டி செல்ல வந்த விடிவெள்ளி போன்று காட்சியளிக்கும் அந்த இரயில். இறைவன் இரயில் வடிவிலும் வருவான் போல.

அதனை பிடிக்க நிற்கும் கூட்டத்தை பார்த்ததும் தெரிந்து விடும், நம்மால் ஏற முடியுமா முடியாதா என்று. முடியும் என்றால், நம்பிக்கையுடன் தயாராக நிற்போம். முடியாது என்றால், அதை விட நம்பிக்கையுடன் சற்று பலத்தையும் சேர்த்துக் கொண்டு, தயாராக நின்றிருப்போம். ஏனெனில், அனைவரின் மனதிலும் ஓடும் அந்த ஒரே வரி, “வீட்டுக்கு போய் சேர வேண்டும்”அடித்து பிடித்து, இழுத்து தள்ளி, கூட்டத்தினுள் புகுந்து உள்ளே நுழைந்து, இடத்தைப் பிடிக்க நாங்கள் படும் அவதி, ஐயோ! எங்களுக்கு மட்டும் தான் தெரியும். 

அது ஒரு அவஸ்தைகள் நிறைந்த தருணம். சிலருக்கு இருக்கை இருக்கும், சிலர் கொஞ்ச இடத்தைப் பகிர்ந்து கொள்வர், சிலர் பகிர விரும்ப மாட்டார்கள், சிலர் நம் பைகளை வைத்துக் கொள்ள கேட்பர், சில நேரங்களில் பாரம் தாங்காமல் நாமே பைகளை வைத்துக் கொள்ள சிலரை கேட்டுக் கொள்வோம், சிலருக்கு கைப்பிடி இருக்காது, சிலருக்கு நிற்க கூட இடம் இருக்காது, சிலர் சௌக்கியமாக நின்றிருப்பர், இன்னமும் அதிர்ஷ்டசாலி சிலருக்கு ஜன்னல் ஓரத்தில் காற்று வசதி கொண்ட அழகிய இடம் கிடைக்கும். சில நேரங்களில் நொந்து போய் வியர்த்து நின்றிருக்கும் நான், ஜன்னல் ஓர நபர்கள் வாங்கும் காற்றை நான் வாங்குவதாய் கற்பனையில் காற்று வாங்கி கொள்வேன். கூட்டம் அதிகமாக இருந்தால், கற்பனையில் கூட அந்த காற்று கிடைக்காது. 

இருக்கமாக தான் நின்றிருப்போம். சிலர் ஒருவரை ஒருவர் பிடித்தும் கொள்வர். இன்னும் சிலர் ஒருவர் மீது ஒருவராய் சாய்ந்தே கொள்வர். என்ன ஒரு சகிப்புத் தன்மையும், ஒற்றுமை உணர்வும் எங்களிடத்தில். இத்தனையும் நடந்து கொண்டிருப்பது பெண்களுக்கான சிறப்பு பெட்டியில் தான். யார் சொன்னது பெண்ணுக்கு பெண் முரண் என்று? எல்லா பெண்களும் மற்ற பெண்களுக்கும் தாய் தான், சகோதரி தான், தோழி தான்.

ஐம்பது நிமிட பயணத்தில் எத்தனை எத்தனையோ கதைகள், எத்தனை எத்தனையோ வாழ்க்கை பாடங்கள். ஆனால், எங்களின் தற்போதைய நோக்கமெல்லாம் வீடு போய் சேர வேண்டும் என்பதே…

இரயில் பயணம் அழகானது, அர்த்தங்கள் கூட நிறைந்தது. மெதுவாக சென்றாலோ, வேகம் எய்தி சென்றாலோ இலக்கை சென்றடைந்து வென்று நிற்கும் இந்த இரயில். காற்றோ, மழையோ, வெயிலோ, புயலோ தடைகள் எதுவாக இருப்பினும், முயற்சி கொண்டு முன்னேறி சென்று அடையும் இந்த இரயில். நிற்க வேண்டிய இடமெல்லாம், சற்று நின்று தன் கடமைகளையெல்லாம் நிறைவேற்றி செல்லும் இந்த இரயில். பயணத்தின் போது, தனது வருகையையும் போக்கையும் சத்தமிட்டு பதிவித்து செல்லும் இந்த இரயில். களைப்பின் ஓர் சிறிய மகிழ்ச்சி இந்த இரயில். கூட்டத்தினுள் ஓர் அரிய அமைதி இந்த இரயில். உலக நெரிசல் கூச்சலினுள் ஓர் தாலாட்டுப் பாடல் இந்த இரயில். நாம் அமர்ந்து கொள்ள மடிதரும் அன்னை இந்த இரயில். நிற்க இடம் தரும் வள்ளல் இந்த இரயில். நம் துன்பங்களை கொஞ்சம் சுமந்து கொள்ளும் தோழமை இந்த இரயில். வாழ்வின் முக்கிய சில பாடங்களை கற்று தரும் ஆசான் இந்த இரயில். இன்னமும் பல… இன்னும் பல இந்த இரயில். மனிதனின் வாழ்க்கை பயணமும் இந்த இரயில் பயணம் போன்று தான். நாம் தான் இந்த இரயில்.

