
‘மகளிர் தினம்’ வந்தாலே போதும் உலகமே ஒருங்கிணைந்து பெண்ணினத்தின் அருமை பெருமை சாதனைகளை பட்டியலிட்டபடி போற்றி முடிக்கும் இந்த ஒரு நாளுக்கு மட்டும். ஆண்டு முழுவதும் இம்மாதரசிகளின் செயல்களுக்கெல்லாம் புகழ் பாடி முடிக்க இந்த ஒரு நாள் போதுமானது உலகத்தின் பார்வைக்கு. முக்கியமானது என்னவெனில், இந்த ஒரு நாளும் கூட வீட்டு வேலைக்கு விடுமுறை நாளல்ல நம் இல்லத்தின் தவப் புதல்விகளுக்கு. மேலும், ஒரு பெண்ணாக… தன் பெண் தன்மைகளை சுமந்து கொண்டு, பெண் குணங்களை தன்னுடன் எடுத்துக் கொண்டு, பெண்களின் பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றிக் கொண்டு பெண்களாய் இச்சமூகச் சூழலை சந்தித்துக் கொண்டு, பெண்களாய் குடும்ப பாதையில் பயணித்துக் கொண்டு, பெண்களாய் தனித்து நின்று கொண்டு, இன்னமும் பல மைல் தூர கடின வழிகளைக் கடந்து வளர்ச்சி காணும் தேவையும் அதிகம் இருக்கிறது உலகின் எல்லா பெண்களுக்கும்.
சரி சரி, இதையும் பெண்களை போற்றி பேசும் மற்றுமொரு கட்டுரை என எடுத்துக் கொள்ள வேண்டாம். அதே நேரம் ஆண்களை பழித் தீர்க்கும் வரிகளும் இவை இல்லை. பல காலமாக ‘பெண்ணியம்’ என்றதும் ஆண்களை பழிக்க ஒரு கூட்டம், பதிலுக்கு பெண்களை விமர்சனம் செய்ய மறு கூட்டமாய் பிரிந்து போய் கிடக்கிறோம். நம் சமூகத்திற்கு, ‘ஆண்களா? பெண்களா?’ என்பது போன்ற அர்த்தமற்ற தலைப்புகள் அதிகம் பழக்கப்பட்ட ஒன்று. இங்கு குறைபாடு ஆண் vs பெண் என்பதல்ல. எடுத்துக்காட்டாக, எந்த ஒரு சிறு கூட்டம், எந்த ஒரு பெரும் கூட்டத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அடிமையாக்கப் படுகிறதோ, அங்கு ஆளுகையும் அதிகாரமும் ஓங்கி நிற்கும். அப்போது, மனிதத்தன்மை எனும் ஆற்றல், சுரண்டப்பட்ட சிறு கூட்டத்துடன் நிற்க சொல்லும் நம்மை. அதுவே சமத்துவம்… அதுவே சரிசமம்… அதுவே நீதியும் கூட.
இக்கட்டுரையில் சற்று வேறு கோணத்தில் சிந்திக்க எண்ணம் எடுப்போம். “பெண்ணதிகாரம்” அதிகாரம் கொண்ட பெண்கள் பற்றியது போன்று தோன்றலாம். மாறாக இங்கு, ‘அதிகாரம்’ என்பதின் மற்றொரு பொருளான, ஒரு குறிப்பிட்ட பகுதி, தொகுதி அல்லது தலைப்பு என கொள்ளலாம். ஆம், பெண் கூட்டம் இச்சமூகத்தின் ஒரு முக்கிய பகுதி என்பதை நினைவூட்டும் வகையில் சிந்திக்க முற்படுவோம்.
சங்க இலக்கிய காலம் துவங்கி அதற்கு பின்பு சங்கம் மருவிய காலம் தொட்டு, இப்போது நடப்பில் இருக்கும் இலக்கிய காலம் வரை பல்வேறு பெண்களை கண்டும் கேட்டும் இருக்கிறோம். பெண்களின் பரிணாமம், பெண் அடிமைத்தனம், பெண் விடுதலை, பெண் வளர்ச்சி போன்ற அனைத்தும் பார்த்திருக்கிறோம், அறிந்திருக்கிறோம். ஆனால் இவற்றில் கூட தென்படவில்லை உண்மையான பெண் உணர்வுகள். இந்த உலக உயிர்க்கோளத்தின் நியதிப்படி பெண் என்பவளை பாலினம் கடந்து பார்க்கும் போது ‘பெண்’ மனித இனத்தின் ஓர் பகுதி, ஓர் தனிப்பட்ட உயிர்.
