
“வீட்டுக்கு போய் சேர வேண்டும்” முடிந்தவரை அதிக வேக விரைவில், வீடு திரும்ப வேண்டும். பழைய மாகாபலிபுர (OMR) பரபரப்பான பிரதான சாலையில், ஷேர் ஆட்டோவில் ஏறியது முதல் இப்போது இறங்கும் வரை, இரயில் ஏறுவது முதல் இரயில் இறங்கும் வரை மீண்டும் பிளாட் ஃபார்ம் கடந்து பேருந்தை பிடித்து வீடு சேரும் வரை, என் மனதில் துடித்துக் கொண்டிருக்கும் அந்த ஒரே வரி, “வீட்டுக்கு போய் சேர வேண்டும்”
காலையில் உறக்கத்தில் சிறிதளவு தியாகம் செய்துவிட்டு, காலை உணவை கூட புறக்கணித்து விட்டு, அம்மாவின் கேள்விக்கு கூட பதில் சொல்லாமல், அவசர அவசரமாக அலுவலகம் சென்று சேர வேண்டும் என ஓட துவங்கி, வேலை முடித்து திரும்பும் போது ஒரு முழு நாளுக்குரிய சோர்வையும் மன அழுத்தத்தையும் தவறாமல் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பல நடுத்தர பெண்களின் பிரதிநிதி நான்.
கடினம் தானே, இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும், வீடு முதல் அலுவலகம் வரை. மீண்டும் மற்றொரு இரண்டு மணி நேரம் வேண்டும், அலுவலகம் துவங்கி வீட்டை அடைய. இதற்கிடையில், அழுத்தம் தரும் வேலைகள், குழம்பிய நிலையில் சிந்தனைகள், விருப்பமில்லா உணவு இடைவேளைகள், சில நேரங்களில் அந்த இடைவேளைகள் கூட இல்லை, காரணம் பசியையும் மறக்க வைக்கும் பணி சுமைகள். இதனால் ஏற்படும் களைப்பின் கோபத்தையும், வெறுப்பையும் மறக்காமல் வீடு சேர்த்து தினம் தினம் அம்மாவை திட்டுவதற்கும், மனதை உடைப்பதற்கும் சற்றும் மறக்கவில்லை. அதனையும் பொருட்படுத்தாமல், என்னையும் என் சோர்வையும் நன்கு கையாள தெரிந்த அம்மாவின் உபசரிப்புக்கோ குறை ஏதும் இருக்காது.
இன்னமும் எத்தனையோ மன உளைச்சல்கள் நிறைந்த நேரத்தை எண்ணினால் வெறுப்பும் சலிப்பும் தவறாது ஒன்றன்பின் ஒன்றாக வந்து போகும். இவற்றிற்கெல்லாம் சேர்த்து ஒரே ஒரு ஆறுதல் தான். நான் அனுபவிக்கும் இதே அலுவலக அலைச்சலை என்னை போன்றே தினம்தினம் பல லட்சம் பெண்கள் அனுபவிக்கின்றனர், உதாரணத்திற்கு சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி செல்லும் பறக்கும் இரயிலை சாட்சிக்கு எடுத்து கொள்ளலாம். வாழ்க்கை பாடத்தை சில நேர பயணத்தில் சொல்லிவிடும் அந்த இரயில்.
எத்தனையோ பெண்களுடன் சேர்த்து, அவர்களின் மன சுமையையும் உள்ளத்தின் பாரத்தையும் சேர்த்தே சுமந்து செல்லும் அந்த இரயில். என்னை போன்றே ஒவ்வொரு வேலை செய்யும் பெண்களின் விடுதலை வழி அந்த இரயில். அந்த இரயிலை கண்டதும் நாங்கள் கொள்ளும் இன்பம் ஒப்பற்றது. அந்த இரயில் வந்து நின்றதும், அதனின் வாயில்கள் எங்களுக்கு சொர்க்க வாசல்கள் போன்றவை. காற்றை கிழித்துக் கொண்டு வந்து நிற்பதை காணும் போது, எங்களை விடுவித்து கூட்டி செல்ல வந்த விடிவெள்ளி போன்று காட்சியளிக்கும் அந்த இரயில். இறைவன் இரயில் வடிவிலும் வருவான் போல.
