பெறுநர் இல்லா கடிதம்! பாகம்-1

A close photo of a persons writing a letter with a pencil.

முன்னுரை:

கடிதம், மன்னர் கால ஓலைச்சுவடி துவங்கி இன்றைய மின்னஞ்சல் வரை பல தலைமுறைகளை ஆட்சி செய்து கொண்டு வருகின்ற மாபெரும் இணைப்புக்கருவி. கடிதத்தின் மூலம், நாம் நினைக்கும் ஒருவருடன் நம்மை இணைத்துக் கொள்கிறோம். கடிதம், உண்மையில் உள்ளத்துடன் நெருங்கி, மனதினை வருடி, சிந்தையையும் சற்று தொட்டு, எழுத்துக்களின் வழி நின்று உணர்வுகளை
வெளிக்கொணரும் ஒரு அழகிய செயல்முறை.

ஒருவர், எளிதில் வார்த்தைகளை வாயினின்று பேசி விடலாம். ஆனால், எழுத்து என்பது நேரம் எடுத்துக் கொள்ளும் ஓர் நீண்ட செயல்முறை. நம்மில் தோன்றும் உணர்வுகளுக்கு ஓர் உருவம் கொடுக்கும் படைப்பையே கடிதங்கள் என்று சொல்லலாம். இன்றைய கால சூழலில் கடிதங்கள் குறுகி, சமூக வலைத்தளங்களின் Short Messages & Comments ஆக மாறிப்போய் இருந்தாலும், ஏதோ ஒரு வகையில் இவை கடிதங்களின் குறுகிய வடிவில் உள்ளன என ஆறுதல் கொள்ளலாம். 

மேலும் பழமையையும், பழமையின் ஆழத்தையும் நாம் அவ்வபோது திரும்பிப் பார்ப்பது முக்கியமானதாகவே உள்ளது. நம் சமூகத்தில் கடிதம் இன்னமும் முக்கியமான இடத்தினை தான் பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு சிறு ஆதாரம், இப்போதும் கூட அலுவலக செயல்பாடுகளுக்கு
நாம் கடிதங்களையே பயன்படுத்துகிறோம். 

இலக்கியங்களை புரட்டிப் பார்த்தோம் எனில் பல தலைமைகளின் கடிதங்கள் தனக்கென தனி இடம் பெற்று உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை ஜவஹர்லால் நேரு அவரது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய 30 கடிதங்கள். அது மட்டுமின்றி காரல் மார்க்ஸ், அம்பேத்கர், ஆபிரகாம் லிங்கன், காந்தியடிகள், பகத்சிங், அண்ணா மற்றும் பல இலக்கியவாதிகளும், தலைவர்களும் கடிதங்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். மேலும் உலகம் முழுதும் பல வரலாற்றுத் தத்துவங்களும், புரட்சி முழக்கங்களும், சமூக சீர்த்திருத்தங்களும் இந்த கடிதங்கள் வழி பரிமாறப்பட்டவை என எண்ணிப்பார்க்கும் போது, நமக்கும் கடிதங்கள் உணர்வுகளை பரிமாற, எண்ணங்களை வெளிப்படுத்த உதவும் என்பதில் ஐயமில்லை.

‘பெறுநர் இல்லா கடிதம்!’ வழி எனது மனதின் சிறு உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முயற்சித்து இருக்கிறேன். கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன…

பெறுநர் இல்லா கடிதம்!

கடிதம் ஒன்று இருந்தால், அதற்கு அனுப்புநர் இருக்க வேண்டும். பெறுநரும் இருக்க வேண்டும், அந்த பெறுநருக்கு இருப்பிடம் என்று ஒன்று இருக்க வேண்டும். ஆனால் இந்த கடிதத்திற்கு பெறுநர் இல்லை, இருப்பிடம் இல்லை காரணம், அவர் இவ்வுலகில் எங்குமே இல்லை. இது பெறுநர் இல்லாத கடிதம்.

அப்பா! உனக்கு தான் இந்த கடிதம்.

