
ஊரடங்கு காலத்தில் நமக்கு பழகிப்போன ஒன்று, பரபரப்பு இல்லாத காலை நேரம். குறிப்பாக சொல்லிக் கொள்ளும் வகையில் வீட்டில் எனக்கு எந்த வேலையும் இல்லை. நான் அரசுப் பள்ளியில் படிப்பதால் ஆன்லைன் வகுப்புகள் கூட எனக்கு இல்லை. அன்று மிகுந்த சோர்வுடனே எழும்பினேன். வெகு நேரம் தூங்கிக் கொண்டிருந்த அப்பாவை பார்த்ததும் ஓர் அசாதாரண உணர்வு ஏற்பட்டது. ஏனெனில் அவர், சீக்கிரம் எழுந்து வேலைக்கு தவறாது செல்லும் கழிவுநீர் சுத்திகரிப்பு கூலி தொழிலாளி. அவர் அருகில் சென்று விசாரித்ததில், அவரின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை அறிந்து கொண்டேன். அதிக களைப்புடனே இருந்தார். பொதுவாக கழிவுநீர் சுத்திகரிப்பு பணி என்பது மிகவும் கடினமான வேலை, இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் கொட்டித் தீர்த்த பெருமழை நகரத்தையே ஈரப்படுத்தி இருந்தது. என் அப்பாவை போன்று கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வோரின் நிலை கொடுமையானது, எண்ணிப்பார்க்க கவலையானதும் கூட. நேற்று மழையில் நனைந்து கொண்டே வேலை செய்ததை அம்மாவிடம் அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது, அது தான் அவரின் சோர்வுக்கான காரணமாக இருக்க முடியும்.
எங்கள் பகுதியில் வசிக்கும், அப்பாவுடன் வழக்கமாக சுத்திகரிப்பு வேலைக்கு செல்லும் குமார் அண்ணாவும், காளி அண்ணாவும் அப்பாவை எப்போதும் போல அழைத்து செல்ல வந்து விட்டனர். இவரோ இயலாத நிலையில் எழுந்து அமர்ந்தார். நானும் அம்மாவும், இப்போதைய நிலைக்கு அப்பா வீட்டிலேயே இருக்க வேண்டும் என விரும்பினோம். ஆனால் என்ன செய்வது, அப்பா சுத்தம் செய்து கூலி பெற்றால் தவிர எங்களுக்கு இன்று உணவில்லை. ஊரடங்கு நேரத்தில் யாரிடமும் கடனும் கேட்க முடியாது என்று அம்மா அடிக்கடி புலம்பிக் கொண்டு இருப்பார், இந்நிலையில் கடனும் வாங்க முடியாது. வேறு வழியின்றி அம்மா அரை மனதுடன் அப்பாவை வேலைக்கு கிளப்பினார்.
தட்டுத்தடுமாறி அப்பா எழுந்து நிற்கும் போது சட்டென்று எனக்கு தோன்றியது, இன்று ஒருநாள் அப்பாவிற்கு பதிலாக நான் வேலைக்கு செல்லலாமே என்று எண்ணி, உடனே அவரிடம் கேட்டேன். அவர் மனமுடைந்த கோப தொனியில், “டேய்! நீயெல்லா அத பத்தி யோசிக்கவே கூடாது! படிக்கிற வேலைய மட்டும் பாரு!” என்று அதட்டினார். என் அம்மாவும் அதற்கு ஆற்றல் ஏற்றும்படியாக, “அதெல்லா உனக்கு வேணாம் பா!” என்ற கலங்கிய குரலில் கூறினார். ஆனாலும் சற்று உறுதியுடன், “அப்பா! இன்னைக்கு மட்டும் தானே, உங்களுக்கு ரொம்ப உடம்பு சரியில்லயே! நா அவ்வளோ வேல செய்ய மாட்ட, அனுப்பு பா!” என்று நம்பிக்கை கூறினேன். வெகு நேர பேச்சுக்கு பிறகு, இருவரும் என்னை அனுப்ப அனுமதித்தார்கள் வருத்தத்துடன்.
அப்பா உள்ளிருந்தபடியே, “குமாரு! கான்ட்ராக்டர் கிட்ட சொல்லிட்டு என் பையன கூட்டிட்டு போடா! எனக்கு உடம்பு சரியில்ல!” என்றார். உடனே, “அண்ணா, சின்ன பையன்னா! ஸ்கூல் போற பையன போய்…..!” என்று இழுத்து பேசினார் குமார் அண்ணா. நான் சற்று ஆர்வமுடன் குறுக்கிட்டு, “நானும் வர்றேன் அண்ணா, ஸ்கூல் லீவு வீட்ல சும்மா தா இருக்க!” என்றேன். பக்கத்தில் நின்றபடி என்னை மேலிருந்து கீழ் பார்த்தவாறு, “பெரிய பையனா தா தெரியிறான், இன்னைக்கு கூலி வேணுமே! கூட்டிட்டு போலாம்!” என்றார் காளி அண்ணா. மூவரும் வேலைக்கு புறப்பட்டோம்.