அதனை பிடிக்க நிற்கும் கூட்டத்தை பார்த்ததும் தெரிந்து விடும், நம்மால் ஏற முடியுமா முடியாதா என்று. முடியும் என்றால், நம்பிக்கையுடன் தயாராக நிற்போம். முடியாது என்றால், அதை விட நம்பிக்கையுடன் சற்று பலத்தையும் சேர்த்துக் கொண்டு, தயாராக நின்றிருப்போம். ஏனெனில், அனைவரின் மனதிலும் ஓடும் அந்த ஒரே வரி, “வீட்டுக்கு போய் சேர வேண்டும்”அடித்து பிடித்து, இழுத்து தள்ளி, கூட்டத்தினுள் புகுந்து உள்ளே நுழைந்து, இடத்தைப் பிடிக்க நாங்கள் படும் அவதி, ஐயோ! எங்களுக்கு மட்டும் தான் தெரியும்.
அது ஒரு அவஸ்தைகள் நிறைந்த தருணம். சிலருக்கு இருக்கை இருக்கும், சிலர் கொஞ்ச இடத்தைப் பகிர்ந்து கொள்வர், சிலர் பகிர விரும்ப மாட்டார்கள், சிலர் நம் பைகளை வைத்துக் கொள்ள கேட்பர், சில நேரங்களில் பாரம் தாங்காமல் நாமே பைகளை வைத்துக் கொள்ள சிலரை கேட்டுக் கொள்வோம், சிலருக்கு கைப்பிடி இருக்காது, சிலருக்கு நிற்க கூட இடம் இருக்காது, சிலர் சௌக்கியமாக நின்றிருப்பர், இன்னமும் அதிர்ஷ்டசாலி சிலருக்கு ஜன்னல் ஓரத்தில் காற்று வசதி கொண்ட அழகிய இடம் கிடைக்கும். சில நேரங்களில் நொந்து போய் வியர்த்து நின்றிருக்கும் நான், ஜன்னல் ஓர நபர்கள் வாங்கும் காற்றை நான் வாங்குவதாய் கற்பனையில் காற்று வாங்கி கொள்வேன். கூட்டம் அதிகமாக இருந்தால், கற்பனையில் கூட அந்த காற்று கிடைக்காது.
இருக்கமாக தான் நின்றிருப்போம். சிலர் ஒருவரை ஒருவர் பிடித்தும் கொள்வர். இன்னும் சிலர் ஒருவர் மீது ஒருவராய் சாய்ந்தே கொள்வர். என்ன ஒரு சகிப்புத் தன்மையும், ஒற்றுமை உணர்வும் எங்களிடத்தில். இத்தனையும் நடந்து கொண்டிருப்பது பெண்களுக்கான சிறப்பு பெட்டியில் தான். யார் சொன்னது பெண்ணுக்கு பெண் முரண் என்று? எல்லா பெண்களும் மற்ற பெண்களுக்கும் தாய் தான், சகோதரி தான், தோழி தான்.
ஐம்பது நிமிட பயணத்தில் எத்தனை எத்தனையோ கதைகள், எத்தனை எத்தனையோ வாழ்க்கை பாடங்கள். ஆனால், எங்களின் தற்போதைய நோக்கமெல்லாம் வீடு போய் சேர வேண்டும் என்பதே…
இரயில் பயணம் அழகானது, அர்த்தங்கள் கூட நிறைந்தது. மெதுவாக சென்றாலோ, வேகம் எய்தி சென்றாலோ இலக்கை சென்றடைந்து வென்று நிற்கும் இந்த இரயில். காற்றோ, மழையோ, வெயிலோ, புயலோ தடைகள் எதுவாக இருப்பினும், முயற்சி கொண்டு முன்னேறி சென்று அடையும் இந்த இரயில். நிற்க வேண்டிய இடமெல்லாம், சற்று நின்று தன் கடமைகளையெல்லாம் நிறைவேற்றி செல்லும் இந்த இரயில். பயணத்தின் போது, தனது வருகையையும் போக்கையும் சத்தமிட்டு பதிவித்து செல்லும் இந்த இரயில். களைப்பின் ஓர் சிறிய மகிழ்ச்சி இந்த இரயில். கூட்டத்தினுள் ஓர் அரிய அமைதி இந்த இரயில். உலக நெரிசல் கூச்சலினுள் ஓர் தாலாட்டுப் பாடல் இந்த இரயில். நாம் அமர்ந்து கொள்ள மடிதரும் அன்னை இந்த இரயில். நிற்க இடம் தரும் வள்ளல் இந்த இரயில். நம் துன்பங்களை கொஞ்சம் சுமந்து கொள்ளும் தோழமை இந்த இரயில். வாழ்வின் முக்கிய சில பாடங்களை கற்று தரும் ஆசான் இந்த இரயில். இன்னமும் பல… இன்னும் பல இந்த இரயில். மனிதனின் வாழ்க்கை பயணமும் இந்த இரயில் பயணம் போன்று தான். நாம் தான் இந்த இரயில்.
