
“வரதட்சணை” வரன் + தட்சணை வரனுக்கு கொடுக்கப்படும் தட்சணை (வெகுமதி, பரிசு, உதவிக்கான சன்மானம்) ஆம், இதிலிருந்தே நாம் ஓரளவு தெரிந்து கொள்ளலாம். இந்த பெயர் காரணமும், பெயர்களும் வடமொழியிலேயே முழுக்க முழுக்க இருப்பதினின்று, “வரதட்சணை” என்ற சொல் தமிழுக்கு சொந்தமில்லை என்பதையும், தமிழர் மரபிற்கு பொருத்தமில்லை என்பதையும் ஆராய்ந்து பார்க்க முடியும்.
“சீதனம்” என்ற சொல் தமிழ் சொல்லாக நமக்கு தோன்றலாம். ஆனால் அதுவும் கூட, ஸ்திரீ(பெண்)+ தனம்(செல்வம்) என்று பிறக்கப்பட்ட வடமொழி சொல் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பண்டைய தமிழர் மரபிலும் பண்பாட்டிலும் இலக்கிய சான்றுகளிலும் கூட பெண்களின் திருமணத்தின் போது, பெண்களுக்கு சீர் செய்யும் வகையாக பொருட்கள் கொடுத்தனரே தவிர, மணமகனுக்கு வெகுமதியாகவோ, பரிசாகவோ கொடுக்க படவில்லை. எடுத்துக்காட்டாக, காப்பிய நூலான ‘சிலப்பதிகாரம்’ கூறும் கோவலன் கண்ணகி திருமண சீர்கள், அவர்களின் பொருள் வளத்திற்கு சான்றாக கூறப்பட்டனவே தவிர, அதனை ஒரு கட்டாயமான வழக்கமாக எங்கும் குறிப்பிடவில்லை ஆசிரியர். அன்றைய கால தமிழ் மக்கள் வரதட்சணை என்ற ஒரு வழக்கத்தை பழகி இருக்க வில்லை என்பதற்கு இலக்கியங்கள் சான்றாகும். இது போன்ற ஒரு வழக்கத்தை தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் சொல்லப்படவில்லை என்பது தெளிவாகிறது.
மற்றுமொரு கருத்து என்னவெனில், அன்றைய பெண்களுக்கு சொத்தில் பங்கு இல்லாததின் காரணமாகவும், அப்போதைய பெண்கள் வருமானம் ஈட்டமுடியாத நிலையில் வைக்கப்பட்டு இருந்ததினாலும், பெண்களின் கணவர் இல்லத்தை வேற்று இடமாக உணராமல், தன் இல்லம் போன்று உணரவும் அவர்களுக்கு சீர்வரிசை கொடுக்கப்பட்டது. அப்படி கொடுக்கப்பட்ட பொருட்கள் மீது அந்த பெண்ணே முழு உரிமை செலுத்தும் வண்ணம் பழகி இருந்தனர் அக்கால தமிழ் மக்கள் எனலாம். மேலும், நமது தமிழர் சமூகம் துவக்கத்தில் “தாய்வழி சமூகமாக” இருந்ததினால், பெண்களே அனைத்தின் மீதும் உரிமை உள்ளவர்களாய் இருந்திருக்க வேண்டும், அதன் அடிப்படையில் பெண்களுக்கு பொருட்கள் தந்திருக்க கூடும் என சிந்திக்க முடிகிறது.