நான் இதுவரை இதுபோன்ற வேலைகளை செய்ததில்லை, ஆனால் செய்வோரை பார்த்திருக்கிறேன். என் அப்பா சொல்லும் போது பலமுறை கேட்டும் இருக்கிறேன். கழிவுநீர் சுத்தம் செய்வது அத்தனை கடினமா என்ன, குப்பைகளை அள்ளி போட வேண்டும் அவ்வளவுதானே என்று எனக்கு நானே நினைத்து கொண்டு சென்றேன். வரிசையாக இரண்டு மூன்று பேராக வேலைப்பார்த்து கொண்டிருந்தனர். உள்ளே ஒருவர் இறங்கி குப்பைகளை அள்ளி வெளியில் இருப்பவரிடம் கொடுத்தார், வெளியே இருப்பவர் அதனை சேர்த்து சுத்தம் செய்தார். இவ்வாறு மாறி மாறி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அனைவரும் தாங்கள் அணிந்திருந்த உடைகளை கழற்றி விட்டு, சாக்கடை அள்ள பிரத்யேகமாக குறிக்கப்பட்ட கால் டவுசர்களை அணிந்து கொண்டு உடல் எங்கும் ஈரமான நிலையிலேயே நாள் முழுதும் வேலை செய்யவேண்டும். சாக்கடைக்குள் இறங்கும் போதும் குப்பைகளை வெளியேற்றும் போதும் யாரும் மூக்கையோ, வாயையோ மூடிக்கொள்ள முடியாது. ஆனால் எங்களை கடந்து செல்லும் ஒவ்வொருவரும் மூக்கையும் வாயையும் மூடிக் கொள்ள மறக்கவே இல்லை. அதனை பார்க்கும் போது தான் நாங்கள் செய்யும் தொழில் எத்தனை துர்நாற்றம் நிறைந்தது என்று எங்களால் ஆழ்ந்து உணரமுடிந்தது. ஆம், நாங்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் தொட தகாதவர்கள், கடினமான வேலை, கடுமையான நிலை என கவலைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இருக்கட்டும், என்னை போன்ற சாக்கடை அள்ளுவோரின் குடும்பங்களுக்கு தேவையானதெல்லாம் அன்றைய நாளின் உணவுக்கான கூலி மட்டுமே, அதற்கு தான் இத்தனை கொடுமையான சகிப்புகளையும் தாங்கி கொண்டு இருக்கிறோம் என்று எனக்கு நானே சலித்து கொண்டேன்.
இதற்கிடையில் குமார் அண்ணாவும் காளி அண்ணாவும் உடைகளை மாற்றி கொண்டு தயாராகினர். நானும் உடை மாற்ற முற்பட்ட போது இருவரும் என்னை தடுத்து நிறுத்தி, “வேணா டா தம்பி! நீ ஒருபக்கமா சும்மா நில்லு, நாங்க பாத்துக்குறோம்!” என்றார் குமார் அண்ணா. நான் சாக்கடைக்கு அருகில் ஒரு ஓரத்தில் நின்று கொண்டேன். இருவரும் ஒருவர் மாறி ஒருவராக நீண்ட நேரமாக கழிவுகளை சுத்தம் செய்தனர், சிறிது நேரம் சென்றதும், “தம்பி! போய் மூனு பேருக்கும் டீ வாங்கிட்டு வா டா!” என்றபடி கையில் சில்லறை கொடுத்து அனுப்பினார் காளி அண்ணா.
பக்கத்து தெரு முனையில் இருந்த ஒரு கடையில் டீ வாங்கி கொண்டு திரும்பினேன். நாங்கள் இருந்த இடத்தில் திடீரென சேர்ந்த கூட்டத்தின் சலசலப்பு. நான் நின்றிருந்த அதே இடம் தான், அவசர அவசரமாக அனைவரும் அசைத்தபடி இருந்தனர். அதிர்ச்சிகள் நிறைந்த பேச்சு சத்தங்கள், அலறலும் கூட கேட்டது எனக்கு, அருகில் செல்ல செல்ல அதிகமானது என் இதய துடிப்பு, அச்சம் என் ஆழ் மனது வரை பரவி கொண்டிருந்தது, என் முகம் முழுதும் அச்சத்தில் நிறைந்து போனது. கண்கள் கலங்கிய நிலையில் பதற்றம் பெருக பெருக அருகில் சென்று பார்த்தேன், குமார் அண்ணாவை சாக்கடை குழிக்குள் இருந்து இருவர் வெளியேற்றினர். காளி அண்ணா தலையில் அடித்து கொண்டு புலம்பிக் கொண்டிருந்தார். சாக்கடைக்குள் இறங்கிய குமார் அண்ணா விஷ வாயுவினால் மூச்சு திணறி மயங்கி கிடந்தார். இப்போது மூச்சற்ற நிலையில் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார், காளி அண்ணாவும் அவருடன் ஏறிச் சென்றார். பதற்றத்தில் என்னை அவர்கள் மறந்து விட்டனர். நடப்பதறியாத நிலையிலும், அச்ச நடுக்கத்துடனும் நின்றேன், இன்றைய கூலி கிடைக்காத காரணத்தால் வெற்று கைகளுடன் வீடு திரும்பினேன்.