அன்பாயிருந்த அப்பாவுக்கு,

சில கடினமான ஆண்டுகளுக்கு பிறகு, நாங்கள் நலம். அப்பா! நீ எங்களை பிரிந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டன. ஏனோ தெரியவில்லை, இத்தனை ஆண்டுகள் இல்லாத உன் இழப்பின் வலியும், நீ இல்லாமல், வாழ்வின் கடினமும் கடந்த சில நாட்கள் அதிகரித்த வண்ணம்
உள்ளது. நீ எங்களோடு இருந்த நாட்களின் நினைவுகள் அவ்வபோது வந்து கண்களை ஈரமாக்கிப் போகின்றன அப்பா! நீ எங்களுக்கு சிறந்த தந்தையாக இருந்தாய் என்பதை நாங்கள் உறுதியாய் நம்புகிறோம். உனக்கு சில எதிர்மறை பக்கங்கள் இருப்பினும், அவை எல்லாம் இப்போது நினைவுக்கே வருவதில்லை, நீ எங்களுக்கு தந்த ஒவ்வொரு அன்பும், அரவணைப்பும், பக்கத்துணையாய் நின்ற ஒவ்வொரு பொழுதும், ஆழமாய் மனதினுள் பதிந்துக்கிடக்கிறது அப்பா! இன்னமும் பதிந்துக் கொண்டே இருக்கிறது.

ஒருவேளை நீ இப்போது எங்களுடன் இருந்திருந்தால், எங்கள் வாழ்க்கை முழுமை அடைந்திருக்கும் போல தோன்றுகிறது அப்பா! எங்களின் படிப்பு, வேலைக் குறித்து நீ கேட்டு அறிய வேண்டும், அதனுடன் நாங்கள் பெற்ற ஊதியத்திலிருந்து உனக்கு செலவு செய்ய வேண்டும் போன்ற ஆசைகள் பெருகுகிறது…

நான் பிறந்த போது உன் உணர்வு என்னவாக இருந்திருக்கும் என்று எனக்கு தெரியாது. நான் தவழ்ந்து வளர்ந்த போது, நீ எனக்கு என்னவெல்லாம் செய்தாய் என்று நினைவில்லை, ஆனால் எனக்கு நினைவு துவங்கிய நாட்கள் முதல், நீ எனக்கு சிறந்த தந்தையாகவே இருந்திருக்கிறாய். அவற்றை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்க்கும் போது, ஒருவேளை இன்று நாங்கள் அனுபவிக்க இயலாத பல மகிழ்ச்சிகளை நீ எங்களுக்கு தந்திருப்பாய் போல அப்பா! ஆனால், அப்படிப்பட்ட அழகான நாட்கள் எங்களுக்கு அமையவில்லை, உன் இடத்தில் எங்களுக்கு வேறு
யாருமில்லை. 

உன் திறமைகளை நினைக்கும் போதெல்லாம், நான் வியந்து போனதுண்டு அப்பா! எனக்கு உன்னை முதன்முதலில் ஓர் மாபெரும் தச்சுக் கலைஞனாகவே தெரியும். இன்றும் கூட யாரெனும் ஒரு தச்சரையோ, மரவேலை செய்வோரையோ பார்க்கும் போது, உன் நினைவுகள் மரத்துகள்களைப் போன்று மனதின் மீது பதியும். அது அத்தனை மகிழ்ச்சி தரும். உன்னை போன்ற ஓர் நிழல், இடது கையில் உளியும் வலது கையில் சுத்தியலும் என, நீ செய்த அதே வேலையை செய்வதை பார்க்கும் போது, பெருமகிழ்ச்சியாக இருக்கும்.

எங்கேயாவது, சுத்தியல், உளி, ரம்பம், போன்ற தச்சுக் கருவிகளை பார்க்கும் போதெல்லாம், நீ கையோடே வைத்து திரிந்துக் கொண்டிருந்த உன் Tool Bag நினைவுக்கு வரும். நீ, ஒருவரையும் அந்த பையை நெருங்க விட்டதில்லை. உன் தச்சுக்கருவிகளின் மீது உனக்கு அதீத அன்பு. அதனுடன், நீ புதிதாக வாங்கிய மூன்று மின் கருவிகளை (Electronic Machines) எனக்கு நினைவிருக்கிறது அப்பா! ஒரு பெரிய பச்சை நிற நெகிழிப் பெட்டியினுள் மூன்று இயந்திரங்கள். அவற்றை ஆர்வமாய் எங்களுக்கு திறந்துக் காட்டி, ஒவ்வொன்றும் என்ன என்பதையும், என்னென்ன வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதையும், விவரித்தாய் நீ, கண்களில் அத்தனை மகிழ்ச்சிகளுடன். எல்லாவற்றையும் எங்களுக்கு எடுத்து காட்டினாய் ஆனால், ஒருபோதும் எங்களை கருவிகளை தொட்டுப் பார்க்க அனுமதித்ததில்லை. மேலும் நீ வீட்டில் இல்லாத நேரம், நாங்கள் அதை எடுத்து விளையாட மறந்ததில்லை.