இன்றைய வரதட்சணை முறையானது 19 ஆம் நூற்றாண்டில் தான் பரவலாக அறியப்பட்டு வந்திருக்க முடியும். நாமும் அதன்படி வசதிக்கேற்ப வரதட்சணை கொடுத்தும் பெற்றும் வருகிறோம். ஆனால், ஆதி தமிழரிடையே ஆண்களுக்கு வரதட்சணை கொடுக்கும் வழக்கம் இருந்தது இல்லை.
சமீபத்திய செய்திகளை பார்க்கும் போதும், படிக்கும் போதும், வரதட்சணை ஒரு கடுமையான சமூக பிரச்சனையாக, ஒரு கொடுமையான வன்முறையாக உருவெடுத்துள்ளது. இதில், வருத்தம் தரக்கூடியது என்னவெனில், நன்கு படித்த சமூகத்தில் முன்னேறிய நிலையில் அறியப்படும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான். படித்திருந்தாலும் இன்னமும் பெண்களின் உரிமைகள், அவர்களின் கணவர், பெற்றோர், உறவினரின் கைகளில் உள்ளது என்பது சமூகம் இன்னமும் முன்னேற்ற நிலையை அடையவில்லை என்பதை நன்றாக காட்சிப்படுத்துகிறது.

திருமணம் என்பது வணிகச் சந்தை போன்றும், திருமண வீட்டார் வணிகர்கள் போன்றும், வணிக பொருட்கள், விற்பவரிடமிருந்து வாங்குபவருக்கு இடம் மாறுவது போலவும், இறுதியில் வரவு செலவு கணக்கு பார்த்து திருமண பெண்ணை பொருளாக மதிப்பீடு செய்வது என மொத்தத்தில் திருமணம், ஒரு மிகப்பெரிய வியாபாரமாக நடந்து முடிகிறது இன்றைய சமூகத்தில்.
இது போதாது என திருமணம் முடிந்த பிறகும் ஒவ்வொன்றிற்கும் சீர் செய்ய பெண் வீட்டார் நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர். இங்கு பிரச்சனை, பொருள் தருவதோ வாங்குவதோ இல்லை. அது அவரவர் உரிமை சார்ந்த செயல்கள். ஆனால், அதுவே ஒரு சமூகத்தில் முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கப்படும் போது, பொருள் பலம் இல்லாத எளிய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். தன்னிடம் இல்லாத நிலையிலும், கடன் வாங்கி பெண் பிள்ளைகளின் திருமணங்களை முடித்து வைக்கின்றனர். காலம் முழுதும் கடன் தொல்லைக்கு தள்ளப்படுகின்றனர். இது சமூக கொடுமைகளில் ஒன்றும் கூட.
மதிப்பீடு செய்து கல்வியில் கூட பிரிவினை ஏற்படுத்த கூடாது என்று பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அதே மதிப்பீடு தான் இங்கு திருமண சீர் என்ற பெயரில் சமூகத்தை பழுதாக்கி கொண்டிருக்கிறது. அதிகம் எடுத்து வந்த பெண், குறைவாய் எடுத்து வந்த பெண். “அதிகம்” “குறைவு” என்று பேசும் போது, அங்கு ஒரு உயிருள்ள, உணர்வுள்ள, சம உரிமைகள் உள்ள பெண் மற்றும் அவளின் மதிப்புகள் மறக்கப்படுகின்றன. பொருளின் பெயரில், மறைக்கவும் படுகின்றன.

பெண்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் உரிமையை முழுமையாக பெற வேண்டும். பெண்கள், திருமணத்திற்கு முன்பும், திருமணமாகி கணவருடன் சேர்ந்து வாழும் போதும், வாழ்வின் எந்த சூழலிலும் தனக்கென்று ஒரு சேமிப்பை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தனது அவசரத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, “சேமிப்பை” தவிர வேறு நல்ல வழி இருக்க வாய்ப்பில்லை.
ஆம், குடும்பத்திற்காக தான் வாழ்கிறோம், குடும்பம் முன்னேற தான் உழைக்கிறோம், குடும்ப நலம் தான் நம் நலம். அதேபோல, நமக்கான நமது சேமிப்பு என்பது நமக்காக நாம் ஏற்படுத்தி கொள்ளும் நலம். அது எந்த வகையிலும் தன்னலமாக ஆகாது. அதுவும் ஒருவகையில் குடும்ப முன்னேற்றம் தான், குடும்ப நலம் தான். பெண்களே தனது முழு வாழ்க்கைக்கும் பொறுப்புள்ளவர்கள் ஆவார்கள். இன்றுவரை இல்லையெனில், இன்றுமுதல் பெண்கள் தனக்கான சேமிப்பை தானே செய்யவேண்டும். இது, திருமணத்திற்கு முன் மற்றும் திருமணத்திற்கு பின் என பெண்களின் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தும். அதன் மூலம் ஒரு பெண் தனது உரிமைகளை தற்காத்துக் கொள்ளலாம்.