நான் வீட்டிற்கு வரும் முன்பே, குமார் அண்ணா வழியிலேயே மரித்து போனார் என்ற அவல செய்தியினை அப்பா சொல்ல கேட்டு உடைந்து போய் நின்றேன். அவரின் இந்த இழப்பு மிக குறுகிய நேரத்தில் என் கண்முன்னே நடந்து முடிந்ததை எண்ணி அடக்க முடியாத அழுகை வந்தது. உடைக்கப்பட்ட என் மனதினுள் இனம் புரியாத கோபமும் குமுறலும் என்னை நிம்மதியாக இருக்க விடவில்லை. இந்நிலைக்கு யார் காரணம்? பாதுகாப்பு இல்லாமல் வேலை செய்யும் கூலி தொழிலாளர்களா? பாதுகாப்பு கொடுக்காமல் வேலையை மட்டும் உறிந்து எடுக்கும் மேல்நிலை அதிகாரிகளா? காலம் காலமாக இது போன்ற இழிவான வேலைகளுக்கு மறுப்பு கூறாமல் உழைத்து கொண்டிருக்கும் ஏழை மக்களா? பணத் தேவைக்காக மறுப்பு கூறமாட்டார்கள் என்பதற்காக, கழிவுநீர் அகற்ற எந்த மாற்று வழிமுறைகளும் செய்யாத சுயநலவாதிகளா? இன்னமும் எத்தனையோ கேள்விகள் என் மனவலியை அதிகப்படுத்தி என்னை கொன்றது போல அப்பாவுடன் நின்று கொண்டிருந்தேன்.
“நா தான் போக வேண்டியது, எனக்கு பதில் அவன் போய்ட்டா!” என்று அப்பா புலம்பியதும் நினைவுக்கு வந்தது, குமார் அண்ணா இன்று ஒருநாள் செய்த அந்த வேலை, இத்தனை நாட்களாக என் அப்பா செய்து கொண்டிருந்த அதே வேலை. குமார் அண்ணாவுக்கு நேரிட்ட அவலம் இன்று என் அப்பாவுக்கு நேர்ந்திருக்க வேண்டியது. இன்று ஒரு ஏழை மகன் தன் தகப்பனை இழப்பதற்கு பதிலாக, ஒரு ஏழை தகப்பன் தன் ஒரே மகனை இழந்து விட்டார். இத்தனையும் திரும்ப திரும்ப என்னை வேதனைக்கு தள்ளிக் கொண்டிருந்தது.
சில நாட்களுக்கு பிறகு, “மனிதனை விண்வெளிக்கு அனுப்ப ISRO மேற்கொண்ட, அடுத்த கட்ட விண்வெளி ஆராய்ச்சி வெற்றி!” என்ற செய்தியினை பக்கத்து வீட்டு டிவியில் ஒளிபரப்பாக கேட்டுக் கொண்டிருந்தேன். நாடே பெருமிதம் கொள்கிறதாம், தேசபக்தர்கள் அனைவரும் ஏதோ அவர்களே சாதனை புரிந்தவர் போன்று புகழ் பாடினார்களாம். உலக நாடுகளின் மத்தியில், விஞ்ஞான வளர்ச்சிகளை போட்டி போட்டு பேசிக் கொண்டிருக்கும் நம் நாட்டில் தான், கழிவுநீர் சுத்திகரிக்க இன்னமும் மனித உயிர்களை பயன்படுத்தி பலியாக்கி கொண்டிருக்கிறோம். இன்னும் எத்தனை உயிர்கள், எத்தனை ஏழை குடும்பங்கள், எத்தனை தான் இந்த இழி சாவுகள்? நம் சமூகத்தில் சாக்கடை இறப்புகள் பெருகிக் கொண்டே போகும் நிலையில், இன்னும் எத்தனை நாட்கள் தான் நமது விஞ்ஞான வளர்ச்சி மனிதனே இல்லாத வெற்றிடத்தில் ஆராய்ச்சி செய்யுமோ! காலி இடத்தை பற்றி சிந்திக்க எத்தனை அறிவியல் அறிஞர்கள், சமூக வளர்ச்சி பற்றிய சிந்தனை அற்ற அறிவிலிகள் அவர்கள்தான். அறிவியலும் தீண்ட மறுக்கிறது எங்கள் இழிவான நிலைமையை, அறிவியல் தீண்டாமையினால்.
இன்றைக்கும் கூட என் அப்பா கழிவுநீர் சுத்திகரிக்க தான் சென்றிருக்கிறார், எங்கள் ஒரு நாள் உணவுக்காக தன் உயிரை பணயம் வைத்து சென்றிருக்கிறார். என் மனம் முழுதும் ஒரே புலம்பல் தான், நாடு வளரட்டும் நாங்கள் மரித்து போகையில்.
(கடந்த பல வருடங்களாக கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் பணியாளர்களின் நிலை இது, நாம் அதிகம் கவனிக்க மறக்கும் சமூக பிரச்சனை)
– லூயிசா மேரி சா