உன்னுடைய வேலை செய்யும் இடம் (Workshop) எனக்கு அதிகம் பிடித்த இடம் அப்பா! அது உனக்கு தெரியாது. அந்த அறைக்குள், இருக்கும் உன் கைகளாலே செய்யப்பட்ட, பெரிய மற்றும் சிறிய மேசைகள், அவற்றின் அமைப்பு, அவற்றின் Drawers அதனுள் இருக்கும் சிறு சிறு பொருட்கள், அலமாரியில் இருக்கும் பாதி தீர்ந்து போனதும், புதிதாக வாங்கியதும் என வரிசைக்கட்டிய பெயின்ட் டப்பாக்கள், வார்னிஷ் பாட்டில்கள், என அறைதோறும் வண்ணங்களின் கலை நிகழ்ச்சிப் போலிருக்கும்.

உன்னிடத்தில் ஒரு தங்க நிறம் போன்ற Chemical Solution இருக்கும். அது ஒரு வகை ஒட்டும் கம் (Gum). ஒவ்வொரு முறையும் புதிய டின் (Tin) வாங்கும் போதெல்லாம் அந்த டின்னுக்குள் இருக்கும் குட்டி ஆச்சரியத்தை காணும்படி, எங்களை அழைப்பாய். நாங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு உன்
பக்கத்தில் வந்து அமர்ந்துக் கொள்வோம். நீ அந்த டின்னின் மேற்ப்பகுதியினை ஒரு சிறிய Screw Driver கொண்டு திறந்து, அதனுள் இருக்கும் வழவழப்பான Chemical Solution -ஐ மற்றொரு டப்பாவில் ஊற்றிவிட்டு டின்னில் தங்கியிருக்கும் ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து எங்களில் ஒருவருக்கு தருவாய், இன்னொரு Chemical Solution  டின்னையும் காலி செய்து அதனுள் இருக்கும் நாணயத்தை மீதமிருப்பவருக்கு தருவாய், அதிலும் ஐந்து ரூபாய் நாணயம் இருந்தால் நீ தப்பிப்பாய், மாறுதலாக
சிலமுறை இரண்டு ரூபாய் நாணயம் இருந்துவிட்டால் சண்டைக்கு நீ தான் பொறுப்பு. அந்த Chemical Solution  டின்னுக்குள் ஐந்து அல்லது இரண்டு ரூபாய் நாணயங்கள் இருப்பதற்கு காரணம் ஒரு வித தள்ளுபடி என்று எங்களுக்கு வளர்ந்த பிறகு தான் தெரிந்தது, ஆனால் அதை ஒரு Magic போன்று செய்துக் காட்டி எங்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறாய் அப்பா!

உண்மையில் எல்லா அப்பாக்களும் தம்தன் பிள்ளைகளுக்கு, முதன்மை கதாநாயகர்கள் தான். நீயும் எங்களுக்கு அப்படிதான் அப்பா!

உன் வேலை அறைக்குள் ஏற்கனவே பாதி வேலைகள் முடிந்தும், முழுமை அடையக் காத்துக் கொண்டிருக்கும் அறைகலன்கள் (Furniture), நீ பயன்படுத்தும் Carpentry tape, பேனாக்கள் இருக்கும் பெட்டி, அந்த பெட்டிக்குள் இருக்கும் பெரிய மற்றும் தட்டை வடிவ மஞ்சள் நிறப் பென்சில், அது போன்ற பென்சிலை முதலும் கடைசியுமாக உன்னிடத்தில் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். அது ஒரு
வித்தியாசமான பென்சில், கலைத் தொழில் செய்வோர் மட்டுமே பயன்படுத்தும் பென்சில் என்று நீ அடிக்கடி சொல்லுவாய்.

நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது, ஒரு நாள் அந்த பென்சிலை பள்ளிக்கு
எடுத்துச் செல்ல உன்னிடம் கேட்டேன். ஆனால் நீ, அதை நான் பயன்படுத்தக் கூடாது எனக் கடிந்துக் கொண்டாய். ஆனாலும், வழக்கம் போல, உனக்கு தெரியாமல் பென்சிலை பள்ளிக்கு எடுத்துச் சென்று சீன் போட்டது நினைவிருக்கிறது அப்பா! வகுப்பில் அன்று முழுதும் உனது பென்சில் கதை தான். அதே நேரம் அன்று வீட்டில் நீ பென்சிலை தேடியதும் நினைவிருக்கிறது…

அந்த அறையில் மற்றொரு முக்கியமானப் பொருளும் இருந்தது, அது ஒரு சின்ன அலுவலக பயன்பாட்டு டெலிஃபோன் (Telephone), அது உன் நண்பர் ஒருவர் உனக்கு கொடுத்தார் என்று கூறினாய். உண்மையில் அதுவரை டெலிஃபோனை நான் நேரில் பார்த்ததில்லை. கரு நீல நிறத்தில், வெள்ளை நிற பொத்தான்களுடன் (Buttons) கைக்கு அடக்கமாக இருந்தது. அதை எடுத்துக் காதில் வைத்தால் கிர்ர்ர் என்ற ஒலிக் கேட்கும், சற்று வினோதமான அனுபவம். அந்த ஃபோன் நீ வைத்திருந்த Nokia ஃபோன் போன்று இல்லை. எந்த எண்ணை தொட்டு காதில் வைத்தாலும் “எண்ணை சரிப்பார்க்கவும்” என்று கூறும். அதை கேட்க நானும் உன் மூத்த மகளும் பள்ளி விட்டு வந்ததும் மாறி மாறி கேட்டு மகிழ்ந்தோம். அது கம்ப்யூட்டர் குரல் என்பதையே நாங்கள் வளர்ந்த பிறகு தான் தெரிந்துக் கொண்டோம். 

நீ வைத்திருந்த ஒவ்வொரு சிறு சிறு பொருளும் ஒவ்வொரு குட்டிக் குட்டி அற்புதங்கள் போன்று தோன்றிய நாட்கள் அவை. அவற்றை நீ பாதுகாக்கும் விதம், கையாளும் நேர்த்தி, உனது கைகளின் அசைவுகள், உனது Pants பாக்கெட்டில் இருக்கும் இன்ச் டேப் (Inch Tape), சட்டைப் பாக்கெட்டில் இருக்கும் பேனா, மாதிரி வரைப்படங்களின் குறிப்புகள், நீ வேலை செய்யும்போது எடுத்து எடுத்து பயன்படுத்தி, மீண்டும் உனது காதின் மேற்புறத்தில் சொருகி வைக்கும் பென்சில், முந்தைய நாளின் வேலையின் போது, உனது இருக்கரங்களிலும் தற்காலிகமாக குடியேறி இருக்கும், மரத்தின் மேல் பூசப்பட்ட சிவப்பு நிற வண்ணப்பூச்சு, “அப்பா! உன் கையில் மருதாணி” என்று நாங்கள் கேலி செய்து சிரித்த தருணங்கள், ஒவ்வொன்றும் நிலை மாறாமல் நினைவிருக்கிறது அப்பா!