நானும் என்னுடன் என் பரபரப்பை பகிர்ந்து கொள்ளும் என் உடனிருக்கும் தோழி சாராவும் வழக்கம் போல நின்றுக் கொண்டு தான் பயணித்து கொண்டிருந்தோம், பல கதைகள் பேசிக்கொண்டு. அலுவலகத்தில் நடக்கும் அநீதி அக்கிரமங்களை குறித்தும் வினவிக் கொண்டிருந்தோம், திருவான்மியூர் ஜங்ஷனில் வாங்கிய சுண்டலை திண்றுக் கொண்டே. வேறென்ன செய்ய முடியும்? மீண்டும் மறுநாள் காலை அதே குறைகள் நிறைந்த அலுவலகம் தான் செல்ல முடியும். இதே புலம்பல் நாளை மாலையும் தொடரும், ஒவ்வொரு நாளும் தொடரும். இரயில் உள்ள ஒவ்வொருவரின் புலம்பலும் இதே தான். இதே அலுவலகத்தை குறித்த அலுப்பும் களைப்பும் தான்.

நாங்கள் தற்போது தான் கல்லூரி முடித்து, அலுவலக வேலையை துவங்கினோம். எங்களின் வீடுகளில் நாங்கள் ஒரு வேலையும் செய்ய போவதில்லை. ஆனால், எங்களுடன் பயணிக்கும் ஒவ்வொரு இல்லத்தரசிகளையும், தாய்மார்களையும் கவனிக்கும் போது, ஐயோ! மனதினுள் இன்னும் கனம் கூடிப் போகும். காரணம், அவர்கள் வீடு சென்றதும் மீண்டும் வீட்டின் வேலைகளையும் இரவுக்குள் முடிக்க வேண்டும். என்ன சாபமோ, இந்த பெண் பிறவிகளுக்கு. யார் வகுத்த கோட்பாடுகள் இவையெல்லாம். பெண்ணியம், பெண்ணுரிமை, பெண் முன்னேற்றம் என் பேசிப் பேசி வீட்டுக்குள் அடைந்து கிடந்த பெண்களை வேலைக்கு செல்ல அனுமதி பெற்று பெண்களின் பாரத்தை அதிகப்படுத்தி விட்டோமோ? இன்னமும் அலுவலக பெண்கள் வீட்டு வேலைகளையும் சேர்த்து செய்கின்றனர் மேலும் வீட்டு வேலைகளை செய்து விட்டு தான் அலுவலகம் சென்று வருகின்றனர். இவையெல்லாம் போதாதென்று, வீட்டிலும் அலுவலகத்திலும் மாறி மாறி அதே குறைப்பாடல்கள், அதே குற்றச்சாட்டுகள். இது “ஆணாதிக்கம்” என்று நான் சொல்லவே மாட்டேன். இது பெண்ணியத்தின் ஆதிக்கமற்ற தன்மை என கூறிக் கொள்ளலாம். 

ஆழ்மனதில் ஓர் அமைதி சூழல். ஆம், அடுத்த நிறுத்தம் சென்னை கடற்கரை நிறுத்தம். அனைவரும் இறங்கவேண்டிய இடம். எல்லாம் தங்கள் பைகளையும் உடமைகளையும் எடுத்து தயாராக இருந்தனர். சிலர், வேக வேகமாக வாயில் அருகே சென்று நின்றனர். சத்தம் குறைய‌ குறைய மெதுவாக சென்று நின்றது இரயில். அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இறங்கினோம், எதையோ வெற்றிக் கொண்டது போன்று. ஆம், சென்னை கடற்கரையே தான். ஆஹா! தென்றல் இறகுகள் என்னை வருடியபடி வரவேற்றன. என் சோர்வை சற்று குறைத்து சென்றன. 

விறுவிறுப்பாக பிளாட் ஃபார்ம் கடந்து நடந்து ஓடினேன் ஏனெனில், “வீட்டுக்கு போய் சேர வேண்டும்” வலதுகை கடிகாரம் காட்டியது, சரியாக மணி இரவு 8.55 …….


படைப்பு: லூயிசா மேரி

சிறுகதை: 3 “சிந்தனை கொலை!”

How To Break Cell Phone Addiction - Safeguarde

அனல் நிறைந்து பரவிக் கொண்டிருக்கும் பின் காலை பொழுதிலே, ஏதோ காற்றின் கருணை தழுவுதலால் சற்று உயிர் வாழ்ந்து கொண்டு, சாளரம் ஓர இருக்கையில் சிறிது சோர்வாகவே அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தேன், சென்னை மாநகராட்சி அரசு பேருந்தில். சிவப்பு நிற ஒளி விளக்கின் கட்டாயத்தினால் சில மணி துளிகள் களைத்து போய், நின்ற வண்ணம் இருந்தது பேருந்து.