வரதட்சணை வாங்குவது எப்படி தகுதியற்ற தன்மையாக பார்க்க படுகிறதோ, அதே போன்று அதனை கொடுப்பதும் தகுதி இழக்கும் தன்மை தான். அது தங்கள் உணர்வுள்ள பெண்பிள்ளைகளை உயிரற்ற பொருட்களுடன் சேர்த்து மூட்டை கட்டி அனுப்புவதற்கு சமம்.
பெற்றோர்களே, நமது பிள்ளைகளின் தகுதியும், திறனும் வாழ்வின் அறநெறிகளின் அடிப்படையில் தான் வகுக்கப்படுகிறது. எனவே, திருமணம் செய்து வைக்கும் பெயரில் வணிகம் செய்ய வேண்டாம். அதற்கு நமது சமூகத்தை பழக்கி விடுவதால், நமது சமூகத்தின் பல பெண்களை பலிகொடுத்து இழப்புகளை சந்திக்கின்றோம். அதற்காக நாம் ஒவ்வொருவரும் ஒருவகையில் காரணமாகிவிடுகிறோம். வரதட்சணையின் பெயரில் இழைக்கப்படும் வன்முறைகளை அடியோடு அழித்து விடும் ஆற்றல், நமது ஒவ்வொருவரிடமும் உள்ளது. இதுபோன்ற தீமைகளை சரிசெய்து, அறம் வளர்த்த தமிழ் மக்களாய் வாழ்வை நெறிப்படுத்தும் இடத்தில் நாம் இருக்கிறோம் என்று சிந்தனையில், உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து வைத்து கொள்வோம்.

சமூக பிரச்சனையான வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் குற்றமே. அந்த குற்றத்தை நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் கம்பீரமாக எதிர்த்து நிற்கிறது. அவற்றை அறிந்திருக்க வேண்டியது நம் ஒவ்வொருவருக்கும் தலையாய கடமையாக உள்ளது.
1961 ஆம் ஆண்டு வரதட்சணை தடுப்புச் சட்டம் (1984 இல் திருத்தப்பட்டது). வரதட்சணை வாங்குபவர்களுக்கு சிறைத் தண்டணைகளை கூடிய கடுந்தண்டணைகளை அளிக்கின்றது.
வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றமாகும்.
1. இக்குற்றத்திற்கு,ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
2. வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ.10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
3. வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
4. ஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498A (IPC Section 498A)
ஒரு பெண்ணை, அவளுடைய கணவன் அல்லது கணவரின் உறவினர்களில் ஒருவர் கொடுமைப்படுத்தினால் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்பட வேண்டும்.
இந்தப்பிரிவில் வரும் கொடுமைப்படுத்துதல் என்ற சொல் தரக்கூடிய பொருள் யாதெனில்;
1. ஒரு பெண்ணைத் தற்கொலை செய்து கொள்ளும்படி தூண்டக்கூடிய அல்லது அவளுடைய உயிருக்கு, உடலுக்கு அல்லது சுகத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு செயலைக் குறிக்கும் (அது உடலுக்கு அல்லது உள்ளத்துக்கு கேடுபயக்கக் கூடியதாகக் கூட இருக்கலாம்)
2. சட்ட விரோதமாக ஒரு சொத்தை அல்லது மதிப்புள்ள காப்பீட்டை அந்தப் பெண் மூலம் அல்லது அவளுடைய உறவினரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பெற வேண்டும் என்பதற்காக அல்லது அப்படி அவளால் அல்லது அவளுடைய உறவினரால் அப்படிக் கொடுக்க முடியவில்லை என்பதற்காக அந்தப் பெண்ணுக்குப் பொறுக்க முடியாத சங்கடங்களை உண்டாக்குவதைக் குறிக்கும்.

