சிறுகதை: 1 ‘டப்டப்’

‘டப்டப்’ ‘டப்டப்’ என்ற ஓயா சத்தம், இரைச்சலாய் இருந்தாலும், இலவசமான இசையாய் தெரிந்தது எனக்கு. வேறு ஒன்றும்  இல்லை, மழையின் துளிகள் அனுமதியின்றி என் வீட்டுக் கூரையின் ஓட்டையின் வழி தரையில் கொட்டிக் கொண்டிருந்தன. என் தனிமைக்கு துணையாக வந்த அழையா விருந்தினர். என் நினைவுக்கு மெருகு சேர்க்க வந்த இயற்கையின் கட்டாய இன்பம். இன்னும் நிற்கவில்லை ‘டப்டப்’ ‘டப்டப்’ என்ற ஒலியின் அதிர்வுகள். அவற்றின் ஒலி வேக மாறுதல்கள், மழையின் நிலையை யூகிக்க உதவின. சற்று அதிக வேகமாக கொட்டினால், மழை அதிகம் என்றும், குறைவாக ஒலி எழுப்பினால் மழை குறைந்ததென்றும் கணிக்க முடிந்தது.

இந்தமுறை சிறிது மிக அதிகமாகவே கொட்டிக்கொண்டிருந்தன. நேரம் வழக்கம் போல் காரணம் புரியாமல் கடந்து தீர்ந்தது. நானும் நினைவலைகளின் தூரத்தை சற்று அதிகமாகவே கடந்து தீர்த்தேன். ஆனால் ‘டப்டப்’ என்ற சத்தத்தின் வேகம் குறைவதாய் தோன்றவில்லை எனக்கு. சிறிது கவணித்துப் பார்த்த பின்பே கண்டேன், துளிகளின் வரத்து மிகுந்து இருந்தது. என்னதான் அடைக்கலம் கொடுத்தாலும், இப்படி அதிக அளவிலா வருவது? என் மனசிந்தனை என் ஒப்புகை இன்றி சிந்தித்துக்கொண்டிருந்தது.

சரி போகட்டும், என நினைத்துக் கொண்டு ஆழ்ந்து சிந்தித்துப் பார்தேன். என்னதான் மழைத்துளிகள் வரமாக இருந்தாலும், அவை மாடி வீடுகளை தேடிப் போவதில்லையே! பாவம், என்னைப் போன்றோர் வீடுகளை தான் தேடி வருகின்றனவே! தேடி வருபவரை தடுப்பது பண்பாட்டுக்கு அநீதி இழைப்பதல்லவா? என்னதான் மழைத்துளிகள் செல்வமாக கருதப்பட்டாலும், அவை கோபுரங்களில் பட்டு கடந்து விடுகின்றனவே தவிர, இங்குத் தங்குவதைப் போன்று அங்கு தங்கிச் செல்வதில்லையே! அடைக்கலம் நாடி வருபவரை துரத்தி அனுப்புவது நாகரீக தீங்கு அல்லவா?சிறிது நேரம் அமர்ந்துக் கொண்டு கண்களை மூடினேன், ஓய்வு எடுக்க. காரணம் கால் கைகளை நீட்டி இளைப்பாற இடம் போதாமல் போனது, இந்த மழைத்துளிகளின் குடியேற்றத்தால். நான் அமர்ந்திருக்கும் இடம் தவிர மற்ற இடங்களை மழைத்துளிகளுக்கு அடைக்கலம் அளித்து இருந்தேன். 

‘டப்’ என்ற பெருத்த ஒலி, மிக அருகில் கேட்டது. கண்களை திறந்துப் பார்த்தேன், பெரிய துளி ஒன்று நேராக என் நெற்றியின் மேல் விழுந்தது. சற்று இடைநிறுத்தத்துக்குப் பிறகு, மீண்டும் ஒன்று, அதனைத் தொடர்ந்து மற்றொன்று, மேலும் ஒன்று, அதற்குப் பின்னும் ஒன்று என நெற்றி நனைத்து, மூக்கையும் நனைத்து, முழுமுகத்தையும் நனைத்தது. என்ன செய்வது, மழைத்துளிகள் உயர்ந்த இடமிருந்து வந்தாலும், அவை செழிப்பானவரிடம் இவ்வாறு முழுமுகம் தழுவி விளையாடுவதில்லையே! பாவம், என் போன்ற ஏழை முகங்களைத் தழுவி தழுவி அன்பை வெளிப்படுத்துகின்றனவே! ஒருவர் அன்பை வெளியிடும் போது, அதனை மறுப்பது நலமாகாது அல்லவா? மீண்டும் நெற்றி நனைத்த ஈரப்பதம் கால் விரல்களையும் அதே முறைக்கொண்டு தழுவின. என்னதான் மழைத்துளிகள், வளங்கள் பல படைத்தாலும், அவை பொருள் படைத்தோர் கால்களை தழுவுவது இல்லையே! மாறாக, என் போன்ற எளியோரின் கால்களைத் தழுவுகின்றனவே! ஒருவர் நம்மிடம் பணிந்து நடக்கையில், அதனை அலச்சியம் செய்வது, மரியாதைக் குறைவாய் கருதப்படும் அல்லவா?

‘டப்டப்’ ‘டப்டப்’ இங்கும் அங்கும், மீண்டும் அங்கும் இங்கும், கதவின் ஓரத்தில், நாற்காலியின் மேல், கட்டிலின் பக்கவாட்டில், சுவற்றின் மேற்பரப்பில்,       அங்கும் இங்கும், மீண்டும் இங்கும் அங்கும், அதே ஓயா ‘டப்டப்’ ‘டப்டப்’ வெகு நேரம் சென்ற பின்பு, துளிகளின் சிதறல் வேகம் சிறிது சிறிதாய் குறைந்தது.

மழைத்துளிகளின் அழையா வருகை சிறிது சிறிதாய் நின்றது. சற்று அமைதியான சூழல், எதையோ இழந்தார் போல. சில நேரம் கழித்து, ‘டப்’ என்ற தனித்த ஒலி. மழை நின்று போனது. மீண்டும் தனிமை, மீண்டும் மன நினைவலைகளின் தாக்கங்கள், மீண்டும் கண்களை மூடி, ஓய்ந்திருந்தேன். ‘டப்’ இன்னும் ஒரு தனித்தத் துளி கடைசியாய் வந்து, என்னை தட்டியது. கண்களை திறந்துப் பார்த்து மீண்டும் மூடினேன். பொழுது விடியும் வரை!… 


படைப்பு : லூயிசா மேரி

4 thoughts on “சிறுகதை: 1 ‘டப்டப்’

பின்னூட்டமொன்றை இடுக