நகரவாசிகளுக்கு மட்டுமே பழக்கமான, சலசலப்பு கூடிய சத்தப் பேரணிகள்… வியர்வையும் வெறுப்புமாய்… காதுகளில் பேரொலியுமாய், அசைவற்ற நிலையை எங்குமே காணமுடியாத தருணத்தில், மனித கூட்ட நெரிசலில் ஓரமாய் நின்றவாறு எதையோ ஆர்வமாய் தேடிக் கொண்டிருந்த அந்த சிந்தனைகள் பொங்கி எழுந்த இரண்டு சிறிய கண்மணிகளை காண நேர்ந்தேன். எதை தான் தேடிக் கொண்டிருக்கின்றன இவை இரண்டும். எத்தனை சீரிய சிந்தனை தழல்கள் இவளை சுற்றிலும். இன்னமும் எத்தனையோ கேள்விகள் இச்சிறு மழலை மாறாத கண்களில். வானத்தை நோக்கினாள், சற்று கீழே இடதுபுறமாகவும் பார்த்தாள், வலது பக்கம் கேட்ட சத்தத்தினையும் திரும்பி பார்த்தாள். இன்னமும் விடை கிடைக்காத கேள்விகள் பலவற்றை, தன் சிறுகண்களில் சுமந்து கொண்டு நின்றிருந்தாள். அவளின் மலர் பொதிந்த முகத்தை பார்க்கும் போது, அவளின் கேள்விக்கெல்லாம் விடையை கேட்டு வாங்க வெகு நேரம் காத்து கொண்டிருப்பது போல தோன்றியது எனக்கு.

நவீன நகரப்பகுதியிலே, அங்கும் இங்கும் சத்த நெரிசலிலே, உலகை கற்றுக் கொள்ள காத்திருக்கும் சின்னஞ்சிறு உயிராய் கால்கடுக்க நின்றிருந்தாள் அவள், தன் தாயின் கைகளை பத்திரமாக பிடித்துக் கொண்டு. நாகரீக முதிர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும், அதிகாரபூர்வ அடையாளமாய் தோற்றம் அளித்தார் அச்சிறுமியின் தாய். மரபு மாறாது தன் மகளுக்கும் அவ்வாறே தோற்றம் கொடுத்திருந்தார் அந்த நவீன தாய். இவ்வாறு ஐந்து வயதினை உடைய உருவம் கொண்ட தன் மகளை தனது இடது கையினால் கவனமாய் சற்று கடினமாய் பிடித்து வைத்திருந்தார். அதைவிட கவனமாய் தனது வலதுகை விரல்கள் தன் விலையுயர்ந்த கைப்பேசியை பதம் பார்த்துக் கொண்டிருந்தது. சில நொடிக்கு ஒருமுறை தன் குழந்தையை இறங்கி பார்த்து விட்டு மீண்டும் கைப்பேசியுடன் உரையாடலில் இணைந்தது அந்த நவீன தாயின் கண்களும் சிந்தனையும்.
இருவரும் வெகு நேரமாக காத்திருப்பது போல் தெரிந்தது எனக்கு.

இச்சிறு மழலை மனதில் எத்தனையோ சந்தேகங்களும், கேள்விகளும் மாறி மாறி தோன்றி மறைந்து கொண்டிருப்பதை நன்றாகவே கணிக்கமுடிந்தது என்னால். அவளின் மழலை முகத்தினின்று சிதறி கொண்டிருந்த சிந்தனைகளாக என்னால் சிலவற்றை யூகிக்க முடிந்தது. அவை,
நகரம் ஏன் கூட்டமாக இருக்கிறது என கேட்க நினைத்திருப்பாளோ? ஏன் சிலர் நடந்தும், சிலர் கார்களிலும், சிலர் இருச்சக்கர வாகனங்களிலும், சிலர் பேருந்துகளிலும் செல்கிறார்கள், ஏன் இத்தனை வேறுபாடுகள் என எண்ணிக் கொண்டிருக்கிறாளோ? எதற்காக இந்த அண்ணன்கள் படிகளில் தொங்கிக் கொண்டு போகிறார்கள் என நினைத்திருப்பாளோ? ஏன் டிக்கெட் கொடுக்கும் அன்கிள் கத்திக் கொண்டிருக்கிறார், எல்லாம் எங்கு தான் செல்கிறார்கள் என சிந்தித்தாளோ? டிராஃபிக் போலிஸ் ஏன் கை அசைக்கிறார்… ஏன் சிவப்பு விளக்குக்கு எல்லா வண்டிகளும் கொஞ்ச நேரம் நின்று செல்கின்றன என எண்ணினாளோ? ஏன் அனைவரும் கடுகடுவென கோப முகத்தில் இருக்கிறார்கள், இவர்கள் எல்லாம் சிரிக்க மாட்டார்களா? ஏன் எல்லோரும் செல்போன் பார்த்து கொள்கிறார்கள் அம்மாவை போல, அப்படி தான் நானும் பார்க்க வேண்டுமா?