நமக்கு ஆயத பூஜை ஒரு வழக்கமாக இல்லாத போதிலும், உனது ஆயதங்களை மரியாதை செய்து, உன் நண்பர்களுடன் இனிப்பு, பழங்கள் பகிர்ந்து கொள்வாய் நினைவிருக்கிறது அப்பா! அப்படி ஒரு ஆயத பூஜை நாளில், உனது Workshop -னுள் அழையா விருந்தாளியாய் யாரும் இல்லா நேரம் பார்த்து நுழைந்து, பெயின்ட் டப்பாக்கள் அடுக்கி இருக்கும் அலமாரிக்கு சென்று, ஒவ்வொன்றாய்
தொட்டுப் பார்த்தேன். ஆம்! உனது பொருட்கள் மீது எனக்கு ஓயாத ஆர்வம். அதிலும் குறிப்பாக பெயின்ட் டப்பாக்கள் மீது தான். பெயின்ட் டப்பாக்களை வழக்கம் போல் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்த போது, அன்று எதிர்பாரா வண்ணம், அதின் ஒரு வெள்ளை நிற பெயின்ட் டப்பா சரியாக மூடப்படாத காரணத்தினால், என் மீது கொட்டி உடைகளில் வெள்ளை நிறத்தை நிரப்பியது. அன்று, பள்ளி சீருடையை வேறு அணிந்திருந்தேன், உடை முழுமையும் பாழாய் போனது. அப்போது எனக்கு
வந்த அச்சத்தின் அளவை சொல்ல இயலாது, அத்தனை பெரும் பயம் என் உள்ளத்தில்.

அந்த வர்ணஜாலத்தை உன் கண்களில் படாமல், நானே கழுவி விடலாம் என்று அதி புத்திசாலி போன்று எண்ணி, தண்ணீரை ஊற்றி ஊற்றி தேய்த்து கழுவிக் கொண்டிருந்தேன், நிறமும் போனதாய் தெரியவில்லை, நானும் விட்டதாய் இல்லை. பட்டென ஓங்கி விழுந்தது, நடு முதுகில் இடிப் போன்ற ஒரு அடி, உன்னிடமிருந்து தான் அந்த அடி. என்னை கழுவிக் கொள்ள அவசர அவசரமாக ஓடி வந்த நான், அறையில் இருந்த பெயின்ட் டப்பாவையும், கீழே கொட்டப்பட்ட பெயின்ட்டையும் அப்படியே மறந்து வந்து விட்டேன். இந்த வானரத்தனத்தை கட்டாயம் உன் இரண்டாம் மகள் தான் செய்து இருப்பாள் என்று நன்கு அறிந்த வண்ணமாய் வந்து எனக்கு அடியையும் தந்தாய். பின்பு, என்னைத் திட்டிக் கொண்டே நீயே பெயின்ட்டை வார்னிஷ் கொண்டு துடைத்து எடுத்தாய். அன்று, திட்டும் அதிகம், அடியும் அதிகம், வார்னிஷ் எரிச்சலும் அதிகம், பெயின்ட்டும் அதிகம் தான்.

இது போன்ற பல இனிமை ததும்பும் இன்பங்கள் நினைவிருக்கிறது அப்பா! இன்றும் கூட உனது ஒவ்வொரு அசைவுகளும் ஆழ்மனதினுள் தங்கிப் போய் கிடக்கின்றன. உனது விருப்பமான Workshop இன்று இல்லாமல் இருக்கலாம், நீ குழந்தைகள் போன்று பாதுகாத்து வைத்த உனது தச்சுக் கருவிகள் மொத்தமும் காணாமல் போய் இருக்கலாம், உனது தச்சுக் கலை உன்னோடே மறைந்துப் போய் இருக்கலாம் ஆனால், இன்னமும் நினைவுகளாய், பாடங்களாய், அனுபவங்களாய், அக்கரைகளாய், அரவணைப்புகளாய், இன்னமும் இனிமை மாறாமல் எங்கள் இதயங்களில் ஊன்றி கிடக்கிறது அப்பா! இன்றும் கூட ஏதேனும் மரக்கடைகளையோ, தச்சுக்கூடங்களையோ, தச்சர்களையோ, பார்க்கும் போது உன்னுடைய வற்றாத நினைவுகள் எங்களை வந்து நனைத்துப் போகும் …

அப்பா! நீங்கள் எங்களுக்கு தந்தது குறுகியக் கால அனுபவங்களாக இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் எங்கள் வாழ்வின் இறுதி வரை துணை நிற்கும் நீங்கா நினைவுகளாய்
உயிரோடு இருக்கும். 

நினைவிருக்கிறது அப்பா!
நினைவில், என்றும் இருக்கிறது!!

…தொடர்ச்சி அடுத்த பாகத்தில்

படைப்பு: லூயிசா மேரி சா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s