நானும் என்னுடன் என் பரபரப்பை பகிர்ந்து கொள்ளும் என் உடனிருக்கும் தோழி சாராவும் வழக்கம் போல நின்றுக் கொண்டு தான் பயணித்து கொண்டிருந்தோம், பல கதைகள் பேசிக்கொண்டு. அலுவலகத்தில் நடக்கும் அநீதி அக்கிரமங்களை குறித்தும் வினவிக் கொண்டிருந்தோம், திருவான்மியூர் ஜங்ஷனில் வாங்கிய சுண்டலை திண்றுக் கொண்டே. வேறென்ன செய்ய முடியும்? மீண்டும் மறுநாள் காலை அதே குறைகள் நிறைந்த அலுவலகம் தான் செல்ல முடியும். இதே புலம்பல் நாளை மாலையும் தொடரும், ஒவ்வொரு நாளும் தொடரும். இரயில் உள்ள ஒவ்வொருவரின் புலம்பலும் இதே தான். இதே அலுவலகத்தை குறித்த அலுப்பும் களைப்பும் தான்.
நாங்கள் தற்போது தான் கல்லூரி முடித்து, அலுவலக வேலையை துவங்கினோம். எங்களின் வீடுகளில் நாங்கள் ஒரு வேலையும் செய்ய போவதில்லை. ஆனால், எங்களுடன் பயணிக்கும் ஒவ்வொரு இல்லத்தரசிகளையும், தாய்மார்களையும் கவனிக்கும் போது, ஐயோ! மனதினுள் இன்னும் கனம் கூடிப் போகும். காரணம், அவர்கள் வீடு சென்றதும் மீண்டும் வீட்டின் வேலைகளையும் இரவுக்குள் முடிக்க வேண்டும். என்ன சாபமோ, இந்த பெண் பிறவிகளுக்கு. யார் வகுத்த கோட்பாடுகள் இவையெல்லாம். பெண்ணியம், பெண்ணுரிமை, பெண் முன்னேற்றம் என் பேசிப் பேசி வீட்டுக்குள் அடைந்து கிடந்த பெண்களை வேலைக்கு செல்ல அனுமதி பெற்று பெண்களின் பாரத்தை அதிகப்படுத்தி விட்டோமோ? இன்னமும் அலுவலக பெண்கள் வீட்டு வேலைகளையும் சேர்த்து செய்கின்றனர் மேலும் வீட்டு வேலைகளை செய்து விட்டு தான் அலுவலகம் சென்று வருகின்றனர். இவையெல்லாம் போதாதென்று, வீட்டிலும் அலுவலகத்திலும் மாறி மாறி அதே குறைப்பாடல்கள், அதே குற்றச்சாட்டுகள். இது “ஆணாதிக்கம்” என்று நான் சொல்லவே மாட்டேன். இது பெண்ணியத்தின் ஆதிக்கமற்ற தன்மை என கூறிக் கொள்ளலாம்.
ஆழ்மனதில் ஓர் அமைதி சூழல். ஆம், அடுத்த நிறுத்தம் சென்னை கடற்கரை நிறுத்தம். அனைவரும் இறங்கவேண்டிய இடம். எல்லாம் தங்கள் பைகளையும் உடமைகளையும் எடுத்து தயாராக இருந்தனர். சிலர், வேக வேகமாக வாயில் அருகே சென்று நின்றனர். சத்தம் குறைய குறைய மெதுவாக சென்று நின்றது இரயில். அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இறங்கினோம், எதையோ வெற்றிக் கொண்டது போன்று. ஆம், சென்னை கடற்கரையே தான். ஆஹா! தென்றல் இறகுகள் என்னை வருடியபடி வரவேற்றன. என் சோர்வை சற்று குறைத்து சென்றன.
விறுவிறுப்பாக பிளாட் ஃபார்ம் கடந்து நடந்து ஓடினேன் ஏனெனில், “வீட்டுக்கு போய் சேர வேண்டும்” வலதுகை கடிகாரம் காட்டியது, சரியாக மணி இரவு 8.55 …….
படைப்பு: லூயிசா மேரி
அருமையான பதிவு!!! Keep rocking yaar!
LikeLiked by 1 person
Thank you Nivi!!!❤️
LikeLike
பணிக்கு செல்லும் மகளிரின் அன்றாட அவதி ! இது மணமாகாத பெண்ணின் வாக்குமூலம்; மணமானவரின் வாக்குமூலம் இன்னும் கனமானதாக இருக்கும். அருமை.
LikeLiked by 1 person
மிகச்சரியாக சொன்னீர்கள்… நேரத்திற்கு நன்றி! 😇
LikeLike