இன்னமும் எத்தனை எத்தனையோ கேள்விகள், ஆனால் விடைகள் கிடைக்காமல், மரணித்துக் கொண்டிருந்தன அவளின் கேள்விகளும், சந்தேகங்களும். அவள் ஏன் தன் தாயிடம் கேட்டறிய எந்த முயற்சியும் எடுக்கவில்லை என எனக்கு கேள்வி எழுந்தது. ஒருவேளை கேட்டு இருந்திருக்கலாம், அவளின் தாய் கைப்பேசியுடன் ஆழ்ந்த உரையாடலில் இருந்த காரணத்தினால் அவளின் சிந்தனை கேள்விகள் தாயின் செவிகளுக்கு சென்றிடாமல் இருந்திருக்கலாம். அவள் ஓர் நவீன தாயின் மகள் அல்லவோ, ஒருவேளை இதனை தானே புரிந்து கொண்டு, தனக்குத்தானே சிந்தனை மட்டுமே செய்துக் கொண்டிருந்தாள் போல.

சிவப்பு நிற ஒளி விளக்கு பச்சை நிறத்திற்கு மாறவே, மெதுவாக நகர்ந்தது, களைப்பில் நின்றிருந்த, நான் பயணிக்கும் பேருந்து, சில கடினமான ஒலிகளுடன். நான் அந்த சிறிய உள்ளத்தின் சிந்தனைகள் வீணாகிப்போன கசப்பு நிறைந்த காட்சியுடன் கடந்து சென்றேன், என் நினைவுகளையும் என்னோடு எடுத்துக் கொண்டு. பாவம், கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடனும், ஆசைகளுடனும் பல்வேறு பரந்த சிந்தனைகளை தனக்குள்ளேயே புதைத்து கொண்டும், இன்னமும் பல கேள்விகளின் பாரத்தை தன் விழிகளில் சுமந்து கொண்டும், தாயின் கையை இறுகப் பிடித்த வண்ணம், அங்கேயே நின்று கொண்டிருந்தாள். அவளின் சிந்தனை திறனும், விடை தேடும் ஆர்வமும் அங்கேயே சிறிது சிறிதாக தன்னைத் தானே கொன்று கொண்டிருந்தன.

ஒரு நவீன உலகில், நவீன மக்களின் நவீன பழக்கவழக்கங்கள் நவீனமாய் நவீனமயமாக ஒருபக்கம் வளர்ந்துக்கொண்டே, மற்றொரு பக்கம் மனிதனின் அறிவு முதிர்ச்சிக்கு முக்கிய காரணமாய் இருக்கும் சிந்தனை திறனையும், சிறிது சிறிதாக கொலை செய்து கொண்டிருந்தது…
“சிந்தனை கொலைகளாய்”
எதனையும் அறியாமல் நம்மை நாமே நவீனமயமாக்கிக் கொண்டே நாமும் பழியேற்கிறோம்…
“சிந்தனை கொலையாளிகளாய்!”…

படைப்பு: லூயிசா மேரி சா

சிறுகதை: 2 ‘அறிவியல் தீண்டாமை’

ஊரடங்கு காலத்தில் நமக்கு பழகிப்போன ஒன்று, பரபரப்பு இல்லாத காலை நேரம். குறிப்பாக சொல்லிக் கொள்ளும் வகையில் வீட்டில் எனக்கு எந்த வேலையும் இல்லை. நான் அரசுப் பள்ளியில் படிப்பதால் ஆன்லைன் வகுப்புகள் கூட எனக்கு இல்லை. அன்று மிகுந்த சோர்வுடனே எழும்பினேன். வெகு நேரம் தூங்கிக் கொண்டிருந்த அப்பாவை பார்த்ததும் ஓர் அசாதாரண உணர்வு ஏற்பட்டது. ஏனெனில் அவர், சீக்கிரம் எழுந்து வேலைக்கு தவறாது செல்லும் கழிவுநீர் சுத்திகரிப்பு கூலி தொழிலாளி. அவர் அருகில் சென்று விசாரித்ததில், அவரின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை அறிந்து கொண்டேன். அதிக களைப்புடனே இருந்தார். பொதுவாக கழிவுநீர் சுத்திகரிப்பு பணி என்பது மிகவும் கடினமான வேலை, இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் கொட்டித் தீர்த்த பெருமழை நகரத்தையே ஈரப்படுத்தி இருந்தது. என் அப்பாவை போன்று கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வோரின் நிலை கொடுமையானது, எண்ணிப்பார்க்க கவலையானதும் கூட. நேற்று மழையில் நனைந்து கொண்டே வேலை செய்ததை அம்மாவிடம் அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது, அது தான் அவரின் சோர்வுக்கான காரணமாக இருக்க முடியும்.