இந்திய தண்டனை சட்டத்தில் 1983ல் 498A என்ற பிரிவு இணைக்கப் பட்டு, கணவனும், அவனது உறவினர்களும் மனைவியை உடல் ரீதியாக அல்லது மனரீதியாகக் கொடுமைப் படுத்தினால், 3 ஆண்டுகள் வரை சிறை தண் டனை என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. முதன் முறையாக மன ரீதியான சித்ரவதை என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது. பிறகு 1986ல், 304B என்ற பிரிவு வரதட்சணை சாவு குறித்துக் கொண்டு வரப்பட்டது.
குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டம் என்ன சொல்லப்படுகின்றது என்றால் ஒரு குடும்பத்திற்குள் எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த ஒரு பெண்ணும் தாயோ, மனைவியோ, சகோதரியோ, மகளோ எப்படிப்பட்ட உறவு இருந்தாலும் எந்த ஒரு ஆண் மகனும் அந்த பெண்ணை எந்த வித வன்முறைக்கும் அதாவது உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, சொத்து சம்பந்தமாகவோ எந்த விதத்திலும் அந்த பெண்ணை வன்முறைக்கு ஆளாக்க கூடாது, சித்ரவதை செய்யக்கூடாது, துன்புறுத்த கூடாது.
இத்தனை தண்டனை சட்டங்கள் இருந்தாலும், நாம் இன்னமும் பல உயிர்களை வரதட்சணை எனும் தீயில் தள்ளிக்கொண்டு தான் இருக்கிறோம். இப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்வது அவமானத்திற்குரியது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனை ஆழ்ந்து உணர்ந்து மாற்றம் செய்வோம்.

இன்றைய பெண்கள், அந்த கால பெண்களை போன்று இல்லாமல் தனது கணவரின் இல்லத்தின் வருமாத்திற்கும் பங்களிக்கிறார்கள். இன்றைய பெண்கள் அன்றைய பெண்கள் போன்று இல்லாமல், அறிவு பூர்வமாகவும் பங்காற்றுகின்றனர். இன்றைய காலகட்டத்தில், பெண்களின் “அறிவு செல்வம்” அவர்களின், கணவன்மார்களின் வீட்டுக்கு எடுத்து வரும் மாபெரும் கொடையாக கருதவேண்டும்.
திருமணம் என்பதை வெறும் பொருட்களின் இடமாற்றம் என்று எண்ணாமல், பல உணர்வுகளின் ஒருங்கிணைப்பு என்று கருதவேண்டும். உறவுகளே அனைத்திலும் மேன்மையாக மதிக்கப்பட வேண்டும். பொருள்களின் மீதுள்ள முக்கியத்துவத்தை குறைக்க வேண்டும். உறவுகளும் உணர்வுகளும், பெரும் சக்திகளாக திருமண நிகழ்வுகளில் நிறைந்திருக்க வேண்டும்.
இவையெல்லாம் தேவையில்லை, திருமணத்திற்கு “வரதட்சணை” தான் தேவை என்று பிடிவாதம் பிடித்தால், வேறு வழியே இல்லை, அப்படிப்பட்டவர்கள் தாங்கள் திருமணம் செய்யும் தகுதியை இழக்கின்றனர், குடும்பத்தைக் கட்டி எழுப்பும் திறனை இழக்கின்றனர், முக்கியமாக திருமணம் என்ற பெயரில் வியாபாரம் செய்கின்றனர். அவர்களே சமூகத்தை அழிக்கும் கொள்ளை நோய்கள்.
வரதட்சணை தவறான வணிகமாகும்…
அது குற்றமாகும்!
வரதட்சணை குற்றமே!
படைப்பு: லூயிசா மேரி சா
😁🤝🏼
LikeLiked by 1 person
Well said👌👌Keep rocking 🥳🥳
LikeLiked by 1 person
😍🤩🤝🏼 Thank you Ashmiya ❤️
LikeLike