சிறுகதை 6 : “டீக்கடைக்குப் போலாமா?”

“டீக்கடைக்குப் போலாமா?”
ஓய்ந்து தீர்ந்த மழையில் நனைந்து தீர்ந்த துணிகளை சலிப்புடன் காயவைக்க முயற்சித்து கொண்டிருந்த தன் மனைவியிடம் மெல்லிய குரலில் கேட்டான்.

“டீக்கடைக்கு? இந்த மழையில? ம்ம்ம்!”
என்றபடி மீண்டும் வேலையை தொடர்ந்தாள் அவள்.

“நான் உன்ன டீக் குடிக்க கடைக்குப் போலாமா னு கேட்டேன்!”
என்று மீண்டும் வினவினான்.

“இப்போ எதுக்கு டீ கடைக்குப் போகனும்? வீட்லயே பால் இருக்கு, டீத்தூள் சர்க்கரை இருக்கு, டீப் போட்டுத் தர நானும் இருக்க! வேணும்‌ னா நீங்கக் கூட டீப் போட்டு குடிங்க! இதுக்கு எதுக்கு டீக்கடைக்கு?”
என்றபடி எழுந்து சமையல் அறைக்கு விரைந்தாள்.

விரைவாக அவனும் எழுந்து அவளை மறித்து, “ஐயோ! டீக் கடைனு சொன்ன வெறும் டீக்கடை இல்லமா!” என்று அவன் கூறி முடிப்பதற்குள்…

“ம்ம்ம்! சார் ஏதோ கத சொல்லப் போறீங்க… சரி சொல்லுங்க சார்!” என்று நின்றாள்.

“ம்ம்ம் கதையா?” என்று சற்று இழுத்து பேசுவது போன்று அவளின் அருகில் சென்று விவரிக்க துவங்கினான் அவன், “அமைதியான சாயங்கால நேரம்… இப்போதைக்கு எந்த வேலையும் நமக்கு இல்ல… மழை விட்டு ரோடெல்லாம் ஈரமா இருக்கு… ரொம்ப நாள் அப்பறம் மழை வருது, மண் வாசனையும் கூட வருது… நல்லா சில்லுனு காத்து… அப்பப்போ அதுக்கூட தெளிக்குற சாரல்… பூ, இலையில எல்லாம் நீர்த்துளி… மழையில நனஞ்சிட்டு சிறக உலர்த்திக்கிற பறவைங்க… இப்படி ஒரு குளிர்ச்சியான கிரீனிஷ் மொமண்ட்(Greenish Moment) இருக்கு… இந்த அழகான நேரத்தில… நீயும், நானும்…
நானும் நீயும் மட்டும் தான்!
எப்படியும், இங்க இருந்து டீக் கடைக்கு போக அட் லீஸ்ட் இருபது நிமிஷம் ஆகும்… அதோட, நம்மல யாருமே கவனிக்க போறது இல்ல… நாம‌ மட்டும் தான்! நமக்கே தெரியாம, நமக்கு நாமே கொடுத்துக்கிற நமக்கான டைம்… யாரும் பார்க்க மாட்டாங்க, நான் உன் கையப் பிடிச்சு…‌ நீ என் கையப் பிடிச்சுகிட்டும்… தெரிஞ்சும் தெரியாமலும், என் தோள் உன்ன இடிக்கும்… கொஞ்ச நேரம் கழிச்சு உன் தோள் என்ன இடிக்கும்…

இப்படியே நீயும் நானும் போகும் போது, இவ்வளவு நேரம் மழைக்கு ஒதுங்கி இருந்த முன்பின் தெரியாத பறவைக் கூட்டம், மாலை நேரத்தில வீட்டுக்கு திரும்பி போகும், அந்த பறவையெல்லாம் உன்னையும் என்னையும் பார்த்து சிரித்துக் கிண்டல் செய்யறது போல நமக்கு தோனும்… நீ, அந்த ‘V’ வடிவ(shape) பறவைக் கூட்டம் வானத்தில பறக்குறத பார்த்திட்டு… ஏதோ அதிசயத்த பார்த்தது போல ஆச்சரியமா என்னையும் பார்க்க சொல்லுவ… நானும் அத பார்த்திட்டு அப்படியே திரும்பி உன்ன பார்த்து ஒரு சின்ன ஸ்மைல் பண்ணுவேன்… நீயும் உடனே என்ன பார்த்து சிரிப்ப… போற வழியெல்லாம் எங்கெல்லாம் மரக்கிளை நம்ம தலைக்கு மேல இருக்கோ, அதையெல்லாம் இழுத்து அசைச்சு உன் மேல மழைத் தண்ணிய கொட்டி விடுவேன்… நீயும் என்மேல தெளிப்ப…

இப்படியே, டீக் கடைக்கு போய் ரெண்டு டீ சொல்லிட்டு, நான் உன் பக்கத்துல வந்து நிற்பேன்… ஏற்கனவே பெய்த மழையின் தாக்கமா, பக்கத்து மரத்துல இருக்க இலையெல்லாம், அடிக்குற குளிர் காத்துல, மழைத் தண்ணிய நம்ம ரெண்டு பேரு மேல பூ மாதிரி தூவி விடும்… உடனே நீ சிணுங்கி அப்படியே என் முழங்கைய இருக்கி பிடிச்சிக்குவ… குளிர்ந்த காத்துல… இனிமையான மாலை நேரத்துல… டீக்கடை ரேடியோல மழைக்கு அப்படியே பொருந்துற மாதிரி ஒரு அழகான பாட்டு ஓடிட்டு இருக்கும்… அங்கங்க ஈரம் சொட்டிக் கொண்டிருக்கும்…