எங்கள் பகுதியில் வசிக்கும், அப்பாவுடன் வழக்கமாக சுத்திகரிப்பு வேலைக்கு செல்லும் குமார் அண்ணாவும், காளி அண்ணாவும் அப்பாவை எப்போதும் போல அழைத்து செல்ல வந்து விட்டனர். இவரோ இயலாத நிலையில் எழுந்து அமர்ந்தார். நானும் அம்மாவும், இப்போதைய நிலைக்கு அப்பா வீட்டிலேயே இருக்க வேண்டும் என விரும்பினோம். ஆனால் என்ன செய்வது, அப்பா சுத்தம் செய்து கூலி பெற்றால் தவிர எங்களுக்கு இன்று உணவில்லை. ஊரடங்கு நேரத்தில் யாரிடமும் கடனும் கேட்க முடியாது என்று அம்மா அடிக்கடி புலம்பிக் கொண்டு இருப்பார், இந்நிலையில் கடனும் வாங்க முடியாது. வேறு வழியின்றி அம்மா அரை மனதுடன் அப்பாவை வேலைக்கு கிளப்பினார். 


தட்டுத்தடுமாறி அப்பா எழுந்து நிற்கும் போது சட்டென்று எனக்கு தோன்றியது, இன்று ஒருநாள் அப்பாவிற்கு பதிலாக நான் வேலைக்கு செல்லலாமே என்று எண்ணி, உடனே அவரிடம் கேட்டேன். அவர் மனமுடைந்த கோப தொனியில், “டேய்! நீயெல்லா அத பத்தி யோசிக்கவே கூடாது! படிக்கிற வேலைய மட்டும் பாரு!” என்று அதட்டினார். என் அம்மாவும் அதற்கு ஆற்றல் ஏற்றும்படியாக, “அதெல்லா உனக்கு வேணாம் பா!” என்ற கலங்கிய குரலில் கூறினார். ஆனாலும் சற்று உறுதியுடன், “அப்பா! இன்னைக்கு மட்டும் தானே, உங்களுக்கு ரொம்ப உடம்பு சரியில்லயே! நா அவ்வளோ வேல செய்ய மாட்ட, அனுப்பு பா!” என்று நம்பிக்கை கூறினேன். வெகு நேர பேச்சுக்கு பிறகு, இருவரும் என்னை அனுப்ப அனுமதித்தார்கள் வருத்தத்துடன்.

அப்பா உள்ளிருந்தபடியே, “குமாரு! கான்ட்ராக்டர் கிட்ட சொல்லிட்டு என் பையன‌ கூட்டிட்டு போடா! எனக்கு உடம்பு சரியில்ல!” என்றார். உடனே, “அண்ணா, சின்ன பையன்னா! ஸ்கூல் போற பையன போய்…..!” என்று இழுத்து பேசினார் குமார் அண்ணா. நான் சற்று ஆர்வமுடன் குறுக்கிட்டு, “நானும் வர்றேன் அண்ணா, ஸ்கூல் லீவு வீட்ல சும்மா தா இருக்க!” என்றேன். பக்கத்தில் நின்றபடி என்னை மேலிருந்து கீழ் பார்த்தவாறு, “பெரிய பையனா தா தெரியிறான், இன்னைக்கு கூலி வேணுமே! கூட்டிட்டு போலாம்!” என்றார் காளி அண்ணா. மூவரும் வேலைக்கு புறப்பட்டோம்.

நான் இதுவரை இதுபோன்ற வேலைகளை செய்ததில்லை, ஆனால் செய்வோரை பார்த்திருக்கிறேன். என் அப்பா சொல்லும் போது பலமுறை கேட்டும் இருக்கிறேன். கழிவுநீர் சுத்தம் செய்வது அத்தனை கடினமா என்ன, குப்பைகளை அள்ளி போட வேண்டும் அவ்வளவுதானே என்று எனக்கு நானே நினைத்து கொண்டு சென்றேன். வரிசையாக இரண்டு மூன்று பேராக வேலைப்பார்த்து கொண்டிருந்தனர். உள்ளே ஒருவர் இறங்கி குப்பைகளை அள்ளி வெளியில் இருப்பவரிடம் கொடுத்தார், வெளியே இருப்பவர் அதனை சேர்த்து சுத்தம் செய்தார். இவ்வாறு மாறி மாறி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அனைவரும் தாங்கள் அணிந்திருந்த உடைகளை கழற்றி விட்டு, சாக்கடை அள்ள பிரத்யேகமாக குறிக்கப்பட்ட கால் டவுசர்களை அணிந்து கொண்டு உடல் எங்கும் ஈரமான நிலையிலேயே நாள் முழுதும் வேலை செய்யவேண்டும். சாக்கடைக்குள் இறங்கும் போதும் குப்பைகளை வெளியேற்றும் போதும் யாரும் மூக்கையோ, வாயையோ மூடிக்கொள்ள முடியாது. ஆனால் எங்களை கடந்து செல்லும் ஒவ்வொருவரும் மூக்கையும் வாயையும் மூடிக் கொள்ள மறக்கவே இல்லை. அதனை பார்க்கும் போது தான் நாங்கள் செய்யும் தொழில் எத்தனை துர்நாற்றம் நிறைந்தது என்று எங்களால் ஆழ்ந்து உணரமுடிந்தது. ஆம், நாங்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் தொட தகாதவர்கள், கடினமான வேலை, கடுமையான நிலை என கவலைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இருக்கட்டும், என்னை போன்ற சாக்கடை அள்ளுவோரின் குடும்பங்களுக்கு தேவையானதெல்லாம் அன்றைய நாளின் உணவுக்கான கூலி மட்டுமே, அதற்கு தான் இத்தனை கொடுமையான சகிப்புகளையும் தாங்கி கொண்டு இருக்கிறோம் என்று எனக்கு நானே சலித்து கொண்டேன். 