தற்போது ட்ரெண்டிங் படி பெண்கள் குறித்து வெளிவரும் கேலிக்கை, நகைச்சுவை பதிவுகள், இடுகைகள் சிலவற்றை மேற்கோள் காட்டி இன்றைய சமூகப் பார்வையை தெரிந்து கொள்ளலாம்.

இவை தானா பெண்கள் பற்றிய நம் எண்ணங்கள்? நம் இளைய சமூகம், புதிய சமூகம், வளர்ந்த சமூகம், மகளிர் தினங்களில் பெண்களை உருகி உருகி போற்றும் சமூகம் மற்ற நாட்களில், இந்த வகைகளிலெல்லாம் பெண்களை சித்தரிக்கிறது… சிரிக்கிறது. ஆண்கள் தங்கள் வாழ்நாளில் கண்ணாடி பார்த்து அலங்கரித்து கொள்ளாதது போலவும், பெண்களின் 24/7 வேலையே கண்ணாடி முன் நிற்பது போலவும், சமையல் வேலை பெண்களுக்கென எழுதி வைக்கப்பட்ட அடிமை/உரிமை சட்டம் போலவும், சமைக்க தெரியாத பெண்கள், பெண்களே இல்லை என்பது போலவும், சமையல் தெரிந்த ஆண்கள், ஏதோ ஆண்களின் குணங்களில் ஒன்றை இழந்தது போலவும், காதல் தோல்வி ஆண்களுக்கு மட்டுமே நிகழ்வது போலவும், அதற்கு பெண்களே… பெண்கள் மட்டுமே காரணம் என்பது போலவும், பெண்களுக்கு வலிகள் இல்லாதது போலவும், தாடி வளர்த்த ஆண்களுக்கே தோல்வி, வலி இருப்பது போலவும் என இன்னமும் நீட்டி கொண்டே போகலாம்.
பெண்களின் கரங்களில் நம் கலாச்சார பண்பாட்டின் மொத்த பொறுப்பும் கொடுக்கப்பட்டிருப்பது போல, மற்றவர்களுக்கு இந்த கலாச்சார கவலைகள் இருப்பது இல்லை. பெண்களை தவிர்த்து வேறு யாரையும் இந்த பண்பாடு, கேள்விகள் எழுப்புவதில்லை. இதுவரை நாமும் அவற்றை கண்டதில்லை! இது நாகரிகத்தில் வளர்ச்சி பெற்ற சமூகம், மறுமலர்ச்சிக்கு பெருமை பேசிக்கொள்ளும் சமூகம், மற்றும் பெண்களின் வளர்ச்சிக்கு கலாச்சார எல்லைக் கோடு வரைந்து கொண்டு இருக்கும் சமூகமும் கூட என்பதை மறக்க வேண்டாம்.
பெண்களை பொழுதுபோக்காக, போகப் பொருளாக, வியாபார சந்தை பொருளாக, கேலிக்கை உருவமாக வழங்கி கொண்டிருக்கிறது இன்றைய திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், நாடகங்கள், நகைச்சுவை வரிகள். இதற்கு குடும்பமே (பெண்கள், ஆண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்) சேர்ந்து சிரித்து தள்ளும் காட்சிகளும் நமக்கு பழகியவையே. இந்த சமூகத்தில், நாடகம் பார்ப்பதும் பெண்கள் தான், அவற்றில் வில்லி கதாபாத்திரங்களும் பெண்கள் தான், அழுத முகத்துடனே வாழ்நாளை கழிக்கும் கதாநாயகிகளும் பெண்கள் தான். சண்டையிடுவதும் பெண்களே… சதி திட்டம் தீட்டுவதும் பெண்களே… எல்லா தீமைகளும் ஆபத்துகளும் இந்த பெண்கள் மட்டும் தான். என்ன ஒரு கொடுமை, இத்தனையும் சிந்தனை செய்து, எழுதி, இயக்குவது மட்டும் பாவப்பட்ட ஆண்கள். இதிலும் ஒரு திருப்புமுனை என்னவெனில், குரல் உயர்த்தி கேள்வி கேட்கும் பெண்கள் எல்லாம் வில்லிகள். தன் உரிமையை போராடி பெற இயலாத அடிமை குணம் கொண்ட பெண்கள் கதாநாயகிகள். கொடுமை!