“என்ன ஒரு அழகான நேரம் இது!” அப்படின்னு நீ சொல்லும் போது… நானும் “ம்ம்ம் ஆமா!” னு தலைய அசைப்ப… அப்போ,
“தம்பி! டீ எடுத்துக்கப்பா…” னு இன்னொரு குரல் கேட்டதும், நான் போய் ரெண்டு டீ -ய வாங்கிட்டு வந்து ஒன்ன உன் கிட்ட தருவேன்… அந்த டீ தீர்ந்து போறதுக்கு முன்னாடி, நீயும் நானும் ஒரு குட்டி வாழ்க்கைய வாழ்ந்து முடிச்சிடுவோம்…

மறுபடியும் வீட்டுக்கு அதே போல வருவோம்! யாருக்கு தெரியும் இன்னமும் நெறைய அழகான இனிமையான நிகழ்வுகள் கூட நடக்கலாம்‌…
அதான், டீக் கடைக்கு போலாம் வா! னு கூப்பிட்ட…

சரி சரி! இதெல்லாம் நான் ஏன் உன் கிட்ட சொல்லிட்டு இருக்கேன்!
போ… போய் டீ போடு! வீட்லயே குடிச்சிக்கலாம்!”
என்று விவரித்துவிட்டு மீண்டும் சென்று அமர்ந்து கொண்டான்.

“டீப் போடவா?” என்று கூறியபடி அருகில் வந்தாள்.

“ஆமா! நீதான டீப் போட போன… பால் இருக்கு, டீத்தூள் சர்க்கரை இருக்கு, டீப் போட்டுத் தர நீயும் இருக்க… வெளியில மழை வேற பெய்யுது… போமா! போய் சீக்கிரம் டீப் போட்டுத் தா!” என்றபடி அருகில் இருந்த புத்தகத்தை எடுத்து படிக்க துவங்கினான்.

“ம்ஹூம்! அதெல்லாம் முடியாது…” என்று புத்தகத்தை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டாள்.

“முடியாதா? அப்புறம் என்ன பண்ணப் போறீங்க மேடம்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

“வாங்க டீக் கடைக்கு போலாம்!” என்று சற்று மெதுவான குரலில் அழைத்தாள்.

கணவன் சத்தம் போட்டு சிரித்துக் கொண்டே, “ம்ம்ம்… சரி வா! டீக் கடைக்கு போலாம்…” என்றதும்

இருவரும் அந்த அழகு நிரம்பிய அமைதியும் இனிமையும் ததும்பிய மங்கிய மழைக்கால மாலை பொழுதினிலே இருவருக்குமான நேரத்தில் மெதுவாக நுழைந்து மூழ்கிப் போயினர்.
மழை நின்றிருந்தது… மேகங்கள் நகரத் துவங்கின… குளிர்ச்சி சூழ்ந்தது… தணிந்து போன சாலைகளில், அவர்களின் வாழ்க்கையின் அழகிய மணித்துளிகளில் நனைந்து போகத் துவங்கினர் இருவரும்.

மழையின் போது தேநீர் இனிமையா?
அல்லது
தேநீர் கோப்பைச் சேரும் மழைக்காலம் இனிமையா?

இன்னமும் தீர்மானிக்க முடியவில்லை நம்மால்…
இதுபோன்ற, நாம் நம் வாழ்வில் அனுபவித்திராத அழகிய மணித்துளிகளை யாருக்கும் சொல்லாமல் இந்த உலகம் தன்னகத்தே ரகசியமாய் புதைத்து வைத்திருக்கிறது. அதனைத் தேடி கண்டு அனுபவிப்பதே நம் வாழ்வில் அர்த்தம் சேர்க்கும். அதுவே வாழ்க்கையின் வெற்றியும் கூட… இதுபோன்ற அழகான தருணங்கள் கணவன் மனைவி இடையே மட்டுமல்ல… எந்த ஒரு உறவுக்கும் ஆழமாக பொருந்தும். பெற்றோர் பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள் என… எந்த உறவுக்குள்ளும் எளிதில் பொருந்திக் கொள்ளும்… இதுபோன்ற தருணங்களை அனுபவிக்க தெரிந்திருந்தால் மட்டும் போதுமானது.

தேநீர், மழை போன்ற இனிமைகள் மட்டுமல்ல…
தேனினும், மழலையினும் இனியான இன்பத்துளிகள் அளவுக்கு அதிகமாக பரவிக் கிடக்கும் உலகமிது!
தேடினால் காணமுடியும்!
ஆம் தேடுவோர் மட்டுமே காணமுடியும்!
வாழ்வில் மகிழ்ச்சிகளை தேடுவோராய் வாழ்வோம்!


படைப்பு: லூயிசா மேரி சா