இதற்கிடையில் குமார் அண்ணாவும் காளி அண்ணாவும் உடைகளை மாற்றி கொண்டு தயாராகினர். நானும் உடை மாற்ற முற்பட்ட போது இருவரும் என்னை தடுத்து நிறுத்தி, “வேணா டா தம்பி! நீ ஒருபக்கமா சும்மா நில்லு, நாங்க பாத்துக்குறோம்!” என்றார் குமார் அண்ணா. நான் சாக்கடைக்கு அருகில் ஒரு ஓரத்தில் நின்று கொண்டேன். இருவரும் ஒருவர் மாறி ஒருவராக நீண்ட நேரமாக கழிவுகளை சுத்தம் செய்தனர், சிறிது நேரம் சென்றதும், “தம்பி! போய் மூனு பேருக்கும் டீ வாங்கிட்டு வா டா!” என்றபடி கையில் சில்லறை கொடுத்து அனுப்பினார் காளி அண்ணா. 

பக்கத்து தெரு முனையில் இருந்த ஒரு கடையில் டீ வாங்கி கொண்டு திரும்பினேன். நாங்கள் இருந்த இடத்தில் திடீரென சேர்ந்த கூட்டத்தின் சலசலப்பு. நான் நின்றிருந்த அதே இடம் தான், அவசர அவசரமாக அனைவரும் அசைத்தபடி இருந்தனர். அதிர்ச்சிகள் நிறைந்த பேச்சு சத்தங்கள், அலறலும் கூட கேட்டது எனக்கு, அருகில் செல்ல செல்ல அதிகமானது என் இதய துடிப்பு, அச்சம் என் ஆழ் மனது வரை  பரவி கொண்டிருந்தது, என் முகம் முழுதும் அச்சத்தில் நிறைந்து போனது. கண்கள் கலங்கிய நிலையில் பதற்றம் பெருக பெருக அருகில் சென்று பார்த்தேன், குமார் அண்ணாவை சாக்கடை குழிக்குள் இருந்து இருவர் வெளியேற்றினர். காளி அண்ணா தலையில் அடித்து கொண்டு புலம்பிக் கொண்டிருந்தார். சாக்கடைக்குள் இறங்கிய குமார் அண்ணா விஷ வாயுவினால் மூச்சு திணறி மயங்கி கிடந்தார். இப்போது மூச்சற்ற நிலையில் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார், காளி அண்ணாவும் அவருடன் ஏறிச் சென்றார். பதற்றத்தில் என்னை அவர்கள் மறந்து விட்டனர். நடப்பதறியாத நிலையிலும், அச்ச நடுக்கத்துடனும் நின்றேன், இன்றைய கூலி கிடைக்காத காரணத்தால் வெற்று கைகளுடன் வீடு திரும்பினேன். 

நான் வீட்டிற்கு வரும் முன்பே, குமார் அண்ணா வழியிலேயே மரித்து போனார் என்ற அவல செய்தியினை அப்பா சொல்ல கேட்டு உடைந்து போய் நின்றேன். அவரின் இந்த இழப்பு மிக குறுகிய நேரத்தில் என் கண்முன்னே நடந்து முடிந்ததை எண்ணி அடக்க முடியாத அழுகை வந்தது. உடைக்கப்பட்ட என் மனதினுள் இனம் புரியாத கோபமும் குமுறலும் என்னை நிம்மதியாக இருக்க விடவில்லை. இந்நிலைக்கு யார் காரணம்? பாதுகாப்பு இல்லாமல் வேலை செய்யும் கூலி தொழிலாளர்களா? பாதுகாப்பு கொடுக்காமல் வேலையை மட்டும் உறிந்து எடுக்கும் மேல்நிலை அதிகாரிகளா? காலம் காலமாக இது போன்ற இழிவான வேலைகளுக்கு மறுப்பு கூறாமல் உழைத்து கொண்டிருக்கும் ஏழை மக்களா? பணத் தேவைக்காக மறுப்பு கூறமாட்டார்கள் என்பதற்காக, கழிவுநீர் அகற்ற எந்த மாற்று வழிமுறைகளும் செய்யாத சுயநலவாதிகளா? இன்னமும் எத்தனையோ கேள்விகள் என் மனவலியை அதிகப்படுத்தி என்னை கொன்றது போல அப்பாவுடன் நின்று கொண்டிருந்தேன்.

“நா தான் போக வேண்டியது, எனக்கு பதில் அவன் போய்ட்டா!” என்று அப்பா புலம்பியதும் நினைவுக்கு வந்தது, குமார் அண்ணா இன்று ஒருநாள் செய்த அந்த வேலை, இத்தனை நாட்களாக என் அப்பா செய்து கொண்டிருந்த அதே வேலை. குமார் அண்ணாவுக்கு நேரிட்ட அவலம் இன்று என் அப்பாவுக்கு நேர்ந்திருக்க வேண்டியது. இன்று ஒரு ஏழை மகன் தன் தகப்பனை இழப்பதற்கு பதிலாக, ஒரு ஏழை தகப்பன் தன் ஒரே மகனை இழந்து விட்டார். இத்தனையும் திரும்ப திரும்ப என்னை வேதனைக்கு தள்ளிக் கொண்டிருந்தது. 

சில நாட்களுக்கு பிறகு, “மனிதனை விண்வெளிக்கு அனுப்ப ISRO மேற்கொண்ட, அடுத்த கட்ட விண்வெளி ஆராய்ச்சி வெற்றி!” என்ற செய்தியினை பக்கத்து வீட்டு டிவியில் ஒளிபரப்பாக கேட்டுக் கொண்டிருந்தேன். நாடே பெருமிதம் கொள்கிறதாம், தேசபக்தர்கள் அனைவரும் ஏதோ அவர்களே சாதனை புரிந்தவர் போன்று புகழ் பாடினார்களாம். உலக நாடுகளின் மத்தியில், விஞ்ஞான வளர்ச்சிகளை போட்டி போட்டு பேசிக் கொண்டிருக்கும் நம் நாட்டில் தான், கழிவுநீர் சுத்திகரிக்க இன்னமும் மனித உயிர்களை பயன்படுத்தி பலியாக்கி கொண்டிருக்கிறோம். இன்னும் எத்தனை உயிர்கள், எத்தனை ஏழை குடும்பங்கள், எத்தனை தான் இந்த இழி சாவுகள்? நம் சமூகத்தில் சாக்கடை இறப்புகள் பெருகிக் கொண்டே போகும் நிலையில், இன்னும் எத்தனை நாட்கள் தான் நமது விஞ்ஞான வளர்ச்சி மனிதனே இல்லாத வெற்றிடத்தில் ஆராய்ச்சி செய்யுமோ! காலி இடத்தை பற்றி சிந்திக்க எத்தனை அறிவியல் அறிஞர்கள், சமூக வளர்ச்சி பற்றிய சிந்தனை அற்ற அறிவிலிகள் அவர்கள்தான். அறிவியலும் தீண்ட மறுக்கிறது எங்கள் இழிவான நிலைமையை, அறிவியல் தீண்டாமையினால்.

இன்றைக்கும் கூட என் அப்பா கழிவுநீர் சுத்திகரிக்க தான் சென்றிருக்கிறார், எங்கள் ஒரு நாள் உணவுக்காக தன் உயிரை பணயம் வைத்து சென்றிருக்கிறார். என் மனம் முழுதும் ஒரே புலம்பல் தான், நாடு வளரட்டும் நாங்கள் மரித்து போகையில்.


(கடந்த பல வருடங்களாக கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் பணியாளர்களின் நிலை இது, நாம் அதிகம் கவனிக்க மறக்கும் சமூக பிரச்சனை)


– லூயிசா மேரி சா

சிறுகதை: 1 ‘டப்டப்’

‘டப்டப்’ ‘டப்டப்’ என்ற ஓயா சத்தம், இரைச்சலாய் இருந்தாலும், இலவசமான இசையாய் தெரிந்தது எனக்கு. வேறு ஒன்றும்  இல்லை, மழையின் துளிகள் அனுமதியின்றி என் வீட்டுக் கூரையின் ஓட்டையின் வழி தரையில் கொட்டிக் கொண்டிருந்தன. என் தனிமைக்கு துணையாக வந்த அழையா விருந்தினர். என் நினைவுக்கு மெருகு சேர்க்க வந்த இயற்கையின் கட்டாய இன்பம். இன்னும் நிற்கவில்லை ‘டப்டப்’ ‘டப்டப்’ என்ற ஒலியின் அதிர்வுகள். அவற்றின் ஒலி வேக மாறுதல்கள், மழையின் நிலையை யூகிக்க உதவின. சற்று அதிக வேகமாக கொட்டினால், மழை அதிகம் என்றும், குறைவாக ஒலி எழுப்பினால் மழை குறைந்ததென்றும் கணிக்க முடிந்தது.

இந்தமுறை சிறிது மிக அதிகமாகவே கொட்டிக்கொண்டிருந்தன. நேரம் வழக்கம் போல் காரணம் புரியாமல் கடந்து தீர்ந்தது. நானும் நினைவலைகளின் தூரத்தை சற்று அதிகமாகவே கடந்து தீர்த்தேன். ஆனால் ‘டப்டப்’ என்ற சத்தத்தின் வேகம் குறைவதாய் தோன்றவில்லை எனக்கு. சிறிது கவணித்துப் பார்த்த பின்பே கண்டேன், துளிகளின் வரத்து மிகுந்து இருந்தது. என்னதான் அடைக்கலம் கொடுத்தாலும், இப்படி அதிக அளவிலா வருவது? என் மனசிந்தனை என் ஒப்புகை இன்றி சிந்தித்துக்கொண்டிருந்தது.

சரி போகட்டும், என நினைத்துக் கொண்டு ஆழ்ந்து சிந்தித்துப் பார்தேன். என்னதான் மழைத்துளிகள் வரமாக இருந்தாலும், அவை மாடி வீடுகளை தேடிப் போவதில்லையே! பாவம், என்னைப் போன்றோர் வீடுகளை தான் தேடி வருகின்றனவே! தேடி வருபவரை தடுப்பது பண்பாட்டுக்கு அநீதி இழைப்பதல்லவா? என்னதான் மழைத்துளிகள் செல்வமாக கருதப்பட்டாலும், அவை கோபுரங்களில் பட்டு கடந்து விடுகின்றனவே தவிர, இங்குத் தங்குவதைப் போன்று அங்கு தங்கிச் செல்வதில்லையே! அடைக்கலம் நாடி வருபவரை துரத்தி அனுப்புவது நாகரீக தீங்கு அல்லவா?சிறிது நேரம் அமர்ந்துக் கொண்டு கண்களை மூடினேன், ஓய்வு எடுக்க. காரணம் கால் கைகளை நீட்டி இளைப்பாற இடம் போதாமல் போனது, இந்த மழைத்துளிகளின் குடியேற்றத்தால். நான் அமர்ந்திருக்கும் இடம் தவிர மற்ற இடங்களை மழைத்துளிகளுக்கு அடைக்கலம் அளித்து இருந்தேன். 

‘டப்’ என்ற பெருத்த ஒலி, மிக அருகில் கேட்டது. கண்களை திறந்துப் பார்த்தேன், பெரிய துளி ஒன்று நேராக என் நெற்றியின் மேல் விழுந்தது. சற்று இடைநிறுத்தத்துக்குப் பிறகு, மீண்டும் ஒன்று, அதனைத் தொடர்ந்து மற்றொன்று, மேலும் ஒன்று, அதற்குப் பின்னும் ஒன்று என நெற்றி நனைத்து, மூக்கையும் நனைத்து, முழுமுகத்தையும் நனைத்தது. என்ன செய்வது, மழைத்துளிகள் உயர்ந்த இடமிருந்து வந்தாலும், அவை செழிப்பானவரிடம் இவ்வாறு முழுமுகம் தழுவி விளையாடுவதில்லையே! பாவம், என் போன்ற ஏழை முகங்களைத் தழுவி தழுவி அன்பை வெளிப்படுத்துகின்றனவே! ஒருவர் அன்பை வெளியிடும் போது, அதனை மறுப்பது நலமாகாது அல்லவா? மீண்டும் நெற்றி நனைத்த ஈரப்பதம் கால் விரல்களையும் அதே முறைக்கொண்டு தழுவின. என்னதான் மழைத்துளிகள், வளங்கள் பல படைத்தாலும், அவை பொருள் படைத்தோர் கால்களை தழுவுவது இல்லையே! மாறாக, என் போன்ற எளியோரின் கால்களைத் தழுவுகின்றனவே! ஒருவர் நம்மிடம் பணிந்து நடக்கையில், அதனை அலச்சியம் செய்வது, மரியாதைக் குறைவாய் கருதப்படும் அல்லவா?

‘டப்டப்’ ‘டப்டப்’ இங்கும் அங்கும், மீண்டும் அங்கும் இங்கும், கதவின் ஓரத்தில், நாற்காலியின் மேல், கட்டிலின் பக்கவாட்டில், சுவற்றின் மேற்பரப்பில்,       அங்கும் இங்கும், மீண்டும் இங்கும் அங்கும், அதே ஓயா ‘டப்டப்’ ‘டப்டப்’ வெகு நேரம் சென்ற பின்பு, துளிகளின் சிதறல் வேகம் சிறிது சிறிதாய் குறைந்தது.

மழைத்துளிகளின் அழையா வருகை சிறிது சிறிதாய் நின்றது. சற்று அமைதியான சூழல், எதையோ இழந்தார் போல. சில நேரம் கழித்து, ‘டப்’ என்ற தனித்த ஒலி. மழை நின்று போனது. மீண்டும் தனிமை, மீண்டும் மன நினைவலைகளின் தாக்கங்கள், மீண்டும் கண்களை மூடி, ஓய்ந்திருந்தேன். ‘டப்’ இன்னும் ஒரு தனித்தத் துளி கடைசியாய் வந்து, என்னை தட்டியது. கண்களை திறந்துப் பார்த்து மீண்டும் மூடினேன். பொழுது விடியும் வரை!… 


படைப்பு : லூயிசா மேரி