இது போன்ற அறிவுசார் இயக்குனர்கள் செய்து போன மற்றுமொரு சாதனை உண்டு. நம் சமூக குடும்ப உறவுகளுக்குள்ளே கலக நஞ்சை செலுத்தி போனது தான். குறிப்பாக மாமியார் மருமகள் என்ற இணையற்ற உறவை ஏறக்குறைய இரண்டு மூன்று தலைமுறைகள் எதிரிகளாகவே சித்தரித்த பேரும் புகழும் மேலே குறிப்பிட்ட அந்த அறிவுசார் இயக்குனர்களை சாரும். இதற்கு இடையில் ஒன்றை சிந்தித்து பார்ப்போம். மாமனார் மருமகன் உறவு, அவர்களுக்குள் சண்டை இல்லை சச்சரவு இல்லை காரணம் அவர்கள் ஆண்கள்… அப்படியா? இல்லவே இல்லை ஒன்றை நினைவில் கொள்வோம், முகத்தோடு முகம் நேருக்கு நேராக சந்திக்காத போது, அங்கு பேச்சுக்கே இடமில்லாத போது சண்டைக்கு எப்படி இடமிருக்கும்? சரி, சிந்தனைக்கு வருவோம். இவ்வாறான அரைக்குறை மனநிலைகளில் சில… ஒரு பெண் கணவன் வீடு சென்ற பிறகு தான் அந்த குடும்பத்தில் சண்டை வரும் என்பது போலவும். திருமணத்திற்கு முன் எல்லா ஆண்பிள்ளைகளும் தங்கள் பெற்றோரை சண்டை போட்டதும் இல்லை என்பது போலவும், காயபடுத்தியது இல்லை என்பது போலவும், தன் தாய் தந்தை பேச்சுக்கு இணங்கி இருந்தது போலவும், மனைவியே அவனை தீயவனாக இயக்குவது போலவும், இன்னமும் பல பழி சொற்களை ஒன்றன்பின் ஒன்றாக பெண்கள் மீது மட்டுமே சூட்டி கொண்டிருக்கிறது கடந்த சில தலைமுறைகள்.
மனித, மனிதியின் உணர்வுகளை, செயல்களை, செய்கைகளை பாலினம் கண்டு பிரித்து பார்க்கும் மனநிலை இன்னமும் நம்மை வளர்ச்சி திசைக்கு சற்று தள்ளியே நிறுத்துகிறது என்பது வருத்தமான ஒன்று. பெண்களின் மனதின் ஆழம் யாருக்கும் புரியாது, ஆண்களின் மனதின் ஆழமும் புரியாது இதில் வேறுபாடு இல்லை. பெண்கள் ஆசைகள் அதிகம் கொண்டவர்கள், ஆண்களும் ஆசைகள் அதிகம் கொண்டவர்கள் இதில் வேறுபாடு இல்லை. பெண்கள் அதிகம் அழுவார்கள், ஆண்களும் அதிகம் அழுவார்கள் இதில் வேறுபாடு இல்லை. குறிப்பிட்ட வேலை பெண்களுக்கானது… குறிப்பிட்ட வேலை ஆண்களுக்கானது… என்றில்லாமல், அவரவர் வேலை அவரவர் உடையது. தங்களுக்கு வேண்டிய வேலையை அவர்களே செய்து கொள்ளலாம் இதில் வேறுபாடு இல்லை. இன்றைய நவீன உலகில், திறமைக்கும், சாதனைகளுக்கும் பாலினம் இல்லை என்பதை உணர்ந்து அறிவோம். ‘பாலினம்’ என்பது, உயிரியல் வேறுபாடே தவிர உணர்வு வேறுபாடு இல்லை.


Love it lui! Write more!!! I think people should hear these things to know where they stand.
LikeLiked by 1 person
🥰🥰🥰 Thank you Nivi!
LikeLike
loved it❤ inspire more with ur writings luis😍 keep going🐘
LikeLiked by 1 person
😍🥰 Thank you Janani! Keep supporting me pa!
LikeLike
Very powerful dear 👏👏Keep rocking
LikeLiked by 1 person
😍😍🥰 Thank you Ashmiya!